Wednesday, December 27, 2006

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 2.

அங்கும் பம்பரமாய் பணியாற்றினேன். இங்கெல்லாம் நான் ஹிந்து மதத்தின் வணக்கங்களில் ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபட்டிருந்தேன். பணம் வேண்டும் என்றால் அங்கே ஒரு கடவுளை நோக்கி ஓட வேண்டியதிருக்கிறது.

என் சமுதாயம் லோன் என்று கடன்பட்டே வாழ்ந்து பழகிப்போன சமுதாயம். ஆனால் பணத்திற்காக இருக்கும் கடவுளின் பற்று இவர்களின் மேல் இன்றளவும் விழுந்ததாகத் தெரியவில்லை.

இந்தக் கடவுளைச் சந்தித்துக் கடன் கேட்கவே என் மக்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. அதேபோல் கல்விக்காக ஒரு கடவுளை வைத்திருகின்றார்கள். இந்தக் கடவுளையும் என் மக்கள் இன்றும் சந்திக்க உரிமை பெறவில்லை.

வாங்கும் கடனில் வரும் தொல்லைகளுக்கும் அதுபோல் வரும் இதரதொல்லைகளுக்கும் ஒரு கடவுளை நியமித்திருக்கின்றார்கள். என் மக்களுக்கு என்று வரும்போது இந்தக் கடவுளும் இல்லை.

இப்படிப் பிரச்சனைக்கொரு கடவுள் என வைத்துக் கொண்டு அலைவது சதாசர்வகாலமும் என்னை அழுத்தி வந்திருக்கின்றது.
எனினும் நான் எல்லாம் சரியாகிவிடும் எதிர்வரும் நாட்களில் என்றிருந்தேன்.

ஆனால் எதுவும் உண்மையாகவில்லை. என் மக்களுக்கு விடுதலை என்பது ஹிந்துத்துவாவில் இல்லை என்பதை உணர்ந்தேன்.

ஜாதிப்பிரச்னைக்கு ஹிந்துத்துவாவில் தீர்வு இல்லை என்பதே உண்மை.

இதற்கிடையில் நான் ஒருமுறை ஐய்யப்பன் கோயிலுக்குப் போக மாலை போட்டேன்.

நான் ஐய்யப்பன் பால் கொண்ட பக்தியால் என்னை ஐய்யப்பன் என்றே எல்லோரும் அழைப்பார்கள். நான் அங்கிருக்கும் போது முதலமைச்சர் அந்தஸ்தில் கருணாகரன் அங்கே வந்தார். நான் அது போது பி.ஜே.பி.யின் முக்கியஸ்தர்களில் ஒருவன் எனக்கருதப்பட்டவன்.

இது நான் ஆர்.எஸ்.எஸ்., பி.எம்.எஸ். மற்றும் பி.ஜே.பி. ஆகியவற்றிற்குத் தாரை வார்த்துத் தந்த உழைப்பால் ஏற்பட்ட ஏற்றம்.

தலைமை அமைச்சர் அங்கே வந்தார் என்பதற்காகப் பாமரர்கள் அங்கே புறக்கணிக்கப்பட்டார்கள்; புறந்தள்ளப்பட்டார்கள்;
எனக்கு எதுவுமே புரியவில்லை.

ஏன் ஆண்டவனின் சந்நிதானத்தில் இவ்வளவு பெரிய அநியாயம்?
கடவிளின் முன்னால் கூட இங்கே சமத்துவமில்லையே என நான் அங்கலாய்ந்தேன்.

ஆண்டவனின் சந்நிதானத்தில் மனிதர்களில் மேலானவர்கள் - மேல் ஜாதிக்கார்கள் வந்தால் சிறப்புப் பூஜை; தங்கத் தட்டில், வெள்ளித் தாம்பாளத்தில் ஆரத்திகள்;

என்னவர்கள் என்ன கண்டார்கள்?

நான் பி.ஜே.பி.யில் வேட்பாளனாகக் கூட நின்றேன். கண்ணியம் என்பது எப்படி வரும் என் மக்களுக்கு? சலிப்புற்ற நான் பி.ஜே.பி.யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினேன்.

அதன் பெயர் அம்பேத்கர் யுவசரணி. இந்த அமைப்பை பி.ஜே.பி.யால் சகித்துக்கொள்ள இயலவில்லை.

அம்பேத்கரின் பெயரால் வரும் எதையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதாக இல்லை என்றே எனக்குப்பட்டது.

எதிர்ப்புகள் வலுத்தது பி.ஜே.பி.யிலிருந்து நான் வெளியேறினேன். இது நடந்தது 1991 -ல்.

சுமார் இரண்டாண்டு காலம் நான் அம்பேத்கர் யுவசரணிக்காக என் மக்களின் ஈடேற்றத்திற்காகப் பணியாற்றினேன்.

என் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களை ஆழ்ந்து கவணித்தேன்.

அவன் பிறக்கும் முன் தாயின் கருவிலேயே அடிமையாய் கிடக்கின்றான்.

அடிமையாய் வாழ்கின்றான்………..
அடிமையாய் மரிக்கின்றான்…………

அவன் வாழும் சமயத்தில் அடிமையாய் அழிகின்றான்……

அவனுக்கு மதுவும், போதையுமே வாழ்க்கையாக அமைத்துத் தரப்படுகின்றது.

அவன் இறந்த பின்னரும் அவனது புதை குழியில் சாராயத்தை தெளிக்கின்றார்கள்.

எங்கள் பெண்களை காலா காலத்திற்கும் அடிமைகளாகத் தங்கள் பாத்திரப் பண்டங்களைவிட கேவலமாக நடத்துகின்றார்கள்.

(தனது பெண்களைப் பற்றி பேசிடும் போது உணர்ச்சி வசத்தால் பல சொற்களைச் சொல்கின்றார். அவற்றை இங்கே விட்டு விடுகின்றோம். தன் மக்களின் விடுதலையைப் பற்றிப் பேசிடும்போது நமது முஹம்மது பிலால் உருக்கமாகவும், உணர்ச்சி வயப்பட்டும் பேசுகின்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையில் அவர் காட்டும் ஆர்வம் அலாதியானது)

என் சமுதாய இழிவுகளைப் பற்றியும், அதன் விடுதலையைப் பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் நாசர் மஹ்தனி எனக்கு அறிமுகமானார்கள்.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 25(பேட்டி-3)

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் வளரும்.

No comments: