மூன்றாவது கட்டம்: அன்னியர் ஆட்சியும் அதன் விளைவுகளும்.
எமது வரலாற்றின் மூன்றாவது கட்டத்தை விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை. அதிலிருந்து நாம் மீட்சி பெற்று சில ஆண்டுகளே ஆகின்றன. அக்கட்டம் எப்படியிருந்தது என்பதை மறந்து விடாது நினைவில் வைத்திருக்கும் பலர் எம்மிடையே இருக்கின்றனர். இருப்பினும் மக்களின் சுதந்திரத்தின் மீது அந்நியர் ஆட்சி விதித்த கட்டுப்பாடுகள் பற்றி மங்கலான நினைவுள்ள ஒரு புது சந்ததியினர் வளர்ந்துள்ளனர். அவர்களின் பயன் கருதி இங்கு அந்நியர் ஆட்சியின் முக்கியமான ஒரு சில அம்சங்கள் மட்டும் விளக்கப்படுகின்றன.
புதுக்கல்வி முறையின் கொடிய பெறுபேறுகள்
முஸ்லிம் உலக மக்கள் அந்நியர் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியற்று துயரமிக்க வாழ்க்கை நடாத்தினர். அவர்கள் பெருங் கொடுமைகளை அனுபவித்தனர்; இழிவுபடுத்தப் பட்டனர். அவர்கள் தமக்குச் சொந்தமான வளமார்ந்த நிலங்களை இழந்தனர். அவர்களுக்கு மானியமாக அளிக்கபப்ட்டிருந்த சொத்துக்களும் பறிக்கப்பட்டன. அவர்களது சொத்தும் கவுரவமும் எப்பொழுதுமே ஆபத்தான நிலையிலிருந்தன. ஆனால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமை, அவர்களுக்குப் பொருந்தாத ஒரு கல்வித் திட்டம் திணிக்கப்பட்டதாகும். இக்கல்வி முறையின் கீழ், முஸ்லிம்களின் சென்ற காலம் மனித வரலாற்றில் ஒரு பரிதாபமிக்க கதையாக முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டு, அவர்களின் சென்ற காலத்தின் மீது வெறுப்பூட்டப்பட்டது. தம் மூதாதையர் பல நூற்றாண்டுகளாகப் போற்றி வந்த உயர்ந்த கருத்துக்களையும் பண்புகளையும் கைவிடுமாறு அவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது. ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இஸ்லாம் ஆழமாகப் பதிந்திருந்த உயர்ந்த வாழ்க்கை இலட்சியங்கள் ஈவிரக்கமின்றி பிடுங்கி எறியப்பட்டன. அவற்றுக்கு மாறாக புவி வாழ்க்கை முன்னேற்றம், உலக வாழ்க்கை வெற்றி என்ற தாழ்ந்த இலட்சியங்கள் மீது கவனஞ் செலுத்த அவர்களுக்குக் கல்விப்பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்கக்கால முஸ்லிம்களின் சிறந்த பண்புகளை உருவாக்கிய ஒழுக்கக் கோட்பாடுகள் நவீன கல்வி கற்றவர்களைக் கவரவில்லை. உயர் இலட்சியங்களுக்காகப் பாடுபட்டு வாழும் மேலான வாழ்க்கை வாழ்வதற்கான ஆர்வம் தணிக்கப்பட்டு, சொகுசாக வாழ்வதற்கான ஆர்வம் வளர்க்கப்பட்டது.
வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.
Tuesday, May 16, 2006
இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (15)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment