Sunday, December 03, 2006

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 4.

அம்மாவை இழந்த எனக்கு ஒரே அறுதலாக என் தங்கை மட்டும் மனதில் தென்பட்டாள். உடனே நான் என் அன்புத் தங்கையைத் தேட ஆரம்பித்தேன். அம்மாவிடம் விசாரித்த போது தங்கையை எனது அம்மாவின் தம்பி வீட்டில் அதாவது எனது மாமா வீட்டில் விட்டு விட்டதாக அம்மா சொன்னாள். மாமா எங்கு தங்கியிருக்கிறார் என்று தெரியாமல் அலைந்து ஒரு விதமாக வீட்டைக் கண்டு பிடித்தேன். அது ஒரு வாடகை வீடாக இருந்தது. நான் சென்றடைந்தபோது மாமா இல்லை.அத்தையிடம் விசாரித்தபோது தங்கை வெளியில் சென்றிருப்பதாக சொன்னார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தபோது அம்மிணி வேலைக்குச் சென்றிருப்பதாகப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு முஸ்லிம் பெண் என்னிடம் சொன்னாள். அங்கே ஒரு டீ கடை இருக்கிறது. அங்கு உன் தங்கையை நல்லா வேலை வாங்குகிறார்கள் என்று அப்பெண்மணி சொன்னாள்.

நான் அந்த டீ கடை பக்கம் விரைந்து சென்றேன். அங்கு சென்று பார்த்த போது எனது ம னம் திடுக்கிட்டுப்போனது. எனது தங்கையா இது? அந்த டீ கடையின் பின்வாசலில் ஆட்கள் சாப்பிட்டுவிட்டு போடுகின்ற எச்சில் இலைகளுக்கிடையில் எனது தங்கையின் வாடிய முகம் தெரிந்தது.

அங்கு அவள் சகிக்க முடியாதத் தோற்றத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். இதைப் பார்த்தபோது எங்கேனும் அமர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.

உடனே நான் அவளை அங்கிருந்து அழைத்துவந்தேன். கை முழுவதும் சொறி பிடித்து, தலை முழுவதும் புண்ணாகவும் அந்தப் புண்களுக்கும் மேலாக பேன் ஊரிக்கொண்டும் இருந்தது.

எனது 12 வயதான தங்கையைப் பார்ப்பதற்கு எனக்கு சகிக்கவில்லை. கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் என் இளம் தங்கையை படாதபாடு படுத்தியிருக்கிறார் எனது அம்மாவின் வீட்டார்கள். அவளை ஒரு குளத்தில் குளிக்கச் செய்து அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

அம்மாவோ வேறு திருமணம் முடித்துவிட்டாள்; அப்பாவிற்கோ புது மனைவி; எனது தங்கையின் நிலைமையோ அந்தோபரிதாபம். இவற்றையெல்லாம் பார்த்து நொந்த மனதோடு வீட்டைச் சென்றடைந்தேன்.

இரண்டாவது அம்மாவிடம் எனது தங்கையை விடுவற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனது அத்தை அவளுக்கு இழைத்த கொடுமையை அவள் திரும்பவும் அனுபவிக்கவேண்டுமா? அப்படியிருக்க என்னிடம் மிகவும் அன்பு செலுத்துகின்ற அப்பாவின் தங்கை ஒருத்தி இருந்தாள். அவளின் பெயர் குஞ்ஞாளி. எனது தங்கையை குஞ்ஞாளியின் வீட்டில் விட்டேன்.

நான் சம்பாதிப்பதை எனது தங்கைக்காக சேகரித்து வைக்காலானேன். அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதுதான் இலட்சியமாக இருந்தது. இப்படிச் சிறிது காலம் சென்றது.

என் தங்கை பருவமடைந்தாள். குஞ்ஞாளி வீட்டில் அவளை விட்டு ஒரு வருடம் கடந்து விட்டது. இனி அவளை அங்கு விடுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. அப்பாவின் சம்மதத்தோடு நான் தங்கையை வீட்டிற்கு அழைத்து வந்து எனது சித்தியிடம் விட்டேன். அப்போது சித்தி நாலாவது பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 5

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் வளரும்.

No comments: