Thursday, September 08, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -11

இமாம் அவர்களது காலத்து அரசியல் சூழல் பற்றி இங்கு விளக்குவது அவசியம். உமையாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள் இப்போது பலவீனமுற்றிருந்தன. ஷீயா, கவாரிஜ்கள் என்ற இரு முக்கிய பிரிவினரே ஆயுத முனையில் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடியவர்கள். இக்காலப்பிரிவில் இவர்கள் பலவீனமுற்றுப் போனதனால் குழப்ப நிலைகள் நீங்கி ஓரளவு அமைதி நிலவியது. இவர்கள் இரு சாராரும் ஆயுதங்களை வைத்து விட்டு பேனா என்ற ஆயுதத்தைத் தூக்க இப்போது ஆரம்பித்திருந்தார்கள். ஏனெனில் அரசு, ஆயுத மோதலுக்குப் பதிலாக கருத்துப் பரிமாறலொன்றை ஏற்படுத்தும் வகையில் பல அமர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த வகையில் பல சிந்தனைகளைச் சீர்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே, ஒவ்வொரு பிரிவினரும் ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக தங்கள் சிந்தனைகளை ஆதாரங்களோடு பதிய முனைந்தனர். கருத்து ரீதியாக தம் சிந்தனைகளைப் பாதுகாக்க முனைந்தனர். இப்பின்னணியில் மக்கள் பல்வேறு கலைகளிலும், அறிவுத் துறைகளிலும் ஈடுபாடு காட்டலானார்கள்.

மொழி அறிஞர்கள் இலக்கண விதிகளை வகுக்க ஆரம்பித்தார்கள். கலீல் இப்னு அஹ்மத் போன்ற இலக்கிய அறிஞர்கள் யாப்பிலக்கணத்தை வகுக்கலானார்கள். இஸ்லாமிய சட்டம், ஹதீஸ், தப்ஸீர் போன்ற துறைகள் இவ்வகையில் வகுக்கப்படலாயின. அப்போதைய இஸ்லாமிய அரசும் மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சீனா வரையில் பரந்து விரிந்திருந்தது. எனவே, வளர்ச்சியடைந்த நகரங்கள் பல உருவாயின.ஒ வ்வொரு நகரும் பிரசித்தி பெற்ற அறிஞர்கள் பலரால் பிரபல்யம் ஆகியது. விளைவாக அறிவு தேடுவதற்கான பயணங்களும் அதிகரித்தன.

அப்பாஸிய கலீபாக்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், வீண் விளையாட்டுக்களில் சற்று அளவு மீறி ஈடுபாடு கொண்டவர்களாகவும், தடுக்கப்பட்ட, ஹராமான சில செயல்களை நெருங்கிச் சென்றவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய சில பலவீனங்கள் அவர்களில் பலரிடம் காணப்பட்டபோதிலும் அவர்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள். அறிஞர்களை நெருக்கமாக்கிக் கொண்டார்கள். அவர்களை உயர்த்தி மதித்தார்கள். அவர்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். அத்தோடு அறிவுக்கான வழிகளையும்,படி ப்பதற்கான வசதிகளையும் நன்கு ஏற்படுத்தினார்கள். மார்க்கத்திற்குப் புறம்பான சிந்தனைகளோடும், முஃதஸிலாக்களோடும் போராட அறிஞர்களின் உதவியையும் பெற்றார்கள். மஃமூன், வாஸித், முஃதஸிம் போன்ற சிலர் முஃதஸிலாக்களுக்கு ஆதரவாக நின்று அறிஞர்களை ஒதுக்கி அவர்களைத் துன்புறுத்தினார்கள் என்பது உண்மையாயினும் அப்பாஸிய கலீபாக்களில் ஏனையோர் அவ்வாறு இருக்கவில்லை. குறிப்பாக ஹாரூன் ரஸீத் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள், ஹதீஸ் துறை அறிஞர்கள், உபதேசகர்கள் போன்றோரைத் தனக்கு நெருக்கமாக வைத்து கொண்டார். முஃதஸிலாக்களை அவர் சிறை வைத்ததாக வரலாற்றில் பதிவுள்ளது. கலீபா முதவக்கிலும் முஃதஸிலாக்களை ஒதுக்கி இஸ்லாமிய அறிஞர்களை மீண்டும் பலம் பெற்றவர்களாக மாற்றினார்.

இந்த வகையில் பொதுவாக அப்பாஸிய கலீபாக்கள் சிலபோது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு இருந்தாலும் அறிஞர்களின் உபதேசங்களைச் செவிமடுத்தார்கள்.

அறிஞர்களுக்குக் கிடைத்த இந்த அந்தஸ்தின் காரணமாக அறிவு தேடும் போக்கு சமூகத்தில் வளர்ந்தது. குறிப்பாக அறிவுமன்றங்கள் கலீபாக்கள், கவர்னர்களின் மாளிகைகளில் தொடர்ந்தமையும் அங்கு கவிஞர்களும், சட்ட அறிஞர்களும், பல் தரப்பட்ட அறிவுத்துறைகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் போட்டி போட்டுக் கொண்டு சென்றமையும் அறிவு தேடுவோருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.

இறைவன் நாடினால் வளரும்....


நூலாசிரியர் பற்றி... முன்னுரை பதிப்புரை முந்தைய பகுதி

No comments: