தலைமை மாற்றம்
பொருளாதாரத்தின் தேவை, விவேகமும் பேரவாவுமிக்க முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் அரசாங்கக் கல்வி நிலையங்களுக்குத் துரத்தியது. அங்கு அவர்கள் பெற்ற கல்வி, அவர்களைத் தம் சொந்த பாரம்பரியத்திலிருந்தும் பிரித்து விட்டது. அவர்கள் மேனாட்டுக் கருத்துக்களை ஏந்தி வெளியேறியதோடு, தம் சொந்தக் கலாச்சாரத்தில் பெறுமதி வாய்ந்த எதுவுமில்லையென்றும் தம் சென்ற கால வரலாற்றில் தாம் பெருமைப்படக்கூடியது ஒன்றுமில்லை என்றும் நம்பினர்.
மேனாட்டு வாழ்க்கை முறையினை மிக நுணுக்கமாகப் பின்பற்ற அதன் மீதிருந்த ஆவல் அவர்களுக்கு ஊக்கமூட்டியது. அவர்கள் பெயரளவிலேயே முஸ்லிம்களாக இருந்தனர். எனினும் முஸ்லிம்களின் தலைமை அவர்களுடைய கைகளுக்கே செல்ல வேண்டிய நியதி இருந்தது. அவர்கள் பெற்றிருந்த சில சிறப்புரிமைகள் இதற்குக் காரணமாகும். அவர்கள் ஆட்சியாளர்களுடன் நெருங்கிப் பழகினர்; அவர்களின் மொழியையே பேசினர்; அவர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் சிந்தனைப் போக்கையும் பகிர்ந்து கொண்டனர். ஆதலால் அவர்களே முஸ்லிம் சமூகத்தில் ஆட்சியாளர்களிடம் மிகச் செல்வாக்குப் பெற்ற பிரிவினராகக் காணப்பட்டனர். அவர்கள் பேச்சாற்றலும், நிர்வாகத் திறமையும் பெற்றிருந்தனர். எனவே அவர்கள் இயல்பாகவே அரசாங்கத்தின் முக்கியப்பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.
அந்நிய நாட்டு அரசாங்கம் வேண்டுமென்றே மேனாட்டுக் கல்வி கற்றவர்களை முக்கிய பதவிகளுக்கு நியமிக்கும் கொள்கையைக் கடைபிடித்தது. உண்மையில் கீழைத்தேய கல்வி கற்றவர்களை உயர்பதவிகளுக்கு நியமிப்பதற்கு சட்ட முறையான எந்தத் தடையும் இருக்கவில்லை. நடைமுறையில் அத்தகையோர் உயர் பதவிகளுக்கு நியமிக்காது விடப்பட்டனர். மேனாட்டுக் கல்விப் பயிற்சி பெற்றவர்களே அப்பதவிகளுக்கு அருகதை உடையோராகக் கருதப்பட்டனர். ஒவ்வொரு குடியேற்ற ஆட்சி நாடும், மேனாட்டுக் கல்வி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கையையே பின்பற்றியது. ஆதலால் மேனாட்டு ஆதிக்கம் முஸ்லிம் நாடுகளிலிருந்து பின்னடைந்த பொழுது மேனாட்டுக் கல்வி கற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய நிலையிலிருந்தனர்.
அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின், இஸ்லாமிய கோட்பாடுகளை அடிநிலையாகக் கொண்ட ஓர் அரசு தாபிக்கப்படுமென்று முஸ்லிம் பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புதிய அரசு அந்நிய ஆட்சியாளர் அமைத்திருந்த அதே அரசின் மங்கலான பிரதியே என்பதைக் கண்டு அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தம் தலைவர்கள் முஸ்லிம்களாயினும் மேனாட்டுப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர்கள் என்பதையோ, அத்தலைவர்களின் கருத்துக்களும் இலட்சியங்களும் மேனாட்டவை என்பதையோ அம்மக்கள் உணரவில்லை. அத்தலைவர்கள் அரைகுறை இஸ்லாமிய அறிவு பெற்றிருந்தமையால் இஸ்லாமிய கலாச்சாரத்திலிருந்தோ கொள்கையிலிருந்தோ அவர்கள் ஊக்கமும் உணர்ச்சியும் பெறமுடியவில்லை. இதன் பயனாக முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு புதிய இழுபறி நிலை தோன்றியது. மக்கள் ஒரு திசையில் இழுக்க, தலைவர்கள் வேறு திசையில் இழுத்தனர். ஓர் உண்மையான இஸ்லாமிய அரசின் பக்கம் செல்ல மக்கள் விரும்பினர். ஆனால் தலைவர்களோ மேனாட்டுப்பாணியில் ஓர் அரசை அமைப்பதற்கு ஒற்றைக்காலில் நின்றனர்.
வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.
Tuesday, July 25, 2006
இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (17)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ_வுக்கே எல்லா புகழும். நான் இந்த புத்தகத்தை படித்து விட்டு இதை எப்படியாவது மக்கள் மன்றத்திலே எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். இந்த பணியை முன் கூட்டியே செய்த களஞ்சியம் வலைப்பதிவுக்கு நன்றி பல. இவை போன்ற புத்தகங்கள் வெளியிடுவது காலத்தின் கட்டாயம். 1963 ம் ஆண்டு மௌலானா மௌதூதி சொன்னது இன்றும் பொருந்தி போகிறது.
Post a Comment