Monday, August 08, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -10

03.இமாம் ஷாபிஈயும் சமூக மாற்றமும்.

இமாம் ஷாபிஈ அப்பாஸிய காலப் பிரிவில் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். இவ்வாண்டிலேயே இமாம் அபூஹனீபாவும் மரணித்தார். இமாம் ஷாபிஈ இமாம் மாலிக்கிடம் கற்றார். குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் இமாம் மாலிக்கிடம் கல்வி கற்பதிலேயே ஈடுபட்டிருந்தார். பின்னர் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள நஜ்ரானில் அரச தொழிலொன்றையும் செய்தார். அத்தொழில் மூலம் நீதியை நிலைநாட்டினார் என்பதோடு தனக்கு இழைக்கப்படும் அநீதிகள், தீங்குகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டார். குறைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்தவராகவும் இறைதூதர் (ஸல்) அவர்களின் வம்சாவழியைக் கொண்டவராகவும் இருந்தமையால் 'அலவி' பிரிவினரைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அப்பாஸியர் அலவி தலைவர்களையும், அவர்களது செயற்பாடுகளையும் தேடித் திரிந்து வந்தமையே இதன் பின்னணியாகும். இந்த வகையில் சூழ்ச்சியாலும் பொய் முறையீடுகளாலும் இமாம் ஷாபிஈ கைது செய்யப்பட்டு பக்தாதுக்கு அனுப்பப்பட்டார். இது ஹிஜ்ரி 184-ல் நிகழ்ந்தது.

இமாம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துன்பம் அருளாக அமைந்தது எனக் கூறக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இமாம் பாக்தாதில் இமாம் அபூஹனீபாவின் மாணவர் முஹம்மத் இப்னு ஹஸனைச் சந்தித்தார். ஏற்கனவே ஹிஜாஸ் பிரதேச சட்ட அறிவு இவரிடம் இருந்தது. இப்போது ஈராக்கிய சட்ட அறிவையும் முஹம்மத் இப்னு ஹஸனிடமிருந்து கற்றுக் கண்டார். இந்த வகையில் அறிவுசார் சட்ட அறிவும், பாரம்பரிய சட்ட அறிவும் இமாமிடம் ஒன்றிணைந்தன.

பின்னர் மீண்டும் மக்கா திரும்பினார். ஹஜ்ஜின்போது பெரும் அறிஞர்களைச் சந்தித்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களில் ஒருவர். இந்த வகையில் பல அறிஞர்களது சிந்தனைப் போக்கையும் இமாம் படித்துத் தேர்ந்தார். அதன் விளைவாக இமாம் அவர்களால் தனியானதொரு சிந்தனைப் போக்கை உருவாக்க முடிந்தது. வித்தியாசமான இருவகை சட்ட சிந்தனைப் போக்கையும் ஆழ்ந்து படித்ததன் பின்னர் மக்காவில் ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் இமாம் ஷாபிஈ தங்கி இருந்தார். அங்கு பலருடனும் கருத்துப் பரிமாறல்களையும், வாதப் பிரதிவாதங்களையும் நடாத்தினார். வித்தியாசமான பல கருத்துக்களையும், வேறுப்பட்ட சிந்தனைப் போக்குகளையும் அவற்றினூடே அவதானித்தார்.

இவ்வாறு இமாம் ஷாபிஈ நன்கு கற்றுத் தேர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்றதன் பின்னர் சட்ட ஆக்கத்திற்கான விதிகளையும், கொள்கைகளையும் வகுக்கத் துவங்கினார். பின்னர் பக்தாதுக்கு இரண்டாம் முறையாக ஹிஜ்ரி 915-ல் வந்தார். அப்போது இமாமிடம் இதுவரை காணாத தனியான சட்ட ஆய்வு முறைமை இருந்தது. பக்தாத் வந்த இமாம் கலீபா மஃமூனின் சபையில் பாரசீக செல்வாக்கு இருந்ததை அவதானித்தார். இது இஸ்லாமிய சிந்தனையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதிகளாக அக்காலத்தில் கணிக்கப்பட்ட முஃதஸிலாக்கள் கலீபாவிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். கலீபாவின் எழுத்தாளர்களாகவும், நெருங்கிய அந்தரங்கமானவர்களாகவும் இவர்களே காணப்பட்டனர். தமது கொள்கைப் போக்குடன் ஒத்து வராத அறிஞர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்களாகவும் இவர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில் அவமானப்படத்தக்க நாட்டில் நிலைக்க இமாம் ஷாபிஈ விரும்பவில்லை. தனது நம்பிக்கை குறித்து பல வாதங்களை நடத்திய பிறகே இமாம் இம்முடிவுக்கு வந்தார். இமாம் ஷாபிஈயின் கீழ்வரும் கவிதை இந்த உண்மையை விளக்குகிறது.

அவமானம் தரும் நாட்டில் மரியாதைக்குரியோர் இருப்பது
அதனை விட்டு புறப்பட முடியுமானால்
சாத்தியமற்ற ஒன்றே.


இந்த நிலையில்தான் "அல்குர்ஆன் படைக்கப்பட்டதா?" என்ற இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற பிரச்சினை தோன்றியது. சட்ட, ஹதீஸ்துறை அறிஞர்களுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. இந்நிலையில் கலீபா மஃமூன் இமாம் ஷாபிஈ அவர்களுக்கு நீதிபதிப் பதவியை அளித்தார். எனினும், இமாம் அதனை ஏற்கவில்லை. இமாமின் சிந்தனைப் போக்குக்கு இதுவே பொருத்தமானதாகும்.

இவ்வகையில் பக்தாதில் தங்கியிருப்பதும் இமாம் ஷாபிஈக்குப் பொருத்தமாக இருக்கவில்லை. அங்கிருந்து பயணப்பட வேண்டிய நிலையே உருவாகியது. பயணப்பட்டுப் போய் வாழ வசதியானதும், பொருத்தமானதுமான இடமாக இமாம் எகிப்தைக் கண்டார். அங்கு பயணப்படும் போது கீழ்வருமாறு பாடினார்கள்.

எனதுள்ளம் எகிப்து செல்ல ஆசை கொள்கிறது
அதற்கு பாலை நிலங்களையும்
பல பூமிகளையும் கடக்க வேண்டும்
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
வெற்றிக்கும் செல்வத்திற்கும்
நான் அழைக்கப்படுகிறேனா?!
அல்லது மரணக் குழியை நோக்கித்தான்
அழைக்கப்படுகிறேனா?
எனக்குத் தெரியவில்லை!


மக்களது மனப்போக்குகளை இமாம் ஷாபிஈ ஆழமாகப் புரிந்திருந்தார். புரிந்து கொள்ளும் நுண்ணிய பார்வைத் திறன் அவருக்கிருந்தது. பயணங்கள் செல்வதில் மிகுந்த விருப்பமுடையவர்களாவும் இமாம் இருந்தார். எனவே, மக்களது கொடுக்கல் வாங்கல்கள், பழக்க வழக்கங்கள் அவர்களது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியெல்லாம் இமாம் நன்கு அறிந்திருந்தார். கீழ்வரும் இமாமின் கவிதை இக்கருத்தை விளக்குகிறது.

கிழக்காகவும் மேற்காகவும்
நாடுகளெல்லாம் சுற்றித்திரிவேன்
என் தேவையைப் பெறுவேன்.
அல்லது ஊருக்குப் புதியவனாக இறப்பேன் நான் அழிந்தால்
அல்லாஹ்வே அதனைக் காப்பான் தப்பினால்
அண்மையில் நான் மீண்டு வரலாம்.


உண்மையில் பயணங்கள் ஒரு சட்ட அறிஞனுக்கு நிறைய அறிவைக் கொடுக்கக் கூடியன என்பதோடு பயணம் இயல்பாகவே பல அனுபவங்களையும் தரக் கூடியது.

இறைவன் நாடினால் வளரும்....

No comments: