Tuesday, September 20, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -12

04. இமாம் அஹ்மதும் சமூக மாற்றமும்

அரசியல் பற்றிய இமாம் அஹ்மதின் சிந்தனைகள், அவரது பொதுவான சிந்தனைப் போக்கான பாரம்பரிய சிந்தனை முறைமையைக் கொண்டதாக அமைந்திருந்தன.

பெரும்பாலான ஸஹாபாக்களும் தாபியீன்களும் கொண்டிருக்கும் கருத்தை இங்கு இமாம் அஹ்மத் முதன்மைப்படுத்தினார். கிலாபத், பைஅத் போன்ற அம்சங்கள் மட்டுமன்றி பொதுவாக சட்ட சிந்தனையிலும் இமாமின் போக்கு இவ்வாறு அமைந்திருந்தது. அத்தோடு இமாம் யதார்த்தபூர்வமான பார்வைக் கொண்டிருந்தார். குழப்ப நிலைகளைத் தவிர்த்து அமைதியும் சமாதான நிலையும் நிலவ வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பேணுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கும் இவரிடம் இருந்தது.
---------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் இது ஒருவகையாகும். அல்குர்-ஆன், ஸுன்னா, ஸஹாபாக்கள், தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்தும் போக்கே இதுவாகும். அல்குர்-ஆனினதும் ஸுன்னாவினதும் வசனங்களுக்குக் காரணங் காணுவதில் இவர்கள் ஆழ்ந்து போக மாட்டார்கள். அல்குர்-ஆன் ஸுன்னாவுக்கு அடுத்தபடியாக ஸஹாபாக்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்துவார்கள். தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்கு அல்லது அவர்களில் பெரும்பாலோரது கருத்துக்கு இவர்கள் ஒரு பெறுமானத்தைக் கொடுப்பர்.(மொழிபெயர்ப்பாளன்).
---------------------------------------------------------------------------------------------------------
அநியாயக்காரனாக இருந்தாலும் தன் பலத்தால் ஆட்சிக்கு வந்த இமாமுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை விட அவருக்குக் கட்டுப்படுவதே கடமையானது எனவும் அவர் கூறினார். ஒரு சர்வாதிகார ஆட்சியாளன் பல வருடங்கள் திட்டமிட்டுச் செய்யும் அநியாயங்களை விட கூடுதலான அநியாயங்களை அவனுக்கெதிரான ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தும். இது பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தி விடும் என இமாம் இக்கருத்திற்கு நியாயம் கூறினார். இக்கருத்து இமாம் மாலிக்கின் கருத்தை ஒத்திருக்கிறது எனக் கூறலாம்.

ஆயினும் இமாம் மாலிக்குக்கும், அஹ்மதுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கு அவதானிக்க வேண்டும். இமாம் மாலிக் அரசுக்கெதிரான் ஆயுதப் போராட்டத்தின் குழப்ப நிலைகளையும் கண்டார். ஆட்சியொன்று கவிழ்வதையும் அதன் பாரிய குழப்ப நிலைகளையும் கண்டார். ஏனெனில், இமாம் மாலிக் இருவேறு கிலாபத்துக்களைக் கண்டவர். இரு காலப்பிரிவுகளிலும் வாழ்ந்தவர். இவ்விரு காலப்பிரிவுகளிலும் போராட்டங்களும் குழப்ப நிலைகளும் வலுத்திருந்தன. அவற்றை இமாம் மாலிக் கண்டதோடு அக்காலப் பிரிவுகளிலேயே வாழ்ந்தார். எனவே, அவற்றால் அவர் பாதிக்கப்பட்டார்.

ஆயினும், இமாம் அஹ்மத் குழப்பநிலைகளை அதிகமாக அவதானிக்கவில்லை. அவரது காலப்பிரிவு குழப்ப காலப்பிரிவை அண்மித்ததாக இருக்கவும் இல்லை. அமீனுக்கும், மஃமூனுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தையும் அதனால் விளைந்த குழப்பநிலையையுமே இமாம் அஹ்மத் அவதானித்தார். அக்குழப்ப நிலையின் விளைவு இறுதியில் மோசமாக அமைந்ததையும் இமாம் கண்டார்.

அதாவது பாரசீக ஆதிக்கம் ஆட்சியில் வேரூன்றியது. பித்அத்கள் பரவின. இஸ்லாத்துக்குப் புறம்பான சிந்தனைகள் அதிகாரபீடத்தில் ஆதிக்கம் செலுத்தின. பித்அத் போக்காளர்கள் ஆட்சியாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். அவர்களால் இமாம் சிறைவாசத்திற்கு உட்பட்டார்; துன்புறுத்தவும் பட்டார். மஃமூன், முஃதஸிம், வாஸிக் என தொடராக வந்த மூன்று ஆட்சியாளர்களால் அவர் துன்புறுத்தப்பட்டர். எனினும், இவை எதுவும் இமாம் அவர்களது உள்ளத்தில் பழிவாங்கும் உணர்வையோ ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சிந்தனையையோ விதைக்கவில்லை.

சிறையும் அங்கு கிடைத்த சித்திரவதைகளும் சட்டங்களை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவில்லை. அப்படி நடந்திருப்பின் அது மனோஇச்சையின் விளைவாகப் போயிருக்கும் அல்லது தமது காலப்பிரிவு ஆட்சியாளர்கள் கொடுத்த துன்பங்களின் விளைவாகப் போயிருக்கும். ஆதாரபூர்வமான ஸுன்னா, இஸ்லாத்தின் ஆரம்ப சந்ததியினரின் நடைமுறை, அவர்களது அனுபவங்கள் என்பவற்றிலிருந்தே கிலாபத் பற்றியும், அதற்கு எதிராக ஆயுதம் தூக்குவது பற்றியுமான சட்டங்களை இமாம் வகுத்தார். அத்தோடு இமாம், சமூக நலன்களையும் கவனத்தில் கொண்டார். சாதாரண எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இமாம் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை மறுத்தார். ஆட்சியாளர் நிலை எவ்வாறு இருப்பினும் அவருக்கெதிராக ஆயுதம் தூக்குவது அத்துமீறிய நடவடிக்கை என்றே இமாம் கணித்தார். தன்னைச் சித்திரவதை செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதைக் கூட இவ்வாறே இமாம் கருதினார்.

இறைவன் நாடினால் வளரும்....

நூலாசிரியர் பற்றி... | முன்னுரை | பதிப்புரை | முந்தைய பகுதி

Thursday, September 08, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -11

இமாம் அவர்களது காலத்து அரசியல் சூழல் பற்றி இங்கு விளக்குவது அவசியம். உமையாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள் இப்போது பலவீனமுற்றிருந்தன. ஷீயா, கவாரிஜ்கள் என்ற இரு முக்கிய பிரிவினரே ஆயுத முனையில் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடியவர்கள். இக்காலப்பிரிவில் இவர்கள் பலவீனமுற்றுப் போனதனால் குழப்ப நிலைகள் நீங்கி ஓரளவு அமைதி நிலவியது. இவர்கள் இரு சாராரும் ஆயுதங்களை வைத்து விட்டு பேனா என்ற ஆயுதத்தைத் தூக்க இப்போது ஆரம்பித்திருந்தார்கள். ஏனெனில் அரசு, ஆயுத மோதலுக்குப் பதிலாக கருத்துப் பரிமாறலொன்றை ஏற்படுத்தும் வகையில் பல அமர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த வகையில் பல சிந்தனைகளைச் சீர்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே, ஒவ்வொரு பிரிவினரும் ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக தங்கள் சிந்தனைகளை ஆதாரங்களோடு பதிய முனைந்தனர். கருத்து ரீதியாக தம் சிந்தனைகளைப் பாதுகாக்க முனைந்தனர். இப்பின்னணியில் மக்கள் பல்வேறு கலைகளிலும், அறிவுத் துறைகளிலும் ஈடுபாடு காட்டலானார்கள்.

மொழி அறிஞர்கள் இலக்கண விதிகளை வகுக்க ஆரம்பித்தார்கள். கலீல் இப்னு அஹ்மத் போன்ற இலக்கிய அறிஞர்கள் யாப்பிலக்கணத்தை வகுக்கலானார்கள். இஸ்லாமிய சட்டம், ஹதீஸ், தப்ஸீர் போன்ற துறைகள் இவ்வகையில் வகுக்கப்படலாயின. அப்போதைய இஸ்லாமிய அரசும் மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சீனா வரையில் பரந்து விரிந்திருந்தது. எனவே, வளர்ச்சியடைந்த நகரங்கள் பல உருவாயின.ஒ வ்வொரு நகரும் பிரசித்தி பெற்ற அறிஞர்கள் பலரால் பிரபல்யம் ஆகியது. விளைவாக அறிவு தேடுவதற்கான பயணங்களும் அதிகரித்தன.

அப்பாஸிய கலீபாக்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், வீண் விளையாட்டுக்களில் சற்று அளவு மீறி ஈடுபாடு கொண்டவர்களாகவும், தடுக்கப்பட்ட, ஹராமான சில செயல்களை நெருங்கிச் சென்றவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய சில பலவீனங்கள் அவர்களில் பலரிடம் காணப்பட்டபோதிலும் அவர்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள். அறிஞர்களை நெருக்கமாக்கிக் கொண்டார்கள். அவர்களை உயர்த்தி மதித்தார்கள். அவர்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். அத்தோடு அறிவுக்கான வழிகளையும்,படி ப்பதற்கான வசதிகளையும் நன்கு ஏற்படுத்தினார்கள். மார்க்கத்திற்குப் புறம்பான சிந்தனைகளோடும், முஃதஸிலாக்களோடும் போராட அறிஞர்களின் உதவியையும் பெற்றார்கள். மஃமூன், வாஸித், முஃதஸிம் போன்ற சிலர் முஃதஸிலாக்களுக்கு ஆதரவாக நின்று அறிஞர்களை ஒதுக்கி அவர்களைத் துன்புறுத்தினார்கள் என்பது உண்மையாயினும் அப்பாஸிய கலீபாக்களில் ஏனையோர் அவ்வாறு இருக்கவில்லை. குறிப்பாக ஹாரூன் ரஸீத் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள், ஹதீஸ் துறை அறிஞர்கள், உபதேசகர்கள் போன்றோரைத் தனக்கு நெருக்கமாக வைத்து கொண்டார். முஃதஸிலாக்களை அவர் சிறை வைத்ததாக வரலாற்றில் பதிவுள்ளது. கலீபா முதவக்கிலும் முஃதஸிலாக்களை ஒதுக்கி இஸ்லாமிய அறிஞர்களை மீண்டும் பலம் பெற்றவர்களாக மாற்றினார்.

இந்த வகையில் பொதுவாக அப்பாஸிய கலீபாக்கள் சிலபோது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இருந்தாலும் அறிஞர்களின் உபதேசங்களைச் செவிமடுத்தார்கள்.

அறிஞர்களுக்குக் கிடைத்த இந்த அந்தஸ்தின் காரணமாக அறிவு தேடும் போக்கு சமூகத்தில் வளர்ந்தது. குறிப்பாக அறிவுமன்றங்கள் கலீபாக்கள், கவர்னர்களின் மாளிகைகளில் தொடர்ந்தமையும் அங்கு கவிஞர்களும், சட்ட அறிஞர்களும், பல் தரப்பட்ட அறிவுத்துறைகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் போட்டி போட்டுக் கொண்டு சென்றமையும் அறிவு தேடுவோருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.

இறைவன் நாடினால் வளரும்....


நூலாசிரியர் பற்றி... முன்னுரை பதிப்புரை முந்தைய பகுதி

Monday, August 08, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -10

03.இமாம் ஷாபிஈயும் சமூக மாற்றமும்.

இமாம் ஷாபிஈ அப்பாஸிய காலப் பிரிவில் ஹிஜ்ரி 150-ல் பிறந்தார். இவ்வாண்டிலேயே இமாம் அபூஹனீபாவும் மரணித்தார். இமாம் ஷாபிஈ இமாம் மாலிக்கிடம் கற்றார். குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் இமாம் மாலிக்கிடம் கல்வி கற்பதிலேயே ஈடுபட்டிருந்தார். பின்னர் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள நஜ்ரானில் அரச தொழிலொன்றையும் செய்தார். அத்தொழில் மூலம் நீதியை நிலைநாட்டினார் என்பதோடு தனக்கு இழைக்கப்படும் அநீதிகள், தீங்குகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டார். குறைஷிக் கோத்திரத்தைச் சேர்ந்தவராகவும் இறைதூதர் (ஸல்) அவர்களின் வம்சாவழியைக் கொண்டவராகவும் இருந்தமையால் 'அலவி' பிரிவினரைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்டார். அப்போது அப்பாஸியர் அலவி தலைவர்களையும், அவர்களது செயற்பாடுகளையும் தேடித் திரிந்து வந்தமையே இதன் பின்னணியாகும். இந்த வகையில் சூழ்ச்சியாலும் பொய் முறையீடுகளாலும் இமாம் ஷாபிஈ கைது செய்யப்பட்டு பக்தாதுக்கு அனுப்பப்பட்டார். இது ஹிஜ்ரி 184-ல் நிகழ்ந்தது.

இமாம் அவர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துன்பம் அருளாக அமைந்தது எனக் கூறக் கூடியதாக இருந்தது. ஏனெனில், இமாம் பாக்தாதில் இமாம் அபூஹனீபாவின் மாணவர் முஹம்மத் இப்னு ஹஸனைச் சந்தித்தார். ஏற்கனவே ஹிஜாஸ் பிரதேச சட்ட அறிவு இவரிடம் இருந்தது. இப்போது ஈராக்கிய சட்ட அறிவையும் முஹம்மத் இப்னு ஹஸனிடமிருந்து கற்றுக் கண்டார். இந்த வகையில் அறிவுசார் சட்ட அறிவும், பாரம்பரிய சட்ட அறிவும் இமாமிடம் ஒன்றிணைந்தன.

பின்னர் மீண்டும் மக்கா திரும்பினார். ஹஜ்ஜின்போது பெரும் அறிஞர்களைச் சந்தித்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களில் ஒருவர். இந்த வகையில் பல அறிஞர்களது சிந்தனைப் போக்கையும் இமாம் படித்துத் தேர்ந்தார். அதன் விளைவாக இமாம் அவர்களால் தனியானதொரு சிந்தனைப் போக்கை உருவாக்க முடிந்தது. வித்தியாசமான இருவகை சட்ட சிந்தனைப் போக்கையும் ஆழ்ந்து படித்ததன் பின்னர் மக்காவில் ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் இமாம் ஷாபிஈ தங்கி இருந்தார். அங்கு பலருடனும் கருத்துப் பரிமாறல்களையும், வாதப் பிரதிவாதங்களையும் நடாத்தினார். வித்தியாசமான பல கருத்துக்களையும், வேறுப்பட்ட சிந்தனைப் போக்குகளையும் அவற்றினூடே அவதானித்தார்.

இவ்வாறு இமாம் ஷாபிஈ நன்கு கற்றுத் தேர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்றதன் பின்னர் சட்ட ஆக்கத்திற்கான விதிகளையும், கொள்கைகளையும் வகுக்கத் துவங்கினார். பின்னர் பக்தாதுக்கு இரண்டாம் முறையாக ஹிஜ்ரி 915-ல் வந்தார். அப்போது இமாமிடம் இதுவரை காணாத தனியான சட்ட ஆய்வு முறைமை இருந்தது. பக்தாத் வந்த இமாம் கலீபா மஃமூனின் சபையில் பாரசீக செல்வாக்கு இருந்ததை அவதானித்தார். இது இஸ்லாமிய சிந்தனையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதிகளாக அக்காலத்தில் கணிக்கப்பட்ட முஃதஸிலாக்கள் கலீபாவிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். கலீபாவின் எழுத்தாளர்களாகவும், நெருங்கிய அந்தரங்கமானவர்களாகவும் இவர்களே காணப்பட்டனர். தமது கொள்கைப் போக்குடன் ஒத்து வராத அறிஞர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்களாகவும் இவர்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில் அவமானப்படத்தக்க நாட்டில் நிலைக்க இமாம் ஷாபிஈ விரும்பவில்லை. தனது நம்பிக்கை குறித்து பல வாதங்களை நடத்திய பிறகே இமாம் இம்முடிவுக்கு வந்தார். இமாம் ஷாபிஈயின் கீழ்வரும் கவிதை இந்த உண்மையை விளக்குகிறது.

அவமானம் தரும் நாட்டில் மரியாதைக்குரியோர் இருப்பது
அதனை விட்டு புறப்பட முடியுமானால்
சாத்தியமற்ற ஒன்றே.


இந்த நிலையில்தான் "அல்குர்ஆன் படைக்கப்பட்டதா?" என்ற இஸ்லாமிய வரலாற்றில் பிரசித்தி பெற்ற பிரச்சினை தோன்றியது. சட்ட, ஹதீஸ்துறை அறிஞர்களுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. இந்நிலையில் கலீபா மஃமூன் இமாம் ஷாபிஈ அவர்களுக்கு நீதிபதிப் பதவியை அளித்தார். எனினும், இமாம் அதனை ஏற்கவில்லை. இமாமின் சிந்தனைப் போக்குக்கு இதுவே பொருத்தமானதாகும்.

இவ்வகையில் பக்தாதில் தங்கியிருப்பதும் இமாம் ஷாபிஈக்குப் பொருத்தமாக இருக்கவில்லை. அங்கிருந்து பயணப்பட வேண்டிய நிலையே உருவாகியது. பயணப்பட்டுப் போய் வாழ வசதியானதும், பொருத்தமானதுமான இடமாக இமாம் எகிப்தைக் கண்டார். அங்கு பயணப்படும் போது கீழ்வருமாறு பாடினார்கள்.

எனதுள்ளம் எகிப்து செல்ல ஆசை கொள்கிறது
அதற்கு பாலை நிலங்களையும்
பல பூமிகளையும் கடக்க வேண்டும்
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
வெற்றிக்கும் செல்வத்திற்கும்
நான் அழைக்கப்படுகிறேனா?!
அல்லது மரணக் குழியை நோக்கித்தான்
அழைக்கப்படுகிறேனா?
எனக்குத் தெரியவில்லை!


மக்களது மனப்போக்குகளை இமாம் ஷாபிஈ ஆழமாகப் புரிந்திருந்தார். புரிந்து கொள்ளும் நுண்ணிய பார்வைத் திறன் அவருக்கிருந்தது. பயணங்கள் செல்வதில் மிகுந்த விருப்பமுடையவர்களாவும் இமாம் இருந்தார். எனவே, மக்களது கொடுக்கல் வாங்கல்கள், பழக்க வழக்கங்கள் அவர்களது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியெல்லாம் இமாம் நன்கு அறிந்திருந்தார். கீழ்வரும் இமாமின் கவிதை இக்கருத்தை விளக்குகிறது.

கிழக்காகவும் மேற்காகவும்
நாடுகளெல்லாம் சுற்றித்திரிவேன்
என் தேவையைப் பெறுவேன்.
அல்லது ஊருக்குப் புதியவனாக இறப்பேன் நான் அழிந்தால்
அல்லாஹ்வே அதனைக் காப்பான் தப்பினால்
அண்மையில் நான் மீண்டு வரலாம்.


உண்மையில் பயணங்கள் ஒரு சட்ட அறிஞனுக்கு நிறைய அறிவைக் கொடுக்கக் கூடியன என்பதோடு பயணம் இயல்பாகவே பல அனுபவங்களையும் தரக் கூடியது.

இறைவன் நாடினால் வளரும்....

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -9

இந்த வகையில் குழப்ப நிலையின் போது புரட்சியாளனின் பக்கமோ ஆட்சியாளனின் பக்கமோ இமாம் மாலிக் நிற்கவில்லை. இருபிரிவிலும் யாருக்கும் உதவ முடியாது என அவர் கருதினார். ஏனெனில், இரு பிரிவினரும் பாவத்தில் வீழ்ந்துள்ளனர் என அவர் கருதினார். "கலீபாவுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு எதிராகப் போராடுவது ஆகுமா?" என இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "உமர் பின் அப்துல் அஸீஸ் போன்ற ஒருவருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்களாயின் ஆகும்" என்றார். "உமர் இப்னு அப்துல் அஸீஸைப் போல் ஆட்சியாளன் இல்லாவிட்டால்" என மீண்டும் இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "அப்படியாயின் அல்லாஹ் ஓர் அநியாயக்காரன் மூலம் இன்னோர் அநியாயககாரனை பழிவாங்குகிறான். பின்னர் இருவரையுமே பழிவாங்குவான். விட்டு விடு" என்றார்.

இமாம் மாலிக் இலட்சியவாதத் தோற்றங்களோடு மட்டும் நின்றுவிடாது யதார்த்த நிலையையும் அவதானிக்கும் போக்குக் கொண்டவர். இந்த வகையில் இப்போக்கை அவர் கடைபிடித்தார். ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர்கள் செய்ய முயலும் சில தீய செயல்களை அழித்துவிடலாம். அதேவேளை முழுமையாக அவர்கள் சீர்திருந்தி உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஒருவர் அவர்களில் தோன்றவும் கூடும். எனவே, கவர்னர்கள் ஆட்சியாளர்களிடம் இமாம் மாலிக் சென்றார்; அவர்களுக்கு உபதேசித்தார்; வழிகாட்டினார்; நற்செயல்களின் பக்கம் அழைத்தார். அவர் செய்த ஆழ்ந்த உபதேசங்கள் பல இன்றும் காணக் கிடைக்கின்றன.

கலீபா அபூ ஜஃபர் மன்சூர், மஹ்தி, ஹாரூன் ரஷீத் போன்றோர் விடயத்தில் பல சந்தர்ப்பங்களில் இமாம் மாலிக் எடுத்த நிலைப்பாடுகள் மிகுந்த பாராட்டுக்குரியன; மிகுந்த கண்ணியத்திற்குரியன. இமாம் மாலிக் கலீபாக்களைச் சந்திக்கும் போது தம்மை மிகுந்த கண்ணியத்தோடு வைத்து கொள்வார். அது தனது உபதேசத்திற்கு நல்ல பாதிப்பைத் தரும் என்று அவர் கருதினார். ஆட்சியாளர்களைச் சூழ இருப்போர் அவர்களைப் பொய்யாகப் புகழ்வது அவர்களது பிழையான செயல்களையும் சிறந்ததாகக் காட்டும்போக்கு பற்றியே மாலிக் பெரிதும் பயந்தார். ஏனெனில், இந்த நிலையில் எவரின் உபதேசமும் வழிகாட்டலும் அவர்களிடம் பயன்கொடுக்காது போகும் என அவர் உணர்ந்தார்.

இமாம் மாலிக்கின் இத்தகைய சிந்தனைப்போக்கிற்கும் நடத்தைக்கும் அவரது இயல்பான அமைதியான போக்குக் கொண்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த வகையில் சமூக ஸ்திர நிலை சிறந்த மாற்றத்திற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்கும் என இவர் கண்டார். இந்நிலையில் மோசமான நிலையிலிருந்து நல்ல நிலைக்கும், நல்ல நிலையிலிருந்து மிகச் சிறந்த நிலைக்கும் படிபடியாகச் செல்ல முடியும் என அவர் கண்டார்.

இறைவன் நாடினால் வளரும்....

Saturday, August 06, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -8

02.இமாம் மாலிக்கும் சமூக மாற்றமும்.

இமாம் மாலிக் ஹிஜ்ரி 92 இல் பிறந்து 179 இல் இறந்தார். 90 ஆண்டுகளைக் கொண்ட தனது இந்நீண்ட வளமிகுந்த ஆயுளில் இரு பெரும் அரசுகளைக் கண்டார். இக்காலப் பிரிவில் இஸ்லாமிய ஆட்சி விரிந்து பரந்திருந்தது. அவர் இக்காலப் பிரிவில் நிகழ்ந்த குழப்ப நிலைகளையும் பாரியளவு மனித உயிர்களைப் பலிகொண்ட புரட்சிகளையும் கண்டார். கவாரிஜ்களும் அலவிகளும் ஆயுதம் ஏந்திய புரட்சிகளையும் அவதானித்தார். இவற்றின் விளைவால் சத்தியம் நிலைநாட்டப் படவோ அசத்தியம் அழிக்கப்படவோ செய்யாது என்பதை உணர்ந்தார். சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை அவர் அவதானித்தார். தனக்கு முன் வாழ்ந்த தனது ஆசிரியர்களிடம் அப்போது நிகழ்ந்த, அவர்கள் வாழ்ந்து அவதானித்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இமாம் மாலிக் பெற்றார்.

'ஹர்ரா' யுத்தம் என்றழைக்கப்படும் யுத்த நிகழ்ச்சி பற்றியும் அவ்வேளை இறைதூதர் [ஸல்] அவர்களின் புனிதஸ்தலமான மதீனா எவ்வளவு தூரம் மோசமாக சீரழிக்கப்பட்டது என்பதையும் அதனைக் கண்ட தமது ஆசிரியர்களிடம் இமாம் கேட்டறிந்தார். அப்துல்லாஹ் இப்னுஸுபைருக்கும் அப்துல் மலிக் பின் மர்வானுக்கும் இடையிலான யுத்த நிகழ்வையும் இமாம் அறிந்தார். அப்போது அல்லாஹ்வின் புனிதஸ்தலமான கஃபாவும் கூட பாதிக்கப்பட்டதை அறிந்திருந்தார். மன் ஜனீக் என்ற கோபுர வடிவ ஆயுதத் தக்குதலுக்கு அது உட்பட்டது. முழு ஹிஜாஸ் பிரதேசமும் படைத் தரப்பினரின் வெறித்தனமான மிக மோசமான செயற்பாடுகளூக்கு உட்பட்டுச் சீரழிந்தது. உண்மையில் அப்பிரதேசம் மக்கள் அமைதி தேடிச் செல்லும் பூமி, புனித வணக்கக் கிரியைகளின் பூமி. ஆனால் கண்மூடித்தனமான குழப்பநிலைகள் இப்படித்தான் எதனையும் விட்டு வைப்பதில்லை; புனிதமும் புனிதமல்லாததும் அதற்கு ஒன்றுதான்.

இத்தகையதொரு நம்பிக்கையிழந்த சூழலில் வாழ்ந்தவர், மிகச் சரியான ஷுறா அடிப்படையிலான ஆட்சி தோன்றுவதில் நம்பிக்கை இழப்பது இயல்பே. அபூபக்கர், உமர், உஸ்மான் [ரழி] போன்றோர் கால உன்னத ஆட்சியை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடு இக்காலப் பிரிவில் மிகக் குறைவு என இச்சூழ்நிலையினைக் கருதுவது மிக யதார்த்தமானது என்பதில் சந்தேகமில்லை. எனவே,இருக்கும் நிலையை அங்கீகரிப்பது தவிர வேறு வழியில்லை. இஸ்லாம் வேண்டுகின்ற அந்த ஆட்சிமுறை என்பதலல்ல-யதார்த்தத்தை உணர்ந்து கொண்டதால் வந்த முடிவே இதுவாகும்.

இருக்கும் சமுக நிலையை மாற்ற முற்பட்டால் பெரும் தீமைகளுக்கு அது இட்டுச் செல்லும்; பாரிய சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும்; நல்ல விளைவுகளை எதிர் பார்ப்பது மிகக் கடினம் என்ற யதார்த்த உண்மைகளே இம்முடிவுக்கு வர அவரை நிர்பந்தித்தன. அத்தோடு அதுவரையிலும் நிகழ்ந்த போராட்டங்களும் ஆட்சிக்கெதிரான அனைத்து முயற்சிகளும் இருந்த நிலையை இன்னும் மிக மோசமான நிலைக்கே இட்டுச் சென்றுள்ளன என்ற வகையில் இரு விடயங்களில் ஒன்றைத் தெரிவு செய்ய முற்படும்போது குறைந்த பாதகம் கொண்டதைத் தெரிவு செய்தலே புத்திசாலித்தனமான செயல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவே இமாம் மாலிக் அமைதி நிலையைச் சமாதானத்தைத் தெரிவு செய்தார் என்றால் இருந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டார் என்பது அதன் பொருளன்று. அது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்; மாற்ற முடியாத ஒரு நிலை என்பதே காரணமாகும்.

இந்த வகையில் ஆட்சிக்கெதிரான புரட்சி பெரும் குழப்பநிலைக்கும் இரத்தம் சிந்தலுக்கும் இட்டுச் செல்லும் என அனுபவங்களின் அடியாக இமாம் மாலிக் உறுதியாக நம்பினார். எனவே, ஆட்சிக்கெதிரான புரட்சி சரியான நிலைப்பாடு என அவர் காணவில்லை.

ஆட்சிக்கெதிரான புரட்சி குழப்பநிலையை உருவாக்கும்; சமூக ஒழுங்குகளில் சீர்குலைவை ஏற்படுத்தும்; மக்கள் நிலைமைகளைக் குழப்பிவிடும்; உயிருக்கும் மானத்திற்கும் செல்வத்திற்கும் அழிவையும் பாதகத்தையும் ஏற்படுத்தும் என இமாம் கண்டார். திட்டமிட்டு பல வருடங்களில் சாதிக்க முடியாத அநியாயத்தைச் சில மணித்தியாலக் குழப்பம் ஏற்படுத்தி விடும் என அவர் கருதினார். இந்த வகையில், இமாம் மாலிக் ஆட்சிக்குக் கட்டுபடாது புரட்சி செய்யும் கருத்தை ஏற்கவில்லை. அப்படியான புரட்சியின் பிரச்சாரகராகவும் இருக்கவில்லை. அத்தகைய புரட்சிக்கு ஒத்துழைக்கவும் இல்லை. அதேவேளை, அவரது காலத்தில் வாழ்ந்த கவர்னர்களுக்கோ கலீபாக்களுக்கோ சார்பான பிரச்சாரகராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ அவர் இருக்கவில்லை. யாருடைய பிரச்சாரகராகவும் நிற்காது நடுநிலையைக் கடைபிடித்தலே சரியான நிலைப்பாடு என அவர் கண்டார். குழப்பநிலைகளை வெறுத்த இமாம் மாலிக்கின் இந்த நிலைப்பாடு, மதீனாவில் அவர்களது காலப்பிரிவில் ஒரு வித்தியாசமான நிலைப்பாடாக இருக்கவில்லை. மதீனாவின் அறிஞர்களும் இதே போக்கையே கொண்டிருந்தார்கள்.

பிரிவினைக்கு வழிவகுக்காது சமூகத்திலிருந்த ஆட்சிக்கு இமாம் மாலிக் கட்டுப்பட்டார்கள். ஆயினும், தனது காலத்து ஆட்சியாளர்களின் ஆட்சி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களுக்கும் அல்குர்-ஆனின் வழிகாட்டலுக்கும் முழுமையாக உட்பட்டிருந்தது என அவர் காணவில்லை. ஓரளவான சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்ற வகையிலேயே ஆட்சிக்குக் கட்டுப்படுதலை இமாம் மாலிக் ஏற்றார். குழப்பநிலைகள், பிரச்சினைகள் நீங்கிய அமைதியான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் ஏற்படுத்தும் பாதிப்பு பாரியதாக அமையலாம் என அவர் கருதினார்.

எனவே, நல்லுபதேசத்தினூடாகவும் உரிய இடத்தில் சத்தியத்தைப் பேசுவதனூடாகவும் சீர்திருத்த முயற்சியில் அவர் ஈடுபட்டார். வழிகாட்டும் பொறுப்புகளையும் அவர் ஏற்றார். ஆட்சியாளனைச் சீர்திருத்துவதிலும் கூடிய கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆட்சியாளனின் சீரிய நிலை ஆளப்படுவோரின் சீரான நிலைக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் நாடினால் வளரும்....

Friday, August 05, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -7

ஹுஸைன் இப்னு அலி [ரழி] அவர்கள் யஸிதுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தபோது அதிகமான நபித்தோழர்கள் உயிர் வாழ்ந்தனர். தாபிஈ சட்ட அறிஞர்கள் எல்லோருமே அப்போது உயிர் வாழ்ந்தார்கள். ஆயினும் எந்த ஸஹாபியும் தாபிஈயும் ஹுஸைன் [ரழி] அவர்களின் செயற்பாட்டை ஹராம் என்று சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் ஹுஸைன் [ரழி] அவர்கள் போராடச் செல்வதை தடுத்தார்கள். காரணம் 'ஈராக்வாசிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல; போராட்டம் பல அபாயங்களைக் கொண்டது. அது வெற்றியடையும் சாத்தியம் மிகக் குறைவு' என்றுதான் தடுத்தார்கள். அநியாயக்காரர்களுக்கு எதிராக, வழிபிறழ்வோருக்கெதிராக போராடல் சட்டரீதியானது. எனினும் போராடும் முன்னர், வெற்றிசாத்தியமானதுதானா? குறித்த இலக்கை அடைந்து கொள்ள முடியுமா? வழிபிறழ்ந்த ஆட்சியை அகற்றியதன் பின்னர் சிறந்த ஆட்சியொன்றை அமைப்பது சாத்தியம்தானா? என்பவற்றை உறுதிப்படுத்தலும் திட்டமிட்டுக் கொள்ளலும் மிக அவசியமாகும். இந்த வகையில் ஸஹாபாக்கள் சிலர் ஹுஸைன் [ரழி] அவர்களோடு கருத்து வேறுபட்டிருப்பின் அது திட்டமிடல், விளைவு சாத்தியப்பாடு என்பன குறித்ததாக அமைந்ததே தவிர போராட்டம் ஆகுமானதா இல்லையா என்பது குறித்தல்ல.

ஹஜ்ஜாஜின் அத்துமீறிய ஆட்சியின்போது அப்துர் ரஹ்மான் அல் அஸ் அத்தின் தலைமையில் நடந்த புரட்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். இப்புரட்சியின்போது ஸளீத் இப்னு ஸுபைர், ஷஃபி இப்னு அபி லைலா அபுல் புக்திரி போன்ற பல பெரும் சட்ட அறிஞர்களைக் கொண்ட ஓர் இராணுவப் பிரிவு இப்னு அஸ் அதுக்குச் சார்பாக நின்றதாக இப்னு கஸிர் குறிப்பிடுகின்றர்.

இப்போராட்டத்தில் கலந்து கொள்ளாது ஓதுங்கிக் கொண்ட எந்த அறிஞரும் இப்புரட்சியை ஆகுமானதல்ல எனக் கூறவில்லை. போரில் கலந்து கொண்ட சட்ட நிபுணர்கள் அஸ் அதின் படைமுன் நிகழ்த்திய உரைகள் இது அனுமதிக்கப்பட்டசெயல் என்பதைக் காட்டுகின்றன.

ஹஜ்ஜாஜின் காலப்பிரிரிவில் மக்காவில் புரட்சி செய்த இப்னு ஸுபைரின் செயர்பாடும் இதற்கு இன்னொரு உதாரணமாகும். இவ்வாறு ஆரம்பகால அறிஞர்கள் அநியாயக்கார ஆட்சிக்கெதிராக ஆயுதப் புரட்சி செய்தல் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் இப்னு அஸ் அதின் புரட்சியின்போது சிறைபிடிக்கப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் பசியலும் தாகத்திலும் விடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இப்னு ஸுபைரின் புரட்சியின் போது 'மன் ஜனீக்' என்ற போர்க் கருவி மூலம் கஃபா தாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர்.

இமாம் அபூ ஹனீபா ஆயுதப் போராட்டத்தின்போது இத்தகைய மோசமான விளைவுகள் உருவாகலாம் என எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இப்புரட்சிகளின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வீணாக அழிப்பதும் பெருந்தொகையானோர் கொல்லப்படலும் மட்டுமே நிகழ்ந்தது. எனவே மாற்றத்திற்கு வழி ஆயுதப் போராட்டமே என்ற முதலாம் நூற்றாண்டு அறிஞர்கள் கொண்டிருந்த கருத்து மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதலாம் நூற்றாண்டில் பிறந்த அபூ ஹனீபாவும் அக்கருத்தையே கொண்டிருந்தார்களெனினும் இமாம் அபூ ஹனீபாவின் சிந்தனைப் பாதிப்புக்குட்பட்ட அபூ யூசூப் போன்ற அவரது மாணவர்கள் அபூ ஹனீபாவின் இக்கருத்துப் போக்கினைக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். புரட்சிகளின் விளைவுகள் தந்த பாடத்தினால் முஸ்லிம் சமூகத்தில் இன்னொரு கருத்து தோன்றலாயிற்று. இக்கருத்தே அஹ்லுஸ் ஸுன்னாவின் பொதுக் கருத்து என அழைக்கப்படுகின்றது.

ஆயுதப் போராட்டத்திற்கு மாற்றமான இக்கருத்து தோன்றுவதற்கு முதலாம் நூற்றாண்டின் சட்ட அறிஞர்களுக்குப் புரியாமல் போன சில திட்டவட்டமான அல் குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களே காரணமாயின என்று ஒரு போதும் கூற முடியாது. ஆட்சி மாற்றத்திற்குப் பிரயோகிக்கப்பட்ட வன்முறை வழிமுறை அடைந்த தொடர் தோல்விகளும் அதன் விளைவாக உருவான பாரிய உயிர் அழிவும் பல்வேறு குழப்ப நிலைகளுமே இவ்விரண்டாம் கருத்து தோன்றக் காரணமாயின.

இந்தவகையில் புதிய மாற்றங்களுக்கும் புரட்சிகளால் நிகழ்ந்த சமூக விளைவுகளுக்கும் ஏற்ப புதியதொரு கருத்தை முன்வைக்கும் வகையில் இமாம் மாலிக் அடுத்து தோன்றுகின்றார்.


இறைவன் நாடினால் வளரும்....

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -6

இமாம் அபூ ஹனீபா நப்ஸ் ஜகிய்யாவின் சகோதரர் இப்றாஹீமுக்கு பைஅத் செய்யுமாறு தூண்டி வந்தார். அவரோடு போராட இணைந்து கொள்வது ஸுன்னத்தான ஹஜ்ஜுக்குச் செல்வதைவிட உயர்ந்தது என பத்வா வழங்கினார். ஹனபி மத்ஹபின் உயர்ந்த சட்ட அறிஞர்களான இமாம் ஜஸ்ஸாஸ், மக்கீ," பத்வா பஜாஜிய்யா" என்ற நூலின் ஆசிரியர் ஆகியோர் இமாம் அபூ ஹனீபாவின் கீழ்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். "முஸ்லிம் சமூகத்திற்கு வெளியே நிராகரிப்பாளர்களோடு போராடுவதைவிட, முஸ்லிம் சமூகத்தை அதனுள்ளே காணப்படும் நெறிபிறழ்வுகளிலிருந்து விடுதலை செய்யப் போராடுவது சிறந்தது."

ஆபுபக்கர் அல் ஜஸ்ஸாஸ் தமது அஹ்காமுல் குர்ஆன் என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்; அநியாயங்களோடும் அநியாய ஆட்சியாளர்களோடும் போராடுவது குறித்த அவரது கருத்து பிரபல்யமானது. எனவேதான் இமாம் அவ்ஸாஇ 'அபூ ஹனீபாவின் எல்லா விடயங்களையும் நாம் ஏற்றோம்; சகித்துக் கொண்டோம். கடைசியில் அவர் வாள் தூக்குவது பற்றிய கருத்தைக் கொண்டு வந்தார். அந்நிலையில் அவரை எம்மால் எற்க, சகிக்க, முடியாமல் போய்விட்டது' என்கிறார் [அஹ்காமுல் குர் ஆன் வா- 1, பக்.81]

நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதை வாயால் செய்வது கடமையாகும். அது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் வாளால் தீமையைத் தடுக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. [அஹ்காமுல் குர் ஆன், வா- 1, பக்.81]. அதாவது உபதேசமும் நற்போதனைகளும் பயன்படாதபோது பரிகாரம் என்ற கருத்தை அபூ ஹனீபா கொண்டிருந்தார்.

இது இமாம் அபூ ஹனீபா மட்டும் கொண்டிருந்த கருத்தல்ல. இப்னு ஹஜர் பத்ஹுல் பாரியில் குறிப்பது போன்று இது ஆரம்பகால அறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது. ஹிஜ்ரி முதாலம் நூற்றாண்டில் வாழ்ந்த அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்த பேரறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது.

அபூபக்கர் [ரழி] அவர்கள் கலீபாவாக பை அத் செய்யப்பட்ட பின்னர் நிகழ்த்திய முதலாவது உரையில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்; 'அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நான் வழிப்பட்டு நடக்கும் வரை எனக்குக் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தால் எனக்குக்கட்டுப்பட்டு நடப்பது உங்களுக்கு கடமையன்று' [ஸுரா;இப்னு ஹிஷாம் வா௪, பக்- 211]

உமர்[ரழி] அவர்கள்கீழ்வாருமாறு கூறுகின்றார்; 'யார் முஸ்லிம்களின் ஆலோசனையின்றி ஒரு தலைவருக்கு பைஅத் செய்கின்றாரோ அந்த பைஅத் செய்யப்பட்டவருக்கு பைஅத் செல்லுபடியாகாது. அத்தோடு பைஅத் செய்தவர்களின் பைஅத்தும் நிறைவேறாது' (முஸ்னத் அஹ்மத் வா- 1, பக்- 391).

இறைவன் நாடினால் வளரும்....