Sunday, December 25, 2005

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (5)

இஸ்லாமிய அரசை வலுப்படுத்துதல்:

இறைத்தூதர் அவர்கள் மக்காவில் முதன் முதலாகத் தம் பிரச்சாரத்தைத் தொடங்கிய போது மக்கள் அதனை கவனிக்கவில்லை. அவர்களது போதனையின் மீது சிலரே கூடிய கவனம் செலுத்தினர். அதைவிட மிகச் சிலர் தான் அண்ணலார் அவர்கள் மனிதனைப் பற்றியும், உலகைப் பற்றியும் அளித்த புதிய கருத்தினை ஏற்கும் மனநிலை உடையோராக இருந்தனர். அவர்களது தூதின் பொருளையும் அதன் விளைவுகளையும் விளங்கிக் கொள்ளத்தக்க நுண்ணறிவுத் திறனை ஒரு சிலரே பெற்றிருந்தனர். ஆழ்ந்த மதிநுட்பமும், பண்பட்ட ஒழுக்க உணர்வும் அருளப் பெற்றிருந்த ஒரு சிலர் மட்டும் இப்புதிய சன்மார்க்க நெறியின் மேன்மையினை உனர்ந்து அதனை உளம் திறந்து ஏற்றுக் கொண்டனர்.

இக்குழு சிறியதாயினும் இதுவே எதிர்கால இஸ்லாமிய அரசின் கருவூலமாகத் திகழ்ந்தது. அவர்களின் கண்ணியமான நடத்தையும், தூய்மைமிக்க எளிய வாழ்க்கையும் பிறரைக் கவர்ந்தன. அவர்கள் ஒவ்வொருவராக இக்குழுவுடன் இணைந்து கொண்டனர். தொடக்கத்தில் நீர் சொட்டுவது போல ஒருவர் இருவராக வந்தனர். எனினும் நாளடைவில் அது ஒரு பேராறாகப் பெருகிற்று. இறை தூதர் அவர்கள் தங்களைப் பின்பற்றிய சிலரோடு மதீனாவுக்குக் குடிபெயர்ந்து, அங்கு உண்மையானதோர் இஸ்லாமிய அரசுக்கு அஸ்திவாரமிட்டார்கள். மதீனாவில் குடியேறிய சிறிது காலத்திலேயே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளைக் கொண்ட மாதிரி இஸ்லாமிய அரசு ஒன்றினை நிறுவும் பணியில் ஈடுபட்டார்கள்.

நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்பன அவ்வரசின் அடிப்படைகளாக விளங்கின. அது போன்ற ஒரு சமூகத்தினை ஒரு சமூகத்தினை அராபியர் முன்னொரு போதும் கண்டதில்லை. சமூக ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்படுவதையும், நேர்மையான செல்வ பங்கீட்டையும், அச்சமூக உறுப்பினரிடையே நிலவிய சகோதரத்துவ உறவுகளையும், கட்டுப்பாடு, நோக்க ஐக்கியம் என்பவற்றையும் நேரடியாக கண்ட மக்கள் வியப்பிலாழ்ந்தனர். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவுவதிலும் பொது நன்மைக்காக உழைப்பதிலும் பேரார்வம் காட்டியதை அரபு மக்கள் கண்டனர். ஒருவரை மற்றவர் முற்றாக நம்பினார். நிதானம், தன்னடக்கம், பரஸ்பர நம்பிக்கை, நேர்மை எனும் உயர் பண்புகள் எங்கும் பரந்து காணப்பட்டன. முஸ்லிம் சமூகத்தில் அமைதியும் இணக்கமும் நிலவின.

இந்த சமூகத்திற்கும் அராபியர்கள் பிறந்து வளர்ந்த சமூகத்திற்குமிடையில் இருந்த வேறுபாட்டை அவர்கள் காணத் தவறவில்லை. அவர்களின் பழைய சமூகத்தில் ஒவ்வொருவரும் மற்றவரின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருந்தார். எல்லாத் தகராறுகளும் பலாத்காரத்தினாலேயே தீர்க்கப்பட்டன. ஒழுக்கம் பற்றிய மங்கலானதொரு கருத்து அவர்களிடையே நிலவியது. ஆனால் அது அம்மக்களின் வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பயன்படவில்லை. அச்சமூகத்தில் மலிந்து கிடந்த தீமைகளைத் தடுத்து நிறுத்த எதுவுமிருக்கவில்லை. மக்கள் பொய்யிலும் விபச்சாரத்திலும் உழன்றனர். வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டனர். ஒருவரை மற்றவர் ஏமாற்றியதோடு, மற்றவர்களின் உரிமையையும் பறித்துக் கொண்டனர். ஆனால் இவற்றினால் அவர்களின் கண்ணியம் பாதிக்கப் பட்டதாக அவர்கள் கருதவில்லை. கொலை செய்யப்பட்ட ஒருவரின் உறவினர், கொலையை கொண்டே மற்றவரை பழி வாங்கினார். அரசு, அது இருந்த நிலையில் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இத்தகைய நிலைமைகளுக்கு ஆளாகி வாழ்ந்த மக்கள், முஸ்லிம் சமூகத்தினால் கவரப்படாதிருக்க முடியவில்லை. அங்கு ஒவ்வொருவரும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தார். மிக்க கீழ்நிலையில் இருந்தவர்களின் உரிமைகள் கூட புனிதமானவையாகக் கருதப்பட்டன. எனவே அதற்கு வெளியே நின்ற மக்கள் தவிர்க்க முடியாதவாறு அச்சமூகத்தினால் ஈர்க்கப்பட்டு, அதோடு இணந்து கொள்ளும் ஆர்வமிக்கவர்களாய்க் காணப்பட்டார்கள். இஸ்லாத்தின் நெடுங்கால பகைவரான அபூ சுப்யான், போர்களத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு பகைவரின்(முஸ்லிமின் - ஹம்சா) ஈரலை மென்று சுவைக்கத் தயங்காத ஹிந்தா போன்றோர் கூட அந்த முஸ்லிம் சமூகத்தின் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து நிற்க இயலவில்லை.

எனவே இஸ்லாமிய இலட்சியத்தின் மேன்மையே இஸ்லாம் பரவுவதற்கு முக்கிய காரணியாய் அமைந்தது என்பது தெளிவு. இஸ்லாமிய அரசு தாபிக்கப்பட்டதும், இஸ்லாமிய இலட்சியம் ஒரு கற்பனைக் கதையாக இருப்பதற்கு மாறாக ஒரு வாழும் உண்மையாக பரிணமித்தது. இஸ்லாமிய உணர்வானது. இஸ்லாமிய அரசில் பரவலாகச் செயல்பட்டு அதன் அற்புத சக்தியால் எல்லாவற்றையும் முழுமையாக மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. அந்த முஸ்லிம் அரசின் உறுப்பினர்கள் குறையுடைய இவ்வுலகில் எந்த அளவுக்கு செயல் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இஸ்லாமிய இலட்சியத்தை செயல்படுத்தும் அடங்காத ஆர்வத்துடன் செயலாற்றினர்.

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

No comments: