Sunday, October 17, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -2

பதிப்புரை

மாற்றம் ஒரு மாறாத சமூக விதி என்பர். இயங்கிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு சமூகத்தினதும் உயிர்த் துடிப்பு மாற்றத்தின் போக்குகளிலேயே தங்கியிருக்கிறது. சமூக அரசியல் போக்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தனி மனிதனையும் ஆழமாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்புகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைய முடியும். இந்த வகையில் சமூக - அரசியல் மாற்றம் பற்றிய பிரக்ஞை, அறிவு, தெளிவு என்பன அனைவருக்கும் அவசியமாய் உள்ளன.

சமூக அரசியல் மாற்றம் பற்றிய மிகத் தெளிவான கொள்கை ஓன்றின் அடிப்படையிலேயே முன்னோக்கிய சமுக அரசியல் மாற்றத்தை அறுவடை செய்து கொள்ளலாம். இச்சிந்தனையின் அடுத்த கட்ட நகர்வாகவே சமூக அரசியல் செயற்பாடு அமைகிறது.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தைச் சரியான திசையில் வழிப்படுத்த இந்நூல் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடியாக உருவான இமாம்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் தொடர்ச்சியில்  நவீன காலத்தைப் பொருத்திப் பார்க்கும் ஒரு பெறுமதியான நூலாக இது விளங்குகிறது.

இதனை இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்காக உழைக்கும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும் - அதனைச் செயற்பாடுகளாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த அவா எமக்குள்ளது.

இரத்தம் சிந்துவதே விதி என்றாகிப் போன இந்தக் காலத்தில், இந்த நூல் அதனைக் குறைப்பதற்குப் பங்களித்தால் எமக்கு ஆறுதலாக இருக்கும். சமூக மாற்றம் அர்த்தம் செறிந்ததாக காலப் பொருத்தமுடையதாக அமைய வேண்டும் என்பதே எமது அடிப்படை எதிர்பார்ப்பாகும்.

முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்கள் அழிவின் முகவர்களாக அல்லாது, ஆக்கத்தின் தூதுவர்களாக இஸ்லாத்தின் செய்தியை முன் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் அயராது உழைப்போமாக. அந்த முயற்சியில் இந்த நூலும் இதன் சிந்தனைகளும் ஒரு சிறு பங்கையேனும் வழங்கினால் அது எமக்கு மிகுந்த திருப்தியைத் தரும்.

இந்நூலை எழுதிய ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் தனது அருளைப் பொழிவானாக. இதனை மொழி பெயர்க்க அனுமதித்த அவருக்கும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து தந்த அன்புக்குரிய உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் அவர்களுக்கும் மீள்பார்வை ஊடக மையத்தின் பணியாளர்களுக்கும் எமது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பதிப்பாசியர்
மீள்பார்வை ஊடக மையம்
08.02.2008 
                     


இறைவன் நாடினால் வளரும்....

No comments: