Wednesday, October 27, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -5

எனினும், இமாம் ஸைதின் புரட்சி 123இல் அவர் கொலை செய்யப்பட்டதோடு முடிவுற்றது. அவருக்குப் பின்னர் அவரது மகன் யஹ்யா ஹிஜ்ரி125இல் குராசானில் புரட்சியை ஆரம்பித்து அவரும் தந்தையைப் போல் கொலையுண்டார். பின்னர் அப்துல்லாஹ் இப்னு யஹ்யா தன் பெற்றோர்களின் உரிமையைக் கோரி போராட்டத்தை ஆரம்பித்தார். உமையா ஆட்சியின் இறுதிக் கலீபா மர்வான் இப்னு முஹம்மத் அனுப்பிய படைகளோடு இவர் யெமனில் மோதினார். எனினும், ஹிஜிரி 130இல் தனது பெற்றோர் போன்றே இவரும் ஷஹீதானார். அத்தோடு வேதனை மிக்க இந்த வரலாற்றுப் பக்கம் உண்மையாகவே மூடுண்டு போனது.

ஸைத் இப்னு அலி [ரழி] இமாம் அபூ ஹனீபாவின் உள்ளத்தில் பெற்றிருந்த உயர்ந்த அந்தஸ்தை மேலே விளக்கியவற்றிலிருந்து புரிந்து கொள்ளமுடியும். இமாம் ஸைதின் போராட்டத்தை இறைத்தூதர் [ஸல்] அவர்களின் பத்ர் போருடன் ஒப்பிடும் அளவுக்கு இமாம் அபூ ஹனீபா சொன்னார்கள் என ஏற்கனவே கண்டோம்.

ஸைத் இப்னு அலியின் அறிவு, ஒழுக்க, மார்க்க உணர்வு என்பவற்றை இமாம் அவர்கள் உணர்ந்து மதித்தார். ஸைதை தலைமைக்குத் தகுதிமிக்க சத்திய இமாமாகவே அபூ ஹனீபா கருதினார். போரில் பங்குகொள்ளாதவன் என்ற பெயர் தனக்கு வரக்கூடாது என்பதற்காக செல்வத்தின் மூலம் போராட்டத்திற்கு உதவவும் செய்தார். எனினும், அவரும் அவருக்குப் பின்னால் அவரது மகனும் அவருக்குப் பின்னால் அவரது பேரனும் கொல்லப்பட்டமையை இமாம் பார்க்க வேண்டியதாயிற்று. இது அவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தைக் கொடுத்தது. எனவே நடந்த இவ்வநியாயங்கள் குறித்து அவரது நாவு பேசியது. கோபங்கொண்ட அறிஞர்களது நாவுகள் கொடுவாள் செய்யாதவற்றையும் செய்யும். அரசனின் வாளைவிட நாவின் தாக்குதல் மிகப்பலம் வாய்ந்தது.

இமாம் அபூ ஹனீபாவின் நடத்தை அவர் கொள்கை ரீதியாக இப்பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்கு உடன்பாடாக உள்ளது. இமாம் ஸைத் கூபாவில் இருந்து புரட்சியை ஆரம்பித்தார். கூபா மக்களின் மனோநிலையையும் அவர்கள் அலி [ரழி] அவர்களோடு நடந்து கொண்ட முறையையும் இடைநடுவே ஹுஸைன் [ரழி] அவர்களைக் கைவிட்டமையையும் இமாம் அபூஹனீபா நன்கறிந்திருந்தார்.

இமாம் ஸைத் ஆரம்பித்திருந்த இயக்கம் கூபாவில் மட்டுமே பரவியிருந்தது. நன்கு பலம் பெறும் அளவு வேறு பகுதிகளுக்கு அது பரவியிருக்கவில்லை. இயக்கத்தைத் துவங்கி ஆறு மாதங்கள் மட்டுமே சென்றிருந்தது. இக்காலப் பிரிவு பரவலுக்கோ இயக்க முதிர்ச்சிக்கோ போதுமானதல்ல. இக்காரணங்களால்தான் பல அறிஞர்களும் இமாம் ஸைதை எச்சரித்தார்கள். போராட்டத்தை துவங்குவதையும் தடுக்க முயன்றார்கள். இவற்றையெல்லாம் கண்ட இமாம் அபூ ஹனீபா இப்புரட்சியின் வெற்றி குறித்து நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

அடுத்தபோராட்ட முயற்சியை "நப்ஸ் ஜகிய்யா" என அழைக்கப்பட்ட முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்வும் அவரது சகோதரர் இப்றாஹீமும் ஆரம்பித்தனர். இவர்கள் ஹுஸைன் [ரழி] அவர்களின் பிள்ளைகளாவர். இப்போராட்டம் ஹிஜ்ரி 145இல் நடைபெற்றது. அப்போது இமாம் அபூ ஹனீபா சமூகத்தில் பெரும் செல்வாக்கும் உயர்ந்த அந்தஸ்தும் பெற்றிருந்தார்.

இம்முறை இமாம் அபூ ஹனீபாவின் நிலைப்பாடு முன்பை விட முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருந்தது. அபூஹனீபா இம்முறை இந்த இயக்கத்திற்குப் பகிரங்கமாகவே உதவினார். தமது வகுப்புகளில் தாம் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகவே பேசினார். கலீபா மன்சூரின் தளபதிகள் சிலரை நப்ஸ் ஜகிய்யாவோடு போராடச் செல்வதை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இமாமின் செல்வாக்கு சென்றது. அப்போது கலீபா மன்சூர் கூபாவில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இமாம் அபூ ஹனீபாவின் மாணவர்கள் தாம் அனைவருமே கைது செய்யப்பட்டு விடுவோமோ என்று கூடப் பயந்தார்கள்.இறைவன் நாடினால் வளரும்....நூலாசிரியர் பற்றி... | முன்னுரை | பதிப்புரை | முந்தைய பகுதி

Tuesday, October 19, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -4

இமாம் அபூ ஹனீபாவைப் பொறுத்தவரையில் அவர் இரு ஆட்சிகளைக் கண்டார். உமையா ஆட்சியின் ஆரம்ப பலமிக்க காலப்பிரிவிலும் அது பலவீனமுற்று வீழ்ச்சியடைந்த காலப்பிரிவிலும் அவர் வாழ்ந்தார். அப்பாஸீய அரசை அதன் தோற்ற காலப்பிரிவிலும் சிறு சிறு இராச்சியப் பிரிவுகளாகப்  பரவி வருகின்ற போதும் கண்டார். பின்னர் உமையாக்களுடன் போராடி அவர்களிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் மீது அதிகாரம் செலுத்தியும், ஆசையூட்டியும், பயமுறுத்தியும் அவர்களைப் பணியவைக்கும் போதும் கண்டார். இவை அனைத்தையும் கண்ட இமாம் அபூ ஹனீபா அதனால் பாதிப்புறவும் செய்தார். எனினும், உமையாக்களுக்கு எதிரான புரட்சியாளர்களோடு அவரும் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

ஸைத் இப்னு அலி ஜைனுல் ஆபிதீன் [ரழி], உமையா கலீபா ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்கிற்கு எதிராக ஹிஜ்ரி 121இல் ஆயுதப்புரட்சி ஒன்றை மேற்கொண்டபோது இமாம் அபூ ஹனீபா, "இறை தூதர் [ஸல்] அவர்கள் பத்ர் யுத்தத்திற்குப்ப் புறப்பட்டது போன்றே இவருடைய புறப்பாடும் உள்ளது" என்று கூறியதாக வரலாற்றுப் பதிவு இருக்கின்றது. அப்போது அபு ஹனீபாவிடம், "அவ்வாறாயின் நீங்கள் ஏன் போரில் கலந்து கொள்ளாது பின் தங்குகிறீர்கள்?" என வினவப்பட்டது. இதற்கு இமாம், "என்னிடம் மக்கள் அமானிதமாகத் தந்த பொருட்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறு இப்னு அபீ லைலாவிடம் கேட்டேன். அவர் ஏற்கவில்லை. அந்நிலையில் நான் யுத்தத்தில் இறந்தால் அநியாயம் இழைத்தவனாக மரணிக்க வருமோ எனப் பயப்படுகின்றேன்" என்றார். அத்தோடு இமாம் அபூ ஹனீபா தான் போராட வராமைக்குக் கீழ்வருமாறு நியாயம் கூறியதாகவும் வரலாற்றுப் பதிவு உண்டு:

"மக்கள் அவரது தந்தையை இடைநடுவே கைவிட்டது போல் இவரையும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருப்பின் அவரோடு நான் போராடச் சென்றிருப்பேன். ஏனெனில், அவர் சத்தியத்தின் அடிப்படையில் எழுந்த இமாம். நான் நேரடிப் போரில் கலந்து கொள்ளாவிட்டாலும் செல்வத்தால் அவருக்கு உதவுகிறேன்." இந்தவகையில் பத்தாயிரம் திர்ஹம்களையும் இமாம் அபூ ஹனீபா அனுப்பிவைத்தார். தான் அனுப்பிய நபரைப் பார்த்து இமாம் ஜைனுல் ஆபிதீனிடம் தான் வராமைக்கான நியாயங்களை விளக்கிச் சொல்லுமாறும் கூறினார்.

இந்தவகையில் இமாம் அபூ ஹனீபா உமையா ஆட்சிக்கெதிராக புரட்சி செய்வதை ஷரீஅத் ரீதியாக ஆகுமானது எனக் கண்டார் என்பது தெளிவாகின்றது. அவர் முஜாஹித்களோடு வாள்தூக்கிப் போராடவும் விரும்பியுள்ளார் என்பதும் தெளிவு. எனினும், விளைவு வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை.
                      
ஜைனுல்ஆபிதீனின் ஆயுதப் போராட்டத்திற்குப் போதுமான ஆதரவும் நல்ல விளைவைத் தரக் கூடிய பலமும், அவரது சிந்தனையை ஏற்றுப் பாதுகாக்கும் உள்ளங்களும் இல்லாவிட்டாலும், அது சத்தியத்தின் செயற்பாடே என்ற கருத்தை இமாம் கொண்டிருந்தார் என்பதும் இங்கு தெளிவாகின்றது. இந்த வகையில் போராட்டத்தின் பலவீனமான இந்நிலையிலும் அதனைத் தடுக்கும் ஒருவராக அவர் இருக்க விரும்பவில்லை. எனவேதான் தமது ஆதரவைக் காட்ட பெரும் தொகைப் பணத்தைக் கொடுத்துதவினார். செல்வம் ஒரு முக்கிய சக்தி என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் நாடினால் வளரும்....

நூலாசிரியர் பற்றி... | முன்னுரை | பதிப்புரை | முந்தைய பகுதி

Monday, October 18, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -3

01.இமாம் அபூஹனீபாவும் சமூக மாற்றமும்
                             
கிலாபத்தோடு முஸ்லிம்கள் கொண்டிருந்த பற்று ஓர் இலட்சியவாத மாதிரியோடு தொடர்புபட்டிருந்தது. நேர்வழி சென்ற கிலாபத் அமைப்பையே[கிலாபா ராஷிதா] இங்கு குறிப்பிடுகிறோம். குறிப்பாக அவ்வுன்னத கிலாபத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும் அதனை தம் கண் முன்னே கண்டவர்களைப் பொறுத்தவரையில் இது தெளிவான உண்மையாக இருந்தது.
                             
பின்னால் வந்த அதிகாரப் பற்று நிறைந்த முடியாட்சி முறைகளையோ அல்லது சர்வாதிகாரப் போக்குக் கொண்ட ஆட்சி அமைப்புக்களையோ கண்டபோது இவர்களுக்கு கிலாபத் மீது கொண்ட பற்று அதிகரித்தது. கடும் கசப்புணர்வும் அவர்களைப் பீடித்தது. முன்பிருந்த உன்னத நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்று அவர்கள் மிகுந்த அவாவுற்றனர். இந்த நிலைப்பாட்டிற்குள் தான் தங்கள் அவாவை சாதிக்க ஒன்றன் பின் ஒன்றாக பல இயக்கங்கள் தோன்றின. ஆனால், அவை அனைத்தும் தோல்வி கண்டன. ஏனெனில், அவ்வியக்கங்களை வழிநடத்தியோர் கருதியதைவிட அன்றைய நிலைமை மிக கடுமையாக இருந்தது. சமூக மாற்றங்கள் குறித்த அல்லாஹ்வின் நியதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையும் காணப்பட்டது.
                             
"ஒரு சமூகத்திலுள்ள மனிதர்கள் தம் உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றாத வரையில் அல்லாஹ் அச்சமூகத்தில் உள்ள நிலைகளை மாற்றுவதில்லை" [அர்ரஃத்:11].

உமையா, அப்பாஸிய காலப் பிரிவின்போது தோன்றிய சில ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை சீராகவும் அருள் நிறைந்ததாகவும் இருந்தது உண்மையே. எனினும், முஸ்லிம்கள் இலகுவாக கிலாபா ராஷிதாவுக்கு மீண்டுவிட முடியும் என நினைத்து விட்டார்கள். இலட்சிய மாதிரியைக் காட்டாத-ஆயினும் ஆழ வேருன்றிப் பதித்துவிட்ட பலமிக்க அந்த ஆட்சிகளை அகற்ற மிகப் பாரிய உழைப்பும் பெரும் தியாகங்களும் தேவைப்படும் என்பதை அவர்கள் உணரவில்லை. பாதுகாப்புக்குப் பெரும் படைப் பிரிவுகளையும் பாரிய செல்வங்களையும் கொண்டியங்கி வரும் அவ்வாட்சிகளை வெற்று ஆசைகளாலும் இலட்சியக் கனவுகளாலும் சிதறுண்ட சில சிறிய முயற்சிகளாலும் அகற்றிவிடல் சாத்தியமானதல்ல.
                        
இந்த நிலைகளிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர பாரியளவு உயிரழிவும் சீர்கேடுகளும் தவிர்க்க முடியாதது என இஸ்லாமிய சட்ட நிபுணர்களும், அறிஞர்களும் கண்டனர். எனவே, அதனைத் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம் என்ற வகையில் வெறுப்புடனும் ஏற்க வேண்டியதாயிற்று.
                              
பாரியளவு இரத்தம் சிந்தாமலும் பெரும் குழப்ப நிலைகளுக்கு வழி வகுக்காமலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க பாரிய கூட்டமைப்பு இல்லா நிலையில் புரட்சி செய்வதால் வரும் தீமைகள் நன்மைகளை விட பாரியவையாக இருக்கும் என அந்த சட்ட நிபுணர்களும் அறிஞர்களும் கண்டனர். எனவே, அவர்கள் உள்ளிருந்தே சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட முயன்றனர். இந்த வகையில் அவ்வறிஞர்களில் சிலருக்கு ஆட்சியாளர்களோடு நெருங்கிய தொடர்பிருந்தது. அவர்கள் அத்தொடர்பை ஆட்சியாளர்களுக்கு உபதேசிக்கப் பயன்படுத்தினர். ஏனெனில், அவ்வாட்சியாளர்கள் மூலம் சில அநியாயங்களும் சில வரம்பு மீறல்களும் நிகழ்ந்தபோதிலும் இஸ்லாமிய சட்டங்கள் மூலம் ஆட்சி புரியும் முஸ்லிம்களாகவே அவர்கள் இருந்தனர்.

உதாரணமாக, இமாம் ஸுஹ்ரி உமையாக்களுடன் சத்தியத்தில் நெகிழ்ந்து கொடுக்காத வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்தார். எனினும், இமாம் ஸயித் இப்னு அல் முஸய்யப், இப்னு அபீதிஃப் போன்றவர்களது ஆட்சியாளர்களைப் பொருத்தவரையிலான நிலைப்பாடு சத்தியத்தைப் பொறுத்தவரையில் பலமாகவும் மிகுந்த உறுதி கொண்டதாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் நாடினால் வளரும்....

Sunday, October 17, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -2

பதிப்புரை

மாற்றம் ஒரு மாறாத சமூக விதி என்பர். இயங்கிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு சமூகத்தினதும் உயிர்த் துடிப்பு மாற்றத்தின் போக்குகளிலேயே தங்கியிருக்கிறது. சமூக அரசியல் போக்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தனி மனிதனையும் ஆழமாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்புகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைய முடியும். இந்த வகையில் சமூக - அரசியல் மாற்றம் பற்றிய பிரக்ஞை, அறிவு, தெளிவு என்பன அனைவருக்கும் அவசியமாய் உள்ளன.

சமூக அரசியல் மாற்றம் பற்றிய மிகத் தெளிவான கொள்கை ஓன்றின் அடிப்படையிலேயே முன்னோக்கிய சமுக அரசியல் மாற்றத்தை அறுவடை செய்து கொள்ளலாம். இச்சிந்தனையின் அடுத்த கட்ட நகர்வாகவே சமூக அரசியல் செயற்பாடு அமைகிறது.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தைச் சரியான திசையில் வழிப்படுத்த இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடியாக உருவான இமாம்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் தொடர்ச்சியில்  நவீன காலத்தைப் பொருத்திப் பார்க்கும் ஒரு பெறுமதியான நூலாக இது விளங்குகிறது.

இதனை இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்காக உழைக்கும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும் - அதனைச் செயற்பாடுகளாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த அவா எமக்குள்ளது.

இரத்தம் சிந்துவதே விதி என்றாகிப் போன இந்தக் காலத்தில், இந்த நூல் அதனைக் குறைப்பதற்குப் பங்களித்தால் எமக்கு ஆறுதலாக இருக்கும். சமூக மாற்றம் அர்த்தம் செறிந்ததாக காலப் பொருத்தமுடையதாக அமைய வேண்டும் என்பதே எமது அடிப்படை எதிர்பார்ப்பாகும்.

முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்கள் அழிவின் முகவர்களாக அல்லாது, ஆக்கத்தின் தூதுவர்களாக இஸ்லாத்தின் செய்தியை முன் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் அயராது உழைப்போமாக. அந்த முயற்சியில் இந்த நூலும் இதன் சிந்தனைகளும் ஒரு சிறு பங்கையேனும் வழங்கினால் அது எமக்கு மிகுந்த திருப்தியைத் தரும்.

இந்நூலை எழுதிய ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் தனது அருளைப் பொழிவானாக. இதனை மொழி பெயர்க்க அனுமதித்த அவருக்கும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து தந்த அன்புக்குரிய உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் அவர்களுக்கும் மீள்பார்வை ஊடக மையத்தின் பணியாளர்களுக்கும் எமது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பதிப்பாசியர்
மீள்பார்வை ஊடக மையம்
08.02.2008 
                     


இறைவன் நாடினால் வளரும்....

Saturday, October 16, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -1

முன்னுரை 

அல்லாஹ் இறக்கிய இறுதி இறைத் தூது ஓர் உன்னதமான சமூகத்தை அமைத்தது. தத்துவஞானிகளும், சிந்தனையாளர்களும் கனவு கண்ட அந்த இலட்சிய சமூகம் அறபுப் பாலைவெளியில் தோன்றியது. மிகக் குறுகிய காலத்தில் அது சாம்ராஜ்யமொன்றை அமைத்தது. வெறும் பெளதீக எல்லையை மட்டுமல்ல, வெற்றி கொண்ட பெருந்தொகை மக்களையும் தன் கொள்கையினுள் அது ஈர்த்தது. இப்படித்தான் நாடுகளும் சமூகங்களும் அதனுள் ஈர்க்கப்பட்டன.

14 நூற்றாண்டுகளுக்குப் பின்னே நின்று அந்தச் சமூகத்தைப் பற்றிப் படிக்கும்போதே எமதுள்ளம் அதனால் ஆட்கொள்ளப்பபடுகிறது. மீண்டும் அப்படியொரு சமூகம் தோன்ற என்ன வழி? என ஏங்குகிறது.

இந்நிலையில் மிக ஆரம்ப காலத்திலேயே அந்தச் சமூகம் தன் இலட்சிய நிலையிலிருந்து சற்று சரிந்தது. அதன் ஆட்சி நிலையின் ஒரு சரிவு இது. இலட்சிய சமூகத்தினுள் வாழ்ந்து அனுபவித்த அந்த மனிதர்கள் எப்படி இதனைச் சகித்துக் கொள்வார்கள்?

இந்த மனோநிலையின் பின்னணியில்தான் இறைதூதர் [ஸல்] அவர்களின் செல்வப் பேரன் ஹுஸைன் [ரழி] அவர்கள் மிகச் சொற்ப தொகையினருடன் கர்பலாவில் மோதினார்கள். அந்தப் போரை யுத்த தந்திரோபாயங்கள் என்ற பின்னணியிலிருந்து நோக்குவது பொருத்தமற்றது. கருத்து, மன உணர்வுகளின் பாரத்திலிருந்தே அதை நோக்க வேண்டும்.

சிந்தனைக்காகவும் இலட்சியத்திற்காகவும் போரிடுபவர்கள் யுத்த தந்திரோபாயங்களை விட இலட்சியத்திற்கான தியாகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இது அவர்களின் பலவீனமா அல்லது பலமா என்பது ஒரு புறம் இருக்க, தியாகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பாரியது என்பதில் சந்தேகமில்லை. 

இப்படி அந்த இலட்சிய சமுகத்தை நோக்கிய போராட்டங்களும் அதற்கான முயற்சிகளும் தொடர்பான இந்த ஆய்வு, அந்தப் போராட்டங்களையும் முயற்சிகளையும் பற்றிய ஆழ்ந்த விளக்கத்தைத் தருகிறது. குறிப்பாக நான்கு பெரும் இமாம்களின் அது பற்றிய முயற்சிகளையும் போராட்டங்களையும் ஆய்கிறது. பின்னர் நவீன கால சமூக மாற்றப் போராட்டங்களையும் அதனோடு தொடர்பு படுத்தி ஆய்கிறது. குறிப்பாக வன்முறை அடிப்படையிலான போராட்டத்தையும், வன்முறை தவிர்ந்த போராட்டத்தையும் அழுத்தி ஆராய்கிறது.                                                                                             .                             இந்த ஆய்வை வாசிக்கும் போது நாம் நான்கு இமாம்களின் இன்னொரு பக்கத்தைப் புரிந்து கொள்கிறோம். சட்ட அறிஞர்களாக மட்டுமல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்திலும் அவர்கள் அர்த்தம் பொதிந்த ஆழிய சிந்தனைகளை முன்வைத்துள்ளமையையும் புரிகிறோம். இலட்சியவாதப் போக்கில் மட்டுமல்ல யதார்த்தபூர்வமாக அவர்கள் எப்படி இப்பிரச்சினையை அணுகியுள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறோம். 

இந்நூலை எழுதிய கலாநிதி ஷெய்க் நாதிர் நூரி ஆழ்ந்த இஸ்லாமிய ஆய்வாளர். சமூக மாற்றத் தளத்தில் நிற்கும் ஒரு போராளியும் கூட. எனவே, அறிவும் ஆய்வும் கள அனுபவமும் இங்கே சந்தித்துக் கொள்கின்றன; பின்னணியாக அமைகின்றன. என்னால் முடிந்தளவு முழுமையாக மூல நூலை மொழிபெயர்த்துள்ளேன். கருத்துப்போக்கு சிதையாமல் பார்த்துக் கொண்டுள்ளேன்.

நூல் எழுதப்பட்டுள்ள ஒழுங்கிலிருந்து பார்க்கும் போது தமிழ் உலகுக்கு இது ஒரு புதிய நூல். சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு நல்லதொரு சிந்தனை அடித்தளமொன்றை இந்த நூல் தரும்.

இனி இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக நிற்கும் நாம் இப்பிரச்சினையை எப்படிப் பார்க்க வேண்டும்? இஸ்லாம் உருவாக்கிய அந்த இலட்சிய சமூகத்தை நோக்கிய எம் கனவுகள் எப்படி அமைய வேண்டும்? யதார்த்தபூர்வமாக அதனை நோக்கி எப்படி நாம் அடியெடுத்து வைக்க வேண்டும்? அதற்கான திட்டங்களும் தந்திரோபாயங்களும் என்ன? இவை பற்றி சிந்திக்க இந்நூல் எம்மைத் தூண்ட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
நூலாசிரியர் மதிப்புக்குரிய அறிஞர் ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. மென்மேலும் இத்தகைய ஆய்வுகளை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.

கீழைத்தேய சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை நன்கறிந்த அறிஞர் ஒருவரின் நூல் இது. அந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் அவருக்கு நன்றி செலுத்துகிறது. இந்நூலை மொழிபெயர்க்க அனுமதித்த ஷெய்க் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல் வெளிவர உதவியாக இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.
  
இறையருளையாசிக்கும்
எம்.ஏ.எம்.மன்ஸூர்
08.02.2008
இறைவன் நாடினால் வளரும்....
 

Friday, October 15, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்!

நூலாசிரியர் பற்றி...

நாதிர் அப்துல் அஸிஸ் முஹம்மது அல்-நூரீஎன்ற முழுப்பெயர் கொண்ட இவர் 1954-ம் ஆண்டு குவைத் நாட்டில் பிறந்தார்.1977-இல் குவைத் பல்கலைக்கழகத்தில் சமூக நலத் துறையில் கலைமாமணிப் பட்டத்தையும்,இஸ்லாமியக் கற்கைகள் துறையில் முதுமாமணி மற்றும் கலாநிதிப் பட்டங்களையும் பெற்றார்.

இஸ்லாமிய உலகில் பிரபலமான சமூக செயற்பாட்டாளராகவும் புத்திஜீவியாகவும் மதிக்கபடும் இவர், சமூக நல செயற்பாட்டில் மிக நீண்ட அனுபவங்கள் கொண்டவர் என்பது மட்டுமன்றி, பல சமூக செயற்பாட்டு நிறுவனங்களின் பிதாமகனாகவும் உள்ளார்.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இவர் ஆற்றிவந்துள்ள பணிகளுள் சில:

*குவைத் வணிகக் கல்லூரி மற்றும் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியர் [1977-1979]

* குவைத் அரசின் வக்ஃபு மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் இஸ்லாமிய சட்டக் கலைக் களஞ்சிய ஆய்வாளர் [1981-1982].

* வக்ஃபு மற்றும் இஸ்லாமிய நலன்புரி அமைப்பின் ஸ்தாபகராக இருந்ததுடன் அதில் பல்வேறு பதவிகளையும் வகித்தமை [1992-1995].

* பலஸ்தீன நலன்புரி அமைப்பின் தலைவர் [1988முதல் இன்றுவரை].

* "லஜ்னது அல் தஃரீஃப் பி அல் இஸ்லாம்" எனும் மாற்று மதத்தவர்களுக்கான இஸ்லாமிய பிரச்சார நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், செயலாளர் நாயகமாகவும், நிர்வாக சபைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை இன்று வரை வகித்து வருகின்றமை.

* "ஜம் இய்யது அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்-நூரீ அல் கைரிய்யா" என்ற சமூக நலன்புரி அமைப்பின் செயலாளர் நாயகம்[1981முதல் இன்றுவரை].

* "ஜம் இய்யது அல்-இஸ்லாஹ் அல்-இஜ்திமாஇ' என்ற குவைத்திலுள்ள மிகப் பிரபலமான சமூக சீர்திருத்த நிறுவனத்தின் அங்கத்தவராக இருப்பதுடன்,அதன்  'லஜ்னது அல்-தஃவா அல்-இஸ்லாமிய' முதலிய பிரிவுகளை உருவாக்குவதிலும் பங்காற்றியவர்.

இவை தவிர, ஆசிய முஸ்லிம்களுக்கான அமைப்பு, ஆப்பிரிக்க முஸ்லிம்களுக்கான அமைப்பு, குவைத் பொது நிவாரண அமைப்பு, இஸ்லாமிய முதுசங்களைப் பாதுகாப்பதற்கான நிறுவனம், குவைத் பத்திரிக்கையாளர் சங்கம், பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய இஸ்லாமிய கலாபீடம், பிரித்தானியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும், நிர்வாகிகளில் ஒருவராகவும் பல பதவிகளை இன்றுவரை இவர் வகித்து வருகிறார்.

வளைகுடாப் பிராந்தியத்திலும் இஸ்லாமிய உலகிலும் சிலமுக்கியமான நலன்புரிச் சங்கங்களை உருவாக்குவதிலும் இவர் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார். உலகிலுள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் பற்றிய ஆழ்ந்த பரிச்சயமும் இவருக்குண்டு.

இவையனைத்துக்கும் அப்பால் மிகச்சிறந்த இஸ்லாமிய அழைப்பாளராக விளங்கும் இவர், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இஸ்லாமியப் பிரச்சார முயற்சிகளோடு நீண்டகாலத்தொடர்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறைவன் நாடினால் வளரும்....

Wednesday, March 18, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 11.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9, பாகம் 10

பணமா?

ஆசிரியர்: அடுத்து ஒரு கேள்வி. நான் கேட்கிறேன் என்பதற்காக யாரும் சொல்ல வேண்டாம். விஞ்ஞானபூர்வமான உண்மையை மக்களுக்குக் காட்டணும்கிறதற்காக கேக்கறேன். எப்படி ஆப்பரேஷன் தியேட்டரில் போய் நிர்வாணமாக சிகிச்சை செய்யறமோ அதுமாதிரி உண்மையை தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மதம் மாறுவதற்கு இங்கே யாராவது ஒருத்தராவது பணம் வாங்கியிருக்கிறாங்களா?

ஒவ்வொருவர் சம்மதத்தோடும்....

(உமரும் கூட இருப்பவர்களும் ஒட்டு மொத்தமாக இல்லை என்று சொல்கிறார்கள்)

உமர்: நாங்க யாரும் பணம் வாங்கவும் இல்லை. கொடுக்கவும் இல்லை. மதம் மாறணும்கிற எண்ணம் வந்த பிறகு நாங்க ஒவ்வொரு வீடா போயி கேட்டோம் - கேட்ட பிறகு ஒட்டு மொத்தமா மதம் மாறணும்கிற முடிவுக்கு வந்து ஒரு பேப்பர்ல எழுதினோம். நாங்க யாருடைய தூண்டுதலும் இல்லாம நாங்களா மனமுவந்து இந்து மதத்திலிருந்தும் இந்து மதத்திலிருக்கிற 'பள்ளர்' என்ற பிரிவிலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கித் தான் செய்தோம். இந்தப் புரளியெல்லாம் கிளப்பி விட்டது, இங்கே ஆர்.எஸ்.எஸ். ஒரு அய்யன் முளைச்சிருகிறான்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்

ஆசிரியர்: அவரு பேரு என்னங்க?

உமர்: அனந்தராமசேஷன்னு ஒரு அய்யன். அவரு தான் எல்லா புரளியும் கிளப்பி விடுகிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைப் போட்டு ஒருத்தரோடொருத்தர் சண்டையைக் கூட்டறதே அந்த ஆள்தாங்க. ஊரை அடிச்சு போட்டுருவோம்னு மிரட்டறதும் அந்த ஆள்தாங்க.

ஆசிரியர்: அவங்க வேலையே அது தானே. பிரிட்டிஷ் காலத்திலருந்து நாம பார்த்துக்கிட்டு தானே வர்றோம்.

உமர்: அவங்க பாலிசியே 'பிரிட்டிஷ் பாலிசிதானே.

இறைவன் நாடினால் வளரும்....