Wednesday, September 20, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (19)

மேலே விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு, சில மாற்றங்களுடன் மேனாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி விடுதலையடைந்த எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இடம் பெற்றது. அல்ஜீரியாவில் பெரும் இடர்பாடுகளுக்கிடையே நீண்ட காலமாக மக்கள் கடுமையாகப் போராடினார்கள்.

ஈவிரக்கமற்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமன்றி சித்திரவதையும் செய்தனர். ஆனால் இக்கொடுமைகள் எதனாலும் அம்மக்களின் திடசங்கற்பத்தைக் குலைக்க முடியவில்லை. அவர்கள் தம் நீண்டகால தீவிரப் போராட்டத்தின் முடிவில் வெற்றியீட்டியபொழுது, அவர்கள் உயிரைப் பயணம் வைத்துப் போராடிப் பெற்ற அரசு அவர்கள் எதிர்பார்த்த அரசை விட தரம் குறைந்ததாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பினர். அவ்வரசு மேனாட்டின் முத்திரையைத் தாங்கி இருந்ததே அன்றி இஸ்லாத்தின் சிறப்பியல்புகள் பொறிக்கப்பட்டதாகத் திகழவில்லை.

நேச நாடுகளின் படைகளின் பாதத்தடியில் துருக்கி வீழ்ந்து கிடக்கையில் கிரேக்கப்படைகள் சின்னாசியாவைச் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருந்தன. அவ்வேளையில் முஸ்தபா கமால் விழித்தெழுந்து இஸ்லாத்தின் பெயரால் துருக்கிய மக்களை அறைகூவி அழைத்தார். இஸ்லாத்தின் பெயர் கேட்ட அம்மக்கள் திரண்டெழுந்தனர். இஸ்லாத்திற்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்யுமாறு அவர் துருக்கிப் படைவீரர்களை வேண்டினார். தம் பொன்னாட்டில் இஸ்லாம் வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் தம் இன்னுயிரை அர்ப்பணித்தனர். ஆனால் வெற்றி கிட்டியதும் கமாலும் அவரது சகாக்களும் மேனாட்டு மாதிரியிலான அரசைத் துருக்கியில் அமைத்தனர்.

மேனாட்டுக் கல்வி கற்ற தலைவர்களும், பழமை விரும்பிகளான அவர்களைப் பின்பற்றியோரும் தம் ஆட்சியாளருக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் ஒத்துழைத்தனர். ஆனால் யுத்தம் முடிவுற்றதும் இரு சாராரும் வெவ்வேறு பாதைகளில் சென்றனர். ஆதலால் மக்கள் தம் தலைவர்களில் நம்பிக்கை இழந்தனர். இஸ்லாத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. மக்கள் அங்கு ஏற்படுத்தப்பட்ட அரசுடன் இணங்கிச் செல்லவில்லை. உண்மை நிலை எனும் அடிவானத்திலிருந்து இஸ்லாமிய அரசு என்ற ஒளிச்சுடர் அம்மக்களை தன்பால் அழைத்துக் கொண்டிருந்தது.


வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

No comments: