Saturday, August 06, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -8

02.இமாம் மாலிக்கும் சமூக மாற்றமும்.

இமாம் மாலிக் ஹிஜ்ரி 92 இல் பிறந்து 179 இல் இறந்தார். 90 ஆண்டுகளைக் கொண்ட தனது இந்நீண்ட வளமிகுந்த ஆயுளில் இரு பெரும் அரசுகளைக் கண்டார். இக்காலப் பிரிவில் இஸ்லாமிய ஆட்சி விரிந்து பரந்திருந்தது. அவர் இக்காலப் பிரிவில் நிகழ்ந்த குழப்ப நிலைகளையும் பாரியளவு மனித உயிர்களைப் பலிகொண்ட புரட்சிகளையும் கண்டார். கவாரிஜ்களும் அலவிகளும் ஆயுதம் ஏந்திய புரட்சிகளையும் அவதானித்தார். இவற்றின் விளைவால் சத்தியம் நிலைநாட்டப் படவோ அசத்தியம் அழிக்கப்படவோ செய்யாது என்பதை உணர்ந்தார். சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளை அவர் அவதானித்தார். தனக்கு முன் வாழ்ந்த தனது ஆசிரியர்களிடம் அப்போது நிகழ்ந்த, அவர்கள் வாழ்ந்து அவதானித்த நிகழ்ச்சிகள் பற்றிக் கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இமாம் மாலிக் பெற்றார்.

'ஹர்ரா' யுத்தம் என்றழைக்கப்படும் யுத்த நிகழ்ச்சி பற்றியும் அவ்வேளை இறைதூதர் [ஸல்] அவர்களின் புனிதஸ்தலமான மதீனா எவ்வளவு தூரம் மோசமாக சீரழிக்கப்பட்டது என்பதையும் அதனைக் கண்ட தமது ஆசிரியர்களிடம் இமாம் கேட்டறிந்தார். அப்துல்லாஹ் இப்னுஸுபைருக்கும் அப்துல் மலிக் பின் மர்வானுக்கும் இடையிலான யுத்த நிகழ்வையும் இமாம் அறிந்தார். அப்போது அல்லாஹ்வின் புனிதஸ்தலமான கஃபாவும் கூட பாதிக்கப்பட்டதை அறிந்திருந்தார். மன் ஜனீக் என்ற கோபுர வடிவ ஆயுதத் தக்குதலுக்கு அது உட்பட்டது. முழு ஹிஜாஸ் பிரதேசமும் படைத் தரப்பினரின் வெறித்தனமான மிக மோசமான செயற்பாடுகளூக்கு உட்பட்டுச் சீரழிந்தது. உண்மையில் அப்பிரதேசம் மக்கள் அமைதி தேடிச் செல்லும் பூமி, புனித வணக்கக் கிரியைகளின் பூமி. ஆனால் கண்மூடித்தனமான குழப்பநிலைகள் இப்படித்தான் எதனையும் விட்டு வைப்பதில்லை; புனிதமும் புனிதமல்லாததும் அதற்கு ஒன்றுதான்.

இத்தகையதொரு நம்பிக்கையிழந்த சூழலில் வாழ்ந்தவர், மிகச் சரியான ஷுறா அடிப்படையிலான ஆட்சி தோன்றுவதில் நம்பிக்கை இழப்பது இயல்பே. அபூபக்கர், உமர், உஸ்மான் [ரழி] போன்றோர் கால உன்னத ஆட்சியை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடு இக்காலப் பிரிவில் மிகக் குறைவு என இச்சூழ்நிலையினைக் கருதுவது மிக யதார்த்தமானது என்பதில் சந்தேகமில்லை. எனவே,இருக்கும் நிலையை அங்கீகரிப்பது தவிர வேறு வழியில்லை. இஸ்லாம் வேண்டுகின்ற அந்த ஆட்சிமுறை என்பதலல்ல-யதார்த்தத்தை உணர்ந்து கொண்டதால் வந்த முடிவே இதுவாகும்.

இருக்கும் சமுக நிலையை மாற்ற முற்பட்டால் பெரும் தீமைகளுக்கு அது இட்டுச் செல்லும்; பாரிய சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும்; நல்ல விளைவுகளை எதிர் பார்ப்பது மிகக் கடினம் என்ற யதார்த்த உண்மைகளே இம்முடிவுக்கு வர அவரை நிர்பந்தித்தன. அத்தோடு அதுவரையிலும் நிகழ்ந்த போராட்டங்களும் ஆட்சிக்கெதிரான அனைத்து முயற்சிகளும் இருந்த நிலையை இன்னும் மிக மோசமான நிலைக்கே இட்டுச் சென்றுள்ளன என்ற வகையில் இரு விடயங்களில் ஒன்றைத் தெரிவு செய்ய முற்படும்போது குறைந்த பாதகம் கொண்டதைத் தெரிவு செய்தலே புத்திசாலித்தனமான செயல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவே இமாம் மாலிக் அமைதி நிலையைச் சமாதானத்தைத் தெரிவு செய்தார் என்றால் இருந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டார் என்பது அதன் பொருளன்று. அது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்; மாற்ற முடியாத ஒரு நிலை என்பதே காரணமாகும்.

இந்த வகையில் ஆட்சிக்கெதிரான புரட்சி பெரும் குழப்பநிலைக்கும் இரத்தம் சிந்தலுக்கும் இட்டுச் செல்லும் என அனுபவங்களின் அடியாக இமாம் மாலிக் உறுதியாக நம்பினார். எனவே, ஆட்சிக்கெதிரான புரட்சி சரியான நிலைப்பாடு என அவர் காணவில்லை.

ஆட்சிக்கெதிரான புரட்சி குழப்பநிலையை உருவாக்கும்; சமூக ஒழுங்குகளில் சீர்குலைவை ஏற்படுத்தும்; மக்கள் நிலைமைகளைக் குழப்பிவிடும்; உயிருக்கும் மானத்திற்கும் செல்வத்திற்கும் அழிவையும் பாதகத்தையும் ஏற்படுத்தும் என இமாம் கண்டார். திட்டமிட்டு பல வருடங்களில் சாதிக்க முடியாத அநியாயத்தைச் சில மணித்தியாலக் குழப்பம் ஏற்படுத்தி விடும் என அவர் கருதினார். இந்த வகையில், இமாம் மாலிக் ஆட்சிக்குக் கட்டுபடாது புரட்சி செய்யும் கருத்தை ஏற்கவில்லை. அப்படியான புரட்சியின் பிரச்சாரகராகவும் இருக்கவில்லை. அத்தகைய புரட்சிக்கு ஒத்துழைக்கவும் இல்லை. அதேவேளை, அவரது காலத்தில் வாழ்ந்த கவர்னர்களுக்கோ கலீபாக்களுக்கோ சார்பான பிரச்சாரகராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ அவர் இருக்கவில்லை. யாருடைய பிரச்சாரகராகவும் நிற்காது நடுநிலையைக் கடைபிடித்தலே சரியான நிலைப்பாடு என அவர் கண்டார். குழப்பநிலைகளை வெறுத்த இமாம் மாலிக்கின் இந்த நிலைப்பாடு, மதீனாவில் அவர்களது காலப்பிரிவில் ஒரு வித்தியாசமான நிலைப்பாடாக இருக்கவில்லை. மதீனாவின் அறிஞர்களும் இதே போக்கையே கொண்டிருந்தார்கள்.

பிரிவினைக்கு வழிவகுக்காது சமூகத்திலிருந்த ஆட்சிக்கு இமாம் மாலிக் கட்டுப்பட்டார்கள். ஆயினும், தனது காலத்து ஆட்சியாளர்களின் ஆட்சி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களுக்கும் அல்குர்-ஆனின் வழிகாட்டலுக்கும் முழுமையாக உட்பட்டிருந்தது என அவர் காணவில்லை. ஓரளவான சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்ற வகையிலேயே ஆட்சிக்குக் கட்டுப்படுதலை இமாம் மாலிக் ஏற்றார். குழப்பநிலைகள், பிரச்சினைகள் நீங்கிய அமைதியான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் ஏற்படுத்தும் பாதிப்பு பாரியதாக அமையலாம் என அவர் கருதினார்.

எனவே, நல்லுபதேசத்தினூடாகவும் உரிய இடத்தில் சத்தியத்தைப் பேசுவதனூடாகவும் சீர்திருத்த முயற்சியில் அவர் ஈடுபட்டார். வழிகாட்டும் பொறுப்புகளையும் அவர் ஏற்றார். ஆட்சியாளனைச் சீர்திருத்துவதிலும் கூடிய கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆட்சியாளனின் சீரிய நிலை ஆளப்படுவோரின் சீரான நிலைக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் நாடினால் வளரும்....

No comments: