விடுதலை இயக்கம்
மேனாடுகளிலிருந்து பெற்ற அரசியல், பொருளாதாரக் கருத்துக்கள் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் விடுதலை இயக்கத்திற்கு ஊக்கமளித்தன. விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் ஒரே வகையான நிகழ்ச்சித் தொடர் இடம் பெற்றது. எல்லா நாடுகளிலும் மேனாட்டுக் கல்வி பெற்றவர்களே விடுதலை இயக்கத்தின் முன்னணியில் நின்றனர். எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தின் பெயரால் வேண்டுகோள் விடுப்பது கொண்டே முஸ்லிம் பொதுமக்கள் செயல்படத் தூண்டப்பட்டனர்.
இப்போராட்டத்தின் பின் தோன்றிய ஆட்சி எல்லா விடயங்களிலும் முஸ்லிம்கள் எதிர்பார்த்ததை விட மிகத் தாழ்ந்ததாகவே அமைந்தது. மேனாட்டுக் கல்வி கற்றவர்களே விடுதலை இயக்கத்தை தோற்றுவித்து, வழிகாட்டி, கட்டுப்படுத்தி நடாத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பெற்றிருந்தனர். அவர்கள் தம் கால்களை நிகழ்காலத்தில் உறுதியாக பதித்து வைத்திருந்தனர். நிகழ்கால உண்மை நிகழ்வுகளைப்பற்றுச் சரியாக அறிந்திருந்தனர். அவர்கள் தம் மேனாட்டு எதிரிகளின் பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்து வைத்திருந்தனர்; மேனாட்டவர்களின் மனோநிலையை நன்கு உணர்ந்திருந்தனர். ஆதலால் தமது வாதப் பிரதிவாதங்களையும், கோரிக்கைகளையும் மேனாட்டவர் புரிந்து கொள்ளத் தக்க வகையில் எடுத்துரைக்க முடிந்தது.
எனவே மேனாட்டுக் கல்விப் பயிற்சி பெற்றவர்களே தம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லத்தக்கவர்கள் என முஸ்லிம் பொதுமக்கள் தயக்கமின்றி நம்பினர். பழைய முஸ்லிம் கல்வி நிலையங்களில் கல்வி கற்றோர், இப்பணிக்குத் தாம் பொருத்தமற்றவர்கள் என உணர்ந்தனர். ஆதலால் மேனாட்டுக் கல்வி பெற்றோரின் தலைமையில் தாமும் திருப்தி கண்டனர். அவர்கள் நவீன அரசியல், பொருளாதார அமைப்புக்களின் பெருஞ் சிக்கல்களைக் கண்டு வாயடைத்துப் போயினர். அவர்களால் போர்க்களத்தில் சிங்கமெனப் போரிட முடிந்தது. ஆனால் எதிரிகளுடன் மாநாட்டு மேடைகளில் அமர்ந்து ஆணித்தரமாக வாதிட இயலவில்லை. ஆதலால் மேனாட்டவர்களாக மாறிவிட்ட முஸ்லிம்களின் தலைமையை அவர்களும் ஏற்றுத் திருப்தியடைய வேண்டியதாயிற்று.
எவ்வாறாயினும் இஸ்லாத்தின் பெயரில் மட்டும் தான் பொதுமக்களை ஒன்று திரட்ட முடியும் என்பதை இத்தலைவர்கள் உணர்ந்தனர். "இஸ்லாமிய அரசு" என்ற சுலோகம் முஸ்லிம் பெருமக்களிடையே அளப்பரிய உணர்ச்சி வெள்ளத்தைத் தோற்றுவித்தது. கலப்பற்ற தூய்மையான இஸ்லாத்தை, முழுமையான இஸ்லாத்தைத் தரத்தக்க ஒரு குறிகோள் என்று அம்மக்கள் நம்பிய குறிகோளை அடைவதற்கான போராட்டத்திற்கு இடையறாது முழு முயற்சி செய்ய அவர்கள் தூண்டப்பட்டனர். உண்மை முஸ்லிமாக வாழக்கூடிய ஓர் அரசைப் பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களின் வேணவா.
விடுதலைப் போராட்டத்திற்குதித்து, வற்றாத பேரார்வத்துடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாயினர். அரும்பெருந்தியாகங்கள் செய்தனர். எண்ணற்ற உயிர்களையும் பெருஞ்சொத்து, செல்வத்தையும் அர்ப்பணித்து இறுதியில் வெற்றி வாகை சூடினர்.
போராட்டப்புயல் ஓய்ந்தபின், தமக்கென சொந்தமான ஓர் அரசு அமைக்கப்பட்ட போது அது தாம் கனவு கண்ட அரசல்ல என்பதை உணர்ந்தனர். எந்த அரசைத் தாபிக்கத் தாம் போராடி உதவினரோ அந்த அரசுக்கும், அவர்கள் அந்நியராட்சியின் போது அனுபவத்தில் கண்ட அரசுக்குமிடையே வேறுபாடில்லை என்பதை தெளிவாகக் கண்டனர். இரண்டுக்குமிடையே இருந்த ஒரே வேறுபாடு, புதிய அரசு முஸ்லிம்களால் நடத்தப்பட்டது என்பது மட்டுமே. இந்நிலை கண்டு அம்மக்கள் மருட்சி நீங்கி ஏமாற்றமடைந்தது இயல்பே.
வாக்குக்கும் செயலுக்குமிடையே இத்தனை பெரிய இடைவெளி இருக்கக்காரணம் என்ன? இவ்வினாவுக்கு விடையளிக்க விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களின் நோக்கங்களை நெருங்கிப் பார்த்தல் அவசியமாகும்.
மக்களும் அவர்களின் தலைவர்களும் தம் நோக்கம் இஸ்லாமிய அரசு ஒன்றினை நிறுவுவதாகும் என்று பிரகடனப்படுத்தினர். ஆனால் இஸ்லாமிய அரசு என்றால் என்ன என்பது பற்றி இரு சாராரும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய அரசினைப் பற்றி அவர்களிடையே பொதுவான கருத்துக்கள் இருக்கவில்லை. இஸ்லாமிய அரசு என்பது இறைத்தூதர் அவர்களது காலத்திலும் அவர்களைப் பிந்தொடர்ந்த கலீபாக்களது காலத்திலும் இருந்த அரசின் ஒரு பிரதியாக அமையும் என்று மக்கள் நம்பினர். ஆனால் ஐரோப்பிய அரசுகளுக்கு எவ்வகையிலும் சளைக்காத ஒரு நவீன இலௌகிக அரசை அமைப்பதே தலைவர்களின் ஆசை.
தலைவர்களிடம் அதிகாரம் இருந்தது. ஆதலால் அவர்கள் தாம் எண்ணியதையே செய்தனர். எனினும் பொதுமக்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளவோ புதிய அரசுடன் இணங்கிச் செல்லவோ முடியவில்லை. இடையிடையே நெருக்கடி நிலை தோன்றி மறைந்தது. ஆனால் முற்றாக நீங்கவில்லை. இந்நிலை தொடர்ந்து நிலை பெறவே முஸ்லிம் சமுதாயத்தில் மிகப் பாரதூரமானதொரு சமநிலையற்ற தன்மை உருவாகியது. முஸ்லிம் மக்கள் தமது குறிக்கோளான ஓர் உண்மை இஸ்லாமிய அரசினை அடைய பெறும் வரை திருப்தியுற மாட்டார்கள்.
வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.
Monday, August 14, 2006
இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (18)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment