Monday, August 08, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -9

இந்த வகையில் குழப்ப நிலையின் போது புரட்சியாளனின் பக்கமோ ஆட்சியாளனின் பக்கமோ இமாம் மாலிக் நிற்கவில்லை. இருபிரிவிலும் யாருக்கும் உதவ முடியாது என அவர் கருதினார். ஏனெனில், இரு பிரிவினரும் பாவத்தில் வீழ்ந்துள்ளனர் என அவர் கருதினார். "கலீபாவுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு எதிராகப் போராடுவது ஆகுமா?" என இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "உமர் பின் அப்துல் அஸீஸ் போன்ற ஒருவருக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்களாயின் ஆகும்" என்றார். "உமர் இப்னு அப்துல் அஸீஸைப் போல் ஆட்சியாளன் இல்லாவிட்டால்" என மீண்டும் இமாம் மாலிக்கிடம் வினவப்பட்ட போது "அப்படியாயின் அல்லாஹ் ஓர் அநியாயக்காரன் மூலம் இன்னோர் அநியாயககாரனை பழிவாங்குகிறான். பின்னர் இருவரையுமே பழிவாங்குவான். விட்டு விடு" என்றார்.

இமாம் மாலிக் இலட்சியவாதத் தோற்றங்களோடு மட்டும் நின்றுவிடாது யதார்த்த நிலையையும் அவதானிக்கும் போக்குக் கொண்டவர். இந்த வகையில் இப்போக்கை அவர் கடைபிடித்தார். ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர்கள் செய்ய முயலும் சில தீய செயல்களை அழித்துவிடலாம். அதேவேளை முழுமையாக அவர்கள் சீர்திருந்தி உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஒருவர் அவர்களில் தோன்றவும் கூடும். எனவே, கவர்னர்கள் ஆட்சியாளர்களிடம் இமாம் மாலிக் சென்றார்; அவர்களுக்கு உபதேசித்தார்; வழிகாட்டினார்; நற்செயல்களின் பக்கம் அழைத்தார். அவர் செய்த ஆழ்ந்த உபதேசங்கள் பல இன்றும் காணக் கிடைக்கின்றன.

கலீபா அபூ ஜஃபர் மன்சூர், மஹ்தி, ஹாரூன் ரஷீத் போன்றோர் விடயத்தில் பல சந்தர்ப்பங்களில் இமாம் மாலிக் எடுத்த நிலைப்பாடுகள் மிகுந்த பாராட்டுக்குரியன; மிகுந்த கண்ணியத்திற்குரியன. இமாம் மாலிக் கலீபாக்களைச் சந்திக்கும் போது தம்மை மிகுந்த கண்ணியத்தோடு வைத்து கொள்வார். அது தனது உபதேசத்திற்கு நல்ல பாதிப்பைத் தரும் என்று அவர் கருதினார். ஆட்சியாளர்களைச் சூழ இருப்போர் அவர்களைப் பொய்யாகப் புகழ்வது அவர்களது பிழையான செயல்களையும் சிறந்ததாகக் காட்டும்போக்கு பற்றியே மாலிக் பெரிதும் பயந்தார். ஏனெனில், இந்த நிலையில் எவரின் உபதேசமும் வழிகாட்டலும் அவர்களிடம் பயன்கொடுக்காது போகும் என அவர் உணர்ந்தார்.

இமாம் மாலிக்கின் இத்தகைய சிந்தனைப்போக்கிற்கும் நடத்தைக்கும் அவரது இயல்பான அமைதியான போக்குக் கொண்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த வகையில் சமூக ஸ்திர நிலை சிறந்த மாற்றத்திற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்கும் என இவர் கண்டார். இந்நிலையில் மோசமான நிலையிலிருந்து நல்ல நிலைக்கும், நல்ல நிலையிலிருந்து மிகச் சிறந்த நிலைக்கும் படிபடியாகச் செல்ல முடியும் என அவர் கண்டார்.

இறைவன் நாடினால் வளரும்....

No comments: