Thursday, November 23, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (24)

தற்போதைய தகராறு

இன்று ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் தீர்வு காணப்படாத நெருக்கடி நிலை உருவாகியிருப்பதைப் பார்க்கின்றோம். மக்களும் அவர்களின் தலைவர்களும் ஒன்றுக்கொன்று எதிரான இரு அணிகளில் நிற்கின்றனர். தலைவர்கள் மக்களை மேனாட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு செய்யக் கங்கணங்கட்டியுள்ளனர். மேனாட்டு முறைகள், ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், மேனாட்டு நம்பிக்கைகளையும் கூட ஏற்கச்செய்ய மக்கள் தூண்டப்படுகின்றனர். மேனாட்டு ஒழுக்கம் கோட்பாடுகளே மக்களின் நடத்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்; மேனாட்டு அளவுகோல் கொண்டே இஸ்லாம்கூட மதிப்பீடு செய்யப்பட வேண்டும்; அது அளவு கோலுக்கு ஏற்றதாக அமைந்திருந்தால் நல்லது. இல்லாவிட்டால் ஐரோப்பியர் விரும்பும் வரையில் அது திருத்தியமைக்கப்படவேண்டும். இது தலைவர்களின் போக்கு.

அதே வேளையில் இஸ்லாம் இதை விட மிக்க மேலானதொன்றை அளிப்பதாக மக்கள் நம்புகின்றனர். அவர்கள் இஸ்லாத்தோடு ஒட்டியிருக்க விரும்புகின்றனரேயன்றி விட்டு விலகிச் செல்ல விரும்பவில்லை. ஐரோப்பிய முன்மாதிரிக்கேற்ப அல்லாமல் இஸ்லாமிய முன்மாதிரிக்கு அமையவே தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். தம் பொருளாதார,சமுக, அரசியல் நிறுவனங்கள் இஸ்லாமிய உணர்வைப் பரிணமிப்பனவாகவே திகழவேண்டுமென்பது மக்கள் அவா.

தம் நாடு ஒரு முஸ்லிம் நாடு எனப்பட்டால் மட்டும் போதாது. அங்கு உண்மையான இஸ்லாம் செயல்படவேண்டும். வெறும் பெயரில் அவர்களுக்கு அக்கறையில்லை. குறிப்பிட்ட ஒரு நாட்டினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைவிட அவர்களுக்குத்தாம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் என்ற உணர்வு பெறுமதி வாய்ந்தது. நவீன தேசியவாதத்தின் குறுகிய எல்லைக்குள்ளிருந்து அவர்கள் மூச்சுத்திணறுகின்றனர். விரிந்து பரந்த இஸ்லாமிய மனிதத்தன்மையை நாடி அவர்கள் மூச்சடைத்து நிற்கின்றனர். நித்தியமான இறைவனை அவர்கள் வழிபடுவதனால் நித்திய வாழ்வுக்காகவே அவர்களின் உள்ளங்கள் ஏங்குகின்றன.

மக்களும் தலைவர்களும் ஏட்டிக்குப் போட்டியான நிலையிலிருந்தால் ஒருநாடு முன்னேற முடியாது என்பது தெளிவு. நோக்க ஐக்கியம் எவ்வகை முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. மக்கள் தம் தலைவர்கள், குறிக்கோள்கள், இலட்சியங்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தால் அவற்றை அடைவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தச் சிறிதும் பின்னிற்க மாட்டார்கள். மக்களுக்கும் ஆட்சியாளருக்குமிடையே முழுமையான இணக்கம் இருந்தால் தான் அரசாங்கம் தங்குதடையின்றி இயங்க முடியும். ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு மக்கள் இணங்கவில்லையாயின் அவர்கள் அவற்றை எதிர்த்து புரட்சி செய்யலாம். அவ்வாறு அவர்கள் செய்யாவிடினும் ஆட்சியாளர்களுடன் ஒத்துழைப்பதில் அவர்கள் காட்டும் தயக்கம், நாட்டு முன்னேற்றத்திற்குப் பெருந்தடைக்கல்லாக அமையும்.

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

No comments: