Tuesday, September 20, 2011

சமூக அரசியல் மாற்றம் – இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சில சிந்தனைகள்! -12

04. இமாம் அஹ்மதும் சமூக மாற்றமும்

அரசியல் பற்றிய இமாம் அஹ்மதின் சிந்தனைகள், அவரது பொதுவான சிந்தனைப் போக்கான பாரம்பரிய சிந்தனை முறைமையைக் கொண்டதாக அமைந்திருந்தன.

பெரும்பாலான ஸஹாபாக்களும் தாபியீன்களும் கொண்டிருக்கும் கருத்தை இங்கு இமாம் அஹ்மத் முதன்மைப்படுத்தினார். கிலாபத், பைஅத் போன்ற அம்சங்கள் மட்டுமன்றி பொதுவாக சட்ட சிந்தனையிலும் இமாமின் போக்கு இவ்வாறு அமைந்திருந்தது. அத்தோடு இமாம் யதார்த்தபூர்வமான பார்வைக் கொண்டிருந்தார். குழப்ப நிலைகளைத் தவிர்த்து அமைதியும் சமாதான நிலையும் நிலவ வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பேணுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற போக்கும் இவரிடம் இருந்தது.
---------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் இது ஒருவகையாகும். அல்குர்-ஆன், ஸுன்னா, ஸஹாபாக்கள், தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்தும் போக்கே இதுவாகும். அல்குர்-ஆனினதும் ஸுன்னாவினதும் வசனங்களுக்குக் காரணங் காணுவதில் இவர்கள் ஆழ்ந்து போக மாட்டார்கள். அல்குர்-ஆன் ஸுன்னாவுக்கு அடுத்தபடியாக ஸஹாபாக்களின் கருத்துக்களை முதன்மைப்படுத்துவார்கள். தாபியீன்களின் பெரும் அறிஞர்களின் கருத்துக்கு அல்லது அவர்களில் பெரும்பாலோரது கருத்துக்கு இவர்கள் ஒரு பெறுமானத்தைக் கொடுப்பர்.(மொழிபெயர்ப்பாளன்).
---------------------------------------------------------------------------------------------------------
அநியாயக்காரனாக இருந்தாலும் தன் பலத்தால் ஆட்சிக்கு வந்த இமாமுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை விட அவருக்குக் கட்டுப்படுவதே கடமையானது எனவும் அவர் கூறினார். ஒரு சர்வாதிகார ஆட்சியாளன் பல வருடங்கள் திட்டமிட்டுச் செய்யும் அநியாயங்களை விட கூடுதலான அநியாயங்களை அவனுக்கெதிரான ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தும். இது பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தி விடும் என இமாம் இக்கருத்திற்கு நியாயம் கூறினார். இக்கருத்து இமாம் மாலிக்கின் கருத்தை ஒத்திருக்கிறது எனக் கூறலாம்.

ஆயினும் இமாம் மாலிக்குக்கும், அஹ்மதுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இங்கு அவதானிக்க வேண்டும். இமாம் மாலிக் அரசுக்கெதிரான் ஆயுதப் போராட்டத்தின் குழப்ப நிலைகளையும் கண்டார். ஆட்சியொன்று கவிழ்வதையும் அதன் பாரிய குழப்ப நிலைகளையும் கண்டார். ஏனெனில், இமாம் மாலிக் இருவேறு கிலாபத்துக்களைக் கண்டவர். இரு காலப்பிரிவுகளிலும் வாழ்ந்தவர். இவ்விரு காலப்பிரிவுகளிலும் போராட்டங்களும் குழப்ப நிலைகளும் வலுத்திருந்தன. அவற்றை இமாம் மாலிக் கண்டதோடு அக்காலப் பிரிவுகளிலேயே வாழ்ந்தார். எனவே, அவற்றால் அவர் பாதிக்கப்பட்டார்.

ஆயினும், இமாம் அஹ்மத் குழப்பநிலைகளை அதிகமாக அவதானிக்கவில்லை. அவரது காலப்பிரிவு குழப்ப காலப்பிரிவை அண்மித்ததாக இருக்கவும் இல்லை. அமீனுக்கும், மஃமூனுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தையும் அதனால் விளைந்த குழப்பநிலையையுமே இமாம் அஹ்மத் அவதானித்தார். அக்குழப்ப நிலையின் விளைவு இறுதியில் மோசமாக அமைந்ததையும் இமாம் கண்டார்.

அதாவது பாரசீக ஆதிக்கம் ஆட்சியில் வேரூன்றியது. பித்அத்கள் பரவின. இஸ்லாத்துக்குப் புறம்பான சிந்தனைகள் அதிகாரபீடத்தில் ஆதிக்கம் செலுத்தின. பித்அத் போக்காளர்கள் ஆட்சியாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தினர். அவர்களால் இமாம் சிறைவாசத்திற்கு உட்பட்டார்; துன்புறுத்தவும் பட்டார். மஃமூன், முஃதஸிம், வாஸிக் என தொடராக வந்த மூன்று ஆட்சியாளர்களால் அவர் துன்புறுத்தப்பட்டர். எனினும், இவை எதுவும் இமாம் அவர்களது உள்ளத்தில் பழிவாங்கும் உணர்வையோ ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சிந்தனையையோ விதைக்கவில்லை.

சிறையும் அங்கு கிடைத்த சித்திரவதைகளும் சட்டங்களை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவில்லை. அப்படி நடந்திருப்பின் அது மனோஇச்சையின் விளைவாகப் போயிருக்கும் அல்லது தமது காலப்பிரிவு ஆட்சியாளர்கள் கொடுத்த துன்பங்களின் விளைவாகப் போயிருக்கும். ஆதாரபூர்வமான ஸுன்னா, இஸ்லாத்தின் ஆரம்ப சந்ததியினரின் நடைமுறை, அவர்களது அனுபவங்கள் என்பவற்றிலிருந்தே கிலாபத் பற்றியும், அதற்கு எதிராக ஆயுதம் தூக்குவது பற்றியுமான சட்டங்களை இமாம் வகுத்தார். அத்தோடு இமாம், சமூக நலன்களையும் கவனத்தில் கொண்டார். சாதாரண எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இமாம் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தூக்குவதை மறுத்தார். ஆட்சியாளர் நிலை எவ்வாறு இருப்பினும் அவருக்கெதிராக ஆயுதம் தூக்குவது அத்துமீறிய நடவடிக்கை என்றே இமாம் கணித்தார். தன்னைச் சித்திரவதை செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குவதைக் கூட இவ்வாறே இமாம் கருதினார்.

இறைவன் நாடினால் வளரும்....

நூலாசிரியர் பற்றி... | முன்னுரை | பதிப்புரை | முந்தைய பகுதி

No comments: