Saturday, February 03, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 4.


இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.


இறைவன் நாடினால் வளரும்.

No comments: