Monday, October 18, 2010

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -3

01.இமாம் அபூஹனீபாவும் சமூக மாற்றமும்
                             
கிலாபத்தோடு முஸ்லிம்கள் கொண்டிருந்த பற்று ஓர் இலட்சியவாத மாதிரியோடு தொடர்புபட்டிருந்தது. நேர்வழி சென்ற கிலாபத் அமைப்பையே[கிலாபா ராஷிதா] இங்கு குறிப்பிடுகிறோம். குறிப்பாக அவ்வுன்னத கிலாபத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும் அதனை தம் கண் முன்னே கண்டவர்களைப் பொறுத்தவரையில் இது தெளிவான உண்மையாக இருந்தது.
                             
பின்னால் வந்த அதிகாரப் பற்று நிறைந்த முடியாட்சி முறைகளையோ அல்லது சர்வாதிகாரப் போக்குக் கொண்ட ஆட்சி அமைப்புக்களையோ கண்டபோது இவர்களுக்கு கிலாபத் மீது கொண்ட பற்று அதிகரித்தது. கடும் கசப்புணர்வும் அவர்களைப் பீடித்தது. முன்பிருந்த உன்னத நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்று அவர்கள் மிகுந்த அவாவுற்றனர். இந்த நிலைப்பாட்டிற்குள் தான் தங்கள் அவாவை சாதிக்க ஒன்றன் பின் ஒன்றாக பல இயக்கங்கள் தோன்றின. ஆனால், அவை அனைத்தும் தோல்வி கண்டன. ஏனெனில், அவ்வியக்கங்களை வழிநடத்தியோர் கருதியதைவிட அன்றைய நிலைமை மிக கடுமையாக இருந்தது. சமூக மாற்றங்கள் குறித்த அல்லாஹ்வின் நியதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையும் காணப்பட்டது.
                             
"ஒரு சமூகத்திலுள்ள மனிதர்கள் தம் உள்ளங்களில் உள்ளவற்றை மாற்றாத வரையில் அல்லாஹ் அச்சமூகத்தில் உள்ள நிலைகளை மாற்றுவதில்லை" [அர்ரஃத்:11].

உமையா, அப்பாஸிய காலப் பிரிவின்போது தோன்றிய சில ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை சீராகவும் அருள் நிறைந்ததாகவும் இருந்தது உண்மையே. எனினும், முஸ்லிம்கள் இலகுவாக கிலாபா ராஷிதாவுக்கு மீண்டுவிட முடியும் என நினைத்து விட்டார்கள். இலட்சிய மாதிரியைக் காட்டாத-ஆயினும் ஆழ வேருன்றிப் பதித்துவிட்ட பலமிக்க அந்த ஆட்சிகளை அகற்ற மிகப் பாரிய உழைப்பும் பெரும் தியாகங்களும் தேவைப்படும் என்பதை அவர்கள் உணரவில்லை. பாதுகாப்புக்குப் பெரும் படைப் பிரிவுகளையும் பாரிய செல்வங்களையும் கொண்டியங்கி வரும் அவ்வாட்சிகளை வெற்று ஆசைகளாலும் இலட்சியக் கனவுகளாலும் சிதறுண்ட சில சிறிய முயற்சிகளாலும் அகற்றிவிடல் சாத்தியமானதல்ல.
                        
இந்த நிலைகளிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர பாரியளவு உயிரழிவும் சீர்கேடுகளும் தவிர்க்க முடியாதது என இஸ்லாமிய சட்ட நிபுணர்களும், அறிஞர்களும் கண்டனர். எனவே, அதனைத் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம் என்ற வகையில் வெறுப்புடனும் ஏற்க வேண்டியதாயிற்று.
                              
பாரியளவு இரத்தம் சிந்தாமலும் பெரும் குழப்ப நிலைகளுக்கு வழி வகுக்காமலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க பாரிய கூட்டமைப்பு இல்லா நிலையில் புரட்சி செய்வதால் வரும் தீமைகள் நன்மைகளை விட பாரியவையாக இருக்கும் என அந்த சட்ட நிபுணர்களும் அறிஞர்களும் கண்டனர். எனவே, அவர்கள் உள்ளிருந்தே சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட முயன்றனர். இந்த வகையில் அவ்வறிஞர்களில் சிலருக்கு ஆட்சியாளர்களோடு நெருங்கிய தொடர்பிருந்தது. அவர்கள் அத்தொடர்பை ஆட்சியாளர்களுக்கு உபதேசிக்கப் பயன்படுத்தினர். ஏனெனில், அவ்வாட்சியாளர்கள் மூலம் சில அநியாயங்களும் சில வரம்பு மீறல்களும் நிகழ்ந்தபோதிலும் இஸ்லாமிய சட்டங்கள் மூலம் ஆட்சி புரியும் முஸ்லிம்களாகவே அவர்கள் இருந்தனர்.

உதாரணமாக, இமாம் ஸுஹ்ரி உமையாக்களுடன் சத்தியத்தில் நெகிழ்ந்து கொடுக்காத வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்தார். எனினும், இமாம் ஸயித் இப்னு அல் முஸய்யப், இப்னு அபீதிஃப் போன்றவர்களது ஆட்சியாளர்களைப் பொருத்தவரையிலான நிலைப்பாடு சத்தியத்தைப் பொறுத்தவரையில் பலமாகவும் மிகுந்த உறுதி கொண்டதாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் நாடினால் வளரும்....

No comments: