Monday, March 20, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (11)

கல்வியை வளர்ப்பதற்கு அரைகுறையாக எடுக்கப்பட்ட முயற்சிகள் முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்ய இயலவில்லை. பெரும்பான்மையான மக்கள் அறியாமையிலேயே உழன்றனர். ஆதலால் அரச அலுவல்களில் விவேகத்துடன் கூடிய அக்கறை கொள்ளும் தகைமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. அவர்கள் எளிதில் மன்னர்களுக்கு வசப்படக்கூடிய பிரசைகளாகவே இருந்தனர். இஸ்லாத்தின் சனநாயக இலட்சியம் அவர்களைக் கவரவில்லை. அதிகாரத்திற்கு கண்மூடித்தனமாக அடிபணிதல் முடியாட்சியில் ஒரு நல்ல பணியாகக் கருதப்பட்டது. தன்மான உணர்ச்சிக்கு அங்கு இடமே இருக்கவில்லை.

இஸ்லாம் தனி மனிதனின் வளர்ச்சியை ஆதரித்தது. ஆனால் முடியாட்சி அதனைத் தனது அதிகாரத்திற்கு ஓர் இடர்பாடாகக் கருதியது. இஸ்லாமிய இலட்சியம் மக்கள் உள்ளங்களில் வலுவடையாததன் காரணமாகவே முடியாட்சி தோன்றிற்று. அது தாபிக்கப்பட்டதும் இஸ்லாமிய இலட்சிய உணர்வு புத்துயிர் பெறவோ, மீண்டும் வலிமை பெறவோ அது இடமளிக்கவில்லை. இவ்வாறாக முடியாட்சியின் கீழ் தொடக்க கால இஸ்லாமிய உணர்வு படிபடியாக வற்றி, முஸ்லிம்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் நிலையிலிருந்து அகன்றது. மன்னர்களதும் எதேச்சதிகார ஆட்சியாளர்களதும் ஆதிக்கம் நிறைந்த இக்காலகட்டம் பற்றி இஸ்லாமிய வரலாற்றில் படிக்கும் போது பெரும் வேதனையும் சோர்வும் ஏற்படுகின்றன.

இக்காலப் பிரிவிற் கூட கலை, இலக்கியத் துறைகளில் முஸ்லிம்கள் நிலைநாட்டிய சாதனைகள் வியக்கத்தக்கன என்பதில் ஐயமில்லை. ஆனால் இஸ்லாத்தின் மகோன்னத போதனை பற்றிய ஆழ்ந்த நோக்கு இருந்ததற்கான அல்லது சமயத்துறையில் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான எச்சான்றும் காணப்படவில்லை. ஓர் உயிர் துடிப்புள்ள சன்மார்க்க நெறியின் இடத்தை உணர்ச்சிகளை மரக்கச்செய்யும் வழிப்பாட்டுச் சடங்குகள் பிடித்துக் கொண்டன.

முஸ்லிம் வரலாற்றின் துயர்மிக்க இக்காலப்பிரிவினது அடையாளங்கள் இன்றைய முஸ்லிம் சமுதாயத்திலும் காணக்கிடைக்கின்றன. இஸ்லாத்திற்கு விரோதமான பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள் ஆகியவற்றில் ஈடுபடுவோராக மட்டுமன்றி இஸ்லாத்திற்கு முரண்பட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களாகவும் இலட்சோபலட்சம் முஸ்லிம்கள் இன்று இருக்கின்ற்னர். இவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்களின் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றபொழுது விட்டொழித்த பிற கொள்கைகளிலிருந்து பெறப்பட்ட பல அம்சங்களை அடக்கியதாக இவர்களின் இஸ்லாம் அமைந்துள்ளது. அம்மூதாதையர் இஸ்லாம் பற்றிய தங்களது தெளிவற்ற மங்கலான கருத்துக்களை பிற சந்ததியினருக்குக் கையளித்துச் சென்றனர். உண்மையில் இக்கருத்துக்கள் இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் சார்ந்தவையாகும்.

இதன் விளைவு யாதெனில் இன்றைய முஸ்லிம்களின் இஸ்லாம், இஸ்லாத்தினதும் பிற சமயங்களினதும் நம்பிக்கைகளின் கலவையாக இருத்தலாகும். இந்து சமயம், பௌத்த சமயம் ஆகியவற்றிலிருந்து மட்டுமன்றி மத நம்பிக்கையற்ற கொள்கைகளிலிருந்தும் கூட பெறப்பட்ட கருத்துக்கள் இவர்களின் உள்ளங்களில் இடம் பெற்று வாழ்கின்றன. இவ்விருவகைக் கருத்துக்களுக்குமிடையே உள்ள முரண்பாட்டை யாரும் கவனிப்பதில்லை.

No comments: