அன்னிய ஆட்யின் கீழ் சிறுவரும் சிறுமியரும் பெற்ற புதுமுறைக் கல்வியினால் விளைந்த ஒழுக்கக் கேட்டை மிகைப்படுத்திக் கூறுவது கடினமாகும். அவர்கள் தம் சொந்த கலாச்சாரத்திற்குப் பதில் இழிந்த, பகட்டு மிக்க மேனாட்டுப் போலிக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். மேனாட்டு அறிவு தான் மிக்க உண்மையானது, நம்பத்தக்கது என்றும் மேனாட்டு ஒழுக்க முறை தான் தூய்மை மிக்கதென்றும் மேனாட்டு நாகரிகமே மனித மூளை தோற்றுவித்த மிகச் சிறந்த நாகரிகம் என்றும் அவ்விளையோர் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கப்பட்டது.
பிரபஞ்சத்தின் மர்மங்களைத் துலக்குவதற்குச் சிறந்த கருவி மேனாட்டு அறிவு தான் என்றும், கீழைத்தேச அறிவு காலங்கடந்த மூடநம்பிக்கைகளின் தொகுப்பு என்றும் அவர்கள் நம்புமாறு செய்யப்பட்டது. அவர்கள் தம் சொந்தப் பண்பாட்டுச் சோலையிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டனர். அதே வேளையில் அவர்கள் மேனாட்டுப் புதுக் கலாச்சாரத்தில் நிலையாக நிற்கவும் தவறி விட்டனர். மனிதன் தனது சென்ற காலத்தின் அடிப்படையிலேயே நிகழ்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால் நவீன கல்விப்பயிற்சி பெற்றவர்களுக்குச் சென்ற காலம் என்றொன்று இருக்கவில்லை.
அவர்கள் மேனாடுகளிலிருந்து இறக்குமதி செய்த கருத்துக்களின் அடிப்படையில் தம் வாழ்க்கையை நிர்மாணிக்க முயன்று தோல்வியடைந்தனர். அவர்களின் படைப்பாற்றல் அணைக்கப்பட்டு, அவர்கள் அனைத்தையும் மேனாடுகளிலிருந்து இரவல் வாங்கும் நிலையை அடைந்தனர். ஒழுக்கத்தின் வேர்கள் பிடுங்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள், மேனாட்டிலிருந்து வீசிய காற்றிடமே தஞ்சம் புக வேண்டியதாயிற்று. அவர்கள் தம் கொள்கைப்பற்றை சனநாயகத்திலிருந்து சோஷலிஸத்துக்கும், சோஷலிஸத்திலிருந்து கம்யூனிஸத்துக்கும் மாற்றி தவறுக்கு மேல் தவறிழைத்தனர்.
மேனாட்டு முத்திரை பொறித்த எந்த புது "இஸத்தை"யும் உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக இருந்தனர். இன்றைய முஸ்லிம்களின் அறிவுத் துறையின் மலட்டுத்தன்மை அவர்கள் தம் மேனாட்டு ஆசிரியர்களிடமிருந்து பெற்ற கல்விப்பயிற்சியின் நேரடிப் பயனாகும். தம் சொந்தக் கலாச்சாரத்திலிருந்து அவர்கள் போசாக்குப் பெற இயலாதிருந்தனர். ஆதலால் அவர்களின் சிந்தனா வளர்ச்சி தடைப்பட்டு குன்றிக் குறுகிவிட்டது.
மேனாட்டுக் கல்வியில் குறைகள் நிறைந்திருந்த போதும் அது முஸ்லிம்களிடையே பெரு மதிப்பு பெற்று விட்டது. குறிப்பாக சில விவேகமிக்க பொருளாதார வலிமை கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் மொய்த்துக் கொண்டனர். காரணம், இக்கலா நிலையங்களில் அளிக்கப்படும் கல்வியை அவர்கள் அதிக விலைக்கு விற்கக் கூடியதாக இருந்தமையாகும்.அது அவர்களை அதிக வருவாயுடைய தொழில்களுக்குத் தகைமையுடையவர்களாக்கியது. அத்துடன் உயர்ந்த சமூக அந்தஸ்த்தையும் பெற்றுக் கொடுத்தது. அக்கல்வி தனது பக்த கோடிகளுக்கு செல்வமும் அதிகாரமும் மதிப்பும் தருவதாக உறுதியளித்தது.
முஸ்லிம்களின் பழைய கல்விப்பயிற்சி நெறிகள் புகழிழந்து, சோர்வுற்றுக் கிடந்தன. இஸ்லாமிய கலாச்சாரம் வாடி வதங்கிய செடியாக தள்ளாடி நின்றது. அந்நிய ஆட்சி முஸ்லிம் சமுதாயத்தில் தனது தீய செல்வாக்கைப் பிரயோகித்தது. ஆனால் அது அளித்த கல்வியே அதன் நஞ்சு கலந்த செல்வாக்கைச் செலுத்துவதற்கான கருவியாக அமைந்தது.
வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.
Monday, May 29, 2006
இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (16)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment