Saturday, January 21, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (7)

இஸ்லாத்தின் வெற்றியின் மர்மம்

எண்ணிலடங்கா இடர்பாடுகளுக்கு மத்தியில் முஸ்லிம் படைகள் அடைந்த பெரும் வெற்றி கண்டு அக்காலத்தில் அவற்றை அவதானித்தவர்கள் வியப்படைந்தனர். ஒரு சிறு படை, சிறந்த ஆயுதம் கொண்ட பெரும் படைகளை எப்படி துவம்சம் செய்ய முடிந்தது என்பது அவர்களுக்கு விளங்க முடியாத புதிராக இருந்தது. அவர்கள் முஸ்லிம் படையின் ஆள் பலத்தை மட்டுமே கருத்தில் கொண்டனர். அதனால் தான் அவர்கள் திகைப்படைந்தனர். முஸ்லிம் படைகளின் உடல் பலத்துக்கு உறு துணையாக இஸ்லாம் தோற்றுவித்த ஒழுக்க பலம் நின்றது என்பதை அவர்கள் கவனிக்கவில்லை. போர்களத்தில் பகைவர்கள் முஸ்லிம் படை வீரர்களை வலிமைமிக்க எதிரிகளாகக் கண்டனர். ஆனால் அவர்களது வலிமை மிக்க ஒழுக்கப்பண்பும் முன்மாதிரியான நடத்தையுமே பகைவர்களை வெகுவாகக் கவர்ந்தன. முஸ்லிம் படை வீரர்களின் ஒழுக்கப் பண்புகள் காரணமாகவே பகைவர்கள் அவர்களை எதிர்த்து நிற்க முடியாதிருந்தது.

அவர்கள் நேர்மையாளர்களாகவும், நெறி தவறா நீதியாளர்களாகவும், மனிதப் பண்புடையோராகவும், சகிப்புத்தன்மையும் அன்புள்ளமும் கொண்டவர்களாகவும் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானம் செய்ய பகைவர்கள் தயாரான எத்தருணத்திலும் அவர்களை மன்னிக்கும் மனப்பாங்குடையோராகவும் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய போதனைகளின் பெறுமதிப்பை நன்குணர்ந்து தம் சொந்த விருப்பத்தின் படியே இஸ்லாத்தை தழுவி இருந்தனர். அவர்கள் ஐயத்திற்கிடமின்றி இஸ்லாத்தின் நோக்கத்தை உணர்ந்திருந்தனர். அதனால் அவர்களின் பண்பாட்டினது ஒவ்வோர் அம்சத்திலும் அவ்வுணர்ச்சி பிரதிபலித்தது. அவர்கள் தம் வாட்களைக் கொண்டு பகைப்படைகளை முறியடித்தனர். ஆனால் கைப்பற்றிய நாட்டு மக்களின் உள்ளங்களைத் தமது ஒழுக்கத்தின் புனிதத்தாலேயே வெற்றி கொண்டனர். அடிப்படுத்தப்பட்ட நாட்டு மக்கள் முஸ்லிம் படையினரிடம் தயக்கத்தோடு சரணடையவில்லை. அவர்கள் முஸ்லிம்களைத் தம் நலனில் அக்கறைக் கொண்டவர்களாகக் கருதி அன்போடும் ஆர்வத்தோடும் வரவேற்றனர்.

முஸ்லிம் ஆட்சியாளர்களின் கைகளில் தம் உயிர், உடைமை, கண்ணியம் யாவும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்தனர். எனவே முஸ்லிம்கள் வகுத்த திட்டங்கள் தமக்குப் பயனளிக்கும் என்று அவர்கள் அறிந்தனர். ஆதலால் அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் முஸ்லிம்களுடன் ஒத்துழைத்தனர். தம்மை ஆழவந்த இந்த நல்லோரின் சன்மார்க்க நெறியை அவர்கள் மனம் விரும்பி ஏற்றனர்; அவர்களது கலாச்சாரத்தை ஏற்றனர்; அது மட்டுமல்ல: அவர்களின் பொன் மொழியையும் கற்றுக் கொண்டனர்.

முஸ்லிம் படையெடுப்புகள் நிகழ்ந்து பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் அவர்கள் கைப்பற்றிய நாடுகளைச் சார்ந்த மக்கள், இன்றும் அதே சன்மார்க்கத்தைத் தமதாக்கி தம்மை ஆளவந்தவர்களின் மொழியையே பேசியும் வருகின்றனர். அவர்கள் போற்றும் மாவீரர்கள் அவர்களுடைய சாதியைச் சார்ந்தவர்கள் அல்லர். அவ்வீரர்கள் தம் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களைச் சார்ந்தவர்களே. இம்மக்கள் தாம், முஸ்லிம் சகோதரத்துவத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஆழமாக உணர்கின்றனர். அதே வேளையில் தவறான வழி சென்ற தம் மூதாதையர்களுக்கு அவர்கள் மதிப்பளிப்பதில்லை. வாளானது இத்தகையதோர் அற்புதத்தை எப்போதேனும் நிகழ்த்தியதுண்டா?

இத்தகையது தான் இஸ்லாமிய வரலாற்றின் முதற்கட்டம். முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தைப் பற்றிய விரிவான வர்ணனை நான் எடுத்துக் கொண்ட விடயத்திற்கு அப்பாற்பட்டதாகும். இஸ்லாம் உலகில் மாபெருமளவில் விரிவடையக் காரணம் முஸ்லிம் பெருமக்கள் இஸ்லாத்தினை உளப் பூர்வமாகவும் உண்மையான உள்ளத்தோடும் ஏற்றுக் கொண்டமையாகும் என்பதை உங்கள் மனதில் பதியச் செய்வதற்காகவே இதனைக் கூறினேன்.

இஸ்லாத்தின் உன்னத போதனைகள் இம்மக்களின் உள்ளங்களை ஊடுருவி அவர்களின் நடத்தையில் பிரதி பலித்தன. இதன் விளைவாக, இஸ்லாத்தின் போதனைகளைப் பரப்புவதையே தனது பெரும் பணியாகக் கொண்டதோர் இஸ்லாமிய அரசு தோன்றிற்று. இப்பணியை நிறைவேற்றுவதற்காகவே இவ்வரசு தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தியது. இஸ்லாமிய வரலாற்றின் இம்முதற்கட்டத்தினால் ஏற்பட்ட பயன்கள் பாரதூரமானவை. அவற்றை ஆயிரத்து நாறு ஆண்டுகளுக்குப் பின் இன்றும் காணலாம். இன்றும் கூட ஒரு முஸ்லிம் அவர் ஒழுக்கங்கெட்டு, இஸ்லாமிய பாதையில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்றவராகயிருப்பினும், ஆரம்ப காலத்தில் இருந்த முஸ்லிம் சமூகத்தின் நிலையை உள்ளத்தில் வைத்துப் போற்றுகிறார்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது காலத்தும் நேர்வழி நடந்த நான்கு கலீபாக்களது காலத்தும் வாழ்ந்த முஸ்லிம் சமூகம், அவரது உள்ளத்தில் மறையாது நின்று என்றுமே மறையாத ஒரு நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அந்த இலட்சியத்தினை செயல்படுத்துவதில் அவர் கிஞ்சிற்றும் அக்கறை காட்டாவிடினும் அதன் மீதே அவர் தீராத பற்றுக் கொண்டுள்ளார். அப்படியான ஒரு சமூகத்தை மீண்டும் அமைக்கலாம் என்ற நம்பிக்கை அவரது உள்ளத்தில் ஊற்றெடுத்த வண்ணமே இருக்கிறது. அந்த நம்பிக்கையே, பெருக்கெடுத்தோடும் உலகாயதம் என்ற வெள்ளத்தில் மூழ்கி விடாமல் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

பிற சமூகத்தவர் மெச்சத்தக்க ஓர் இலட்சிய சமுதாயம் என்ற நிலை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வெகு காலத்துக்கு முன்பே நீங்கி விட்டது. எனினும் உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் இணைந்த வண்ணமே இருக்கின்றனர். முஸ்லிம் அல்லாதார் இவ்வாறு இஸ்லாத்தின் பால் இன்றும் ஈர்க்கப்படக் காரணம் தற்கால முஸ்லிம்கள் நன்மையின் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் என்பதல்ல. ஆனால் நபிமணி அவர்களதும் அவர்களை அடுத்து வந்தவர்களதும் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்திலிருந்து இன்றைய முஸ்லிம் சமூகத்தை அவர்கள் வேறுபடுத்தி காணமுடிகிறது. இதனால் தான் அவர்கள் இன்றும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

இஸ்லாத்தின் இந்த ஆரம்பக் கட்டம் இன்று வரை ஒரு கலங்கரை விளக்கமாக ஒளிவீசி உண்மையை நாடுவோர் அனைவரையும் தன்பால் கவர்கிறது. முஸ்லிம் சமூகத்தில் இன்றும் பெறுமதி வாய்ந்த பண்புகள் எவையும் காணப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம், பல நூற்றாண்டுகள் சென்றுவிட்ட பின்னரும், தொடக்க கால சமூகத்தின் செல்வாக்கு இன்றும் தொடர்ந்து இருந்து வருவதாகும். இம்முதல் கட்டம் பற்றிய நினைவு முஸ்லிம்களின் உள்ளங்களில் நிலைத்து நின்று அவர்களிடையே தோன்றியுள்ள எல்லா சீர்திருத்த இயக்கங்களுக்கும் காலாக அமைந்து உள்ளது.

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

No comments: