Tuesday, October 19, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -4

இமாம் அபூ ஹனீபாவைப் பொறுத்தவரையில் அவர் இரு ஆட்சிகளைக் கண்டார். உமையா ஆட்சியின் ஆரம்ப பலமிக்க காலப்பிரிவிலும் அது பலவீனமுற்று வீழ்ச்சியடைந்த காலப்பிரிவிலும் அவர் வாழ்ந்தார். அப்பாஸீய அரசை அதன் தோற்ற காலப்பிரிவிலும் சிறு சிறு இராச்சியப் பிரிவுகளாகப்  பரவி வருகின்ற போதும் கண்டார். பின்னர் உமையாக்களுடன் போராடி அவர்களிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் மீது அதிகாரம் செலுத்தியும், ஆசையூட்டியும், பயமுறுத்தியும் அவர்களைப் பணியவைக்கும் போதும் கண்டார். இவை அனைத்தையும் கண்ட இமாம் அபூ ஹனீபா அதனால் பாதிப்புறவும் செய்தார். எனினும், உமையாக்களுக்கு எதிரான புரட்சியாளர்களோடு அவரும் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

ஸைத் இப்னு அலி ஜைனுல் ஆபிதீன் [ரழி], உமையா கலீபா ஹிஷாம் இப்னு அப்துல் மலிக்கிற்கு எதிராக ஹிஜ்ரி 121இல் ஆயுதப்புரட்சி ஒன்றை மேற்கொண்டபோது இமாம் அபூ ஹனீபா, "இறை தூதர் [ஸல்] அவர்கள் பத்ர் யுத்தத்திற்குப்ப் புறப்பட்டது போன்றே இவருடைய புறப்பாடும் உள்ளது" என்று கூறியதாக வரலாற்றுப் பதிவு இருக்கின்றது. அப்போது அபு ஹனீபாவிடம், "அவ்வாறாயின் நீங்கள் ஏன் போரில் கலந்து கொள்ளாது பின் தங்குகிறீர்கள்?" என வினவப்பட்டது. இதற்கு இமாம், "என்னிடம் மக்கள் அமானிதமாகத் தந்த பொருட்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறு இப்னு அபீ லைலாவிடம் கேட்டேன். அவர் ஏற்கவில்லை. அந்நிலையில் நான் யுத்தத்தில் இறந்தால் அநியாயம் இழைத்தவனாக மரணிக்க வருமோ எனப் பயப்படுகின்றேன்" என்றார். அத்தோடு இமாம் அபூ ஹனீபா தான் போராட வராமைக்குக் கீழ்வருமாறு நியாயம் கூறியதாகவும் வரலாற்றுப் பதிவு உண்டு:

"மக்கள் அவரது தந்தையை இடைநடுவே கைவிட்டது போல் இவரையும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருப்பின் அவரோடு நான் போராடச் சென்றிருப்பேன். ஏனெனில், அவர் சத்தியத்தின் அடிப்படையில் எழுந்த இமாம். நான் நேரடிப் போரில் கலந்து கொள்ளாவிட்டாலும் செல்வத்தால் அவருக்கு உதவுகிறேன்." இந்தவகையில் பத்தாயிரம் திர்ஹம்களையும் இமாம் அபூ ஹனீபா அனுப்பிவைத்தார். தான் அனுப்பிய நபரைப் பார்த்து இமாம் ஜைனுல் ஆபிதீனிடம் தான் வராமைக்கான நியாயங்களை விளக்கிச் சொல்லுமாறும் கூறினார்.

இந்தவகையில் இமாம் அபூ ஹனீபா உமையா ஆட்சிக்கெதிராக புரட்சி செய்வதை ஷரீஅத் ரீதியாக ஆகுமானது எனக் கண்டார் என்பது தெளிவாகின்றது. அவர் முஜாஹித்களோடு வாள்தூக்கிப் போராடவும் விரும்பியுள்ளார் என்பதும் தெளிவு. எனினும், விளைவு வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை.
                      
ஜைனுல்ஆபிதீனின் ஆயுதப் போராட்டத்திற்குப் போதுமான ஆதரவும் நல்ல விளைவைத் தரக் கூடிய பலமும், அவரது சிந்தனையை ஏற்றுப் பாதுகாக்கும் உள்ளங்களும் இல்லாவிட்டாலும், அது சத்தியத்தின் செயற்பாடே என்ற கருத்தை இமாம் கொண்டிருந்தார் என்பதும் இங்கு தெளிவாகின்றது. இந்த வகையில் போராட்டத்தின் பலவீனமான இந்நிலையிலும் அதனைத் தடுக்கும் ஒருவராக அவர் இருக்க விரும்பவில்லை. எனவேதான் தமது ஆதரவைக் காட்ட பெரும் தொகைப் பணத்தைக் கொடுத்துதவினார். செல்வம் ஒரு முக்கிய சக்தி என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் நாடினால் வளரும்....

நூலாசிரியர் பற்றி... | முன்னுரை | பதிப்புரை | முந்தைய பகுதி

No comments: