Thursday, June 07, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 6.


மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?
(ஒலிநாடா பதிவிலிருந்து தரப்படுகிறது)

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-

உமர்செரீப்:
இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்!
ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?

உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?

20 வருடம் முன்பே

உமர்செரீப்:
20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.
இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.
ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.
ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

No comments: