முன்னுரை
அல்லாஹ் இறக்கிய இறுதி இறைத் தூது ஓர் உன்னதமான சமூகத்தை அமைத்தது. தத்துவஞானிகளும், சிந்தனையாளர்களும் கனவு கண்ட அந்த இலட்சிய சமூகம் அறபுப் பாலைவெளியில் தோன்றியது. மிகக் குறுகிய காலத்தில் அது சாம்ராஜ்யமொன்றை அமைத்தது. வெறும் பெளதீக எல்லையை மட்டுமல்ல, வெற்றி கொண்ட பெருந்தொகை மக்களையும் தன் கொள்கையினுள் அது ஈர்த்தது. இப்படித்தான் நாடுகளும் சமூகங்களும் அதனுள் ஈர்க்கப்பட்டன.
14 நூற்றாண்டுகளுக்குப் பின்னே நின்று அந்தச் சமூகத்தைப் பற்றிப் படிக்கும்போதே எமதுள்ளம் அதனால் ஆட்கொள்ளப்பபடுகிறது. மீண்டும் அப்படியொரு சமூகம் தோன்ற என்ன வழி? என ஏங்குகிறது.
இந்நிலையில் மிக ஆரம்ப காலத்திலேயே அந்தச் சமூகம் தன் இலட்சிய நிலையிலிருந்து சற்று சரிந்தது. அதன் ஆட்சி நிலையின் ஒரு சரிவு இது. இலட்சிய சமூகத்தினுள் வாழ்ந்து அனுபவித்த அந்த மனிதர்கள் எப்படி இதனைச் சகித்துக் கொள்வார்கள்?
இந்த மனோநிலையின் பின்னணியில்தான் இறைதூதர் [ஸல்] அவர்களின் செல்வப் பேரன் ஹுஸைன் [ரழி] அவர்கள் மிகச் சொற்ப தொகையினருடன் கர்பலாவில் மோதினார்கள். அந்தப் போரை யுத்த தந்திரோபாயங்கள் என்ற பின்னணியிலிருந்து நோக்குவது பொருத்தமற்றது. கருத்து, மன உணர்வுகளின் பாரத்திலிருந்தே அதை நோக்க வேண்டும்.
சிந்தனைக்காகவும் இலட்சியத்திற்காகவும் போரிடுபவர்கள் யுத்த தந்திரோபாயங்களை விட இலட்சியத்திற்கான தியாகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இது அவர்களின் பலவீனமா அல்லது பலமா என்பது ஒரு புறம் இருக்க, தியாகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பாரியது என்பதில் சந்தேகமில்லை.
இப்படி அந்த இலட்சிய சமுகத்தை நோக்கிய போராட்டங்களும் அதற்கான முயற்சிகளும் தொடர்பான இந்த ஆய்வு, அந்தப் போராட்டங்களையும் முயற்சிகளையும் பற்றிய ஆழ்ந்த விளக்கத்தைத் தருகிறது. குறிப்பாக நான்கு பெரும் இமாம்களின் அது பற்றிய முயற்சிகளையும் போராட்டங்களையும் ஆய்கிறது. பின்னர் நவீன கால சமூக மாற்றப் போராட்டங்களையும் அதனோடு தொடர்பு படுத்தி ஆய்கிறது. குறிப்பாக வன்முறை அடிப்படையிலான போராட்டத்தையும், வன்முறை தவிர்ந்த போராட்டத்தையும் அழுத்தி ஆராய்கிறது. . இந்த ஆய்வை வாசிக்கும் போது நாம் நான்கு இமாம்களின் இன்னொரு பக்கத்தைப் புரிந்து கொள்கிறோம். சட்ட அறிஞர்களாக மட்டுமல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்திலும் அவர்கள் அர்த்தம் பொதிந்த ஆழிய சிந்தனைகளை முன்வைத்துள்ளமையையும் புரிகிறோம். இலட்சியவாதப் போக்கில் மட்டுமல்ல யதார்த்தபூர்வமாக அவர்கள் எப்படி இப்பிரச்சினையை அணுகியுள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.
இந்நூலை எழுதிய கலாநிதி ஷெய்க் நாதிர் நூரி ஆழ்ந்த இஸ்லாமிய ஆய்வாளர். சமூக மாற்றத் தளத்தில் நிற்கும் ஒரு போராளியும் கூட. எனவே, அறிவும் ஆய்வும் கள அனுபவமும் இங்கே சந்தித்துக் கொள்கின்றன; பின்னணியாக அமைகின்றன. என்னால் முடிந்தளவு முழுமையாக மூல நூலை மொழிபெயர்த்துள்ளேன். கருத்துப்போக்கு சிதையாமல் பார்த்துக் கொண்டுள்ளேன்.
நூல் எழுதப்பட்டுள்ள ஒழுங்கிலிருந்து பார்க்கும் போது தமிழ் உலகுக்கு இது ஒரு புதிய நூல். சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு நல்லதொரு சிந்தனை அடித்தளமொன்றை இந்த நூல் தரும்.
இனி இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக நிற்கும் நாம் இப்பிரச்சினையை எப்படிப் பார்க்க வேண்டும்? இஸ்லாம் உருவாக்கிய அந்த இலட்சிய சமூகத்தை நோக்கிய எம் கனவுகள் எப்படி அமைய வேண்டும்? யதார்த்தபூர்வமாக அதனை நோக்கி எப்படி நாம் அடியெடுத்து வைக்க வேண்டும்? அதற்கான திட்டங்களும் தந்திரோபாயங்களும் என்ன? இவை பற்றி சிந்திக்க இந்நூல் எம்மைத் தூண்ட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
நூலாசிரியர் மதிப்புக்குரிய அறிஞர் ஷெய்க் நாதிர் நூரி அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. மென்மேலும் இத்தகைய ஆய்வுகளை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.
கீழைத்தேய சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை நன்கறிந்த அறிஞர் ஒருவரின் நூல் இது. அந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் அவருக்கு நன்றி செலுத்துகிறது. இந்நூலை மொழிபெயர்க்க அனுமதித்த ஷெய்க் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூல் வெளிவர உதவியாக இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.
இறையருளையாசிக்கும்
எம்.ஏ.எம்.மன்ஸூர்
08.02.2008
இறைவன் நாடினால் வளரும்....
No comments:
Post a Comment