Wednesday, November 30, 2005

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (3)


முதற் கட்டம்: இலட்சிய காலம்

முதலாவது கட்டத்தில் இஸ்லாம் அதன் எளிமையான தூய உருவில் காட்சியளிக்கிறது. ஓங்கு புகழுடனும் மாசுமருவற்ற பேரொளியுடனும் மிளிர்கிறது. சிற்றின்பத்தில் திளைத்து ஒழுக்க, ஆன்மீக உணர்வுகள் மரத்துப் போன ஒரு சமுதாயத்தில் இஸ்லாம் பிறந்தது. நண்பர்களின் உறவின்றி தன்னந்தனியாக நின்ற வறிய, ஆனால் பிரபஞ்சத்தின் ஆன்மீக அம்சத்தினை நன்குணர்ந்த ஒரு மனிதரை மூன்று அடிப்படை நம்பிக்கைகள் மீது மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இறைவன் நியமித்தான்.

இறைவனில் நம்பிக்கை, மறுமையில் நம்பிக்கை, இறை தூதில் நம்பிக்கை என்பனவே மனித வாழக்்கையினை ஓர் உயர் மட்டத்திற்கு உயர்த்துவதற்கான அவ்வடிப்படை நம்பிக்கைகளாகும். இறைவன் விடுத்த அழைப்பாணைக்கு அம்மனிதர் உற்சாகத்துடன் உடனடியாக அடி பணிந்தார். பெரும் வல்லமை பொருந்திய சக்திகள் அவரை எதிர்த்து நின்றன. வெற்றி கொள்ள முடியாதவையாகத் தோன்றிய பெருந்தடைகள் அவரது பாதையில் முட்டுக் கட்டையாக அமைந்தன.

பதிமூன்று ஆண்டுகளாக அவர் அஞ்சா நெஞ்சத்தோடும், அசையா நம்பிக்கையோடும் துணிந்து போராடினார். தம் கொள்கைக்கு ஆதரவளிப்போரைப் பெறுவதற்கு மென்மையான தூண்டுதலையும் தம் வாழ்க்கை முன்மாதிரியையுமே அவர் முற்றிலும் நம்பியிருந்தார். சமயத்துறையில் வலுக்கட்டாயப் படுத்துவது அன்னாரது இயல்புக்கு முரண்பட்டதாக இருந்தது. தனிமனிதனது பெறுமதி, அவனது இலட்சியம், அவனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்பன போன்றவை பெரும் விளைவுகளை ஏற்படுத்தத்தக்க விடயங்கள்.

அவை பற்றி அவர் மக்களிடம் மிக எளிமையான மொழியில் உரையாடினார். இஸ்லாத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். இஸ்லாம் எத்தகைய மனிதனை உருவாக்க விரும்புகிறது, எப்படியான பண்பை வளர்க்க விழைகிறது, எத்தகைய நடத்தைக்கு அது உற்சாகமளிக்கிறது என்பன போன்றவற்றையெல்லாம் அவர் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
மனித வாழ்வின் பேரிலட்சியம் இறை தூதரின் உருவில், வாழும் ஓர் உண்மையாக எடுத்துக் காட்டப்பட்டது. நன்னடத்தைக் கோட்பாடுகள் அன்னாரது வாழ்க்கையில் பிரதிபலித்தன. அவரது சொற்கள் அன்னாரது நடத்தையினால் உறுதிபடுத்தப் பட்ட, மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தன. அன்னாரைப் பின்பற்ற தயாரான தியாக சிந்தை மிக்க ஒரு திருக் கூட்டம் அவரைச் சூழ்ந்து உருவாயிற்று. அவர்கள் தம் சொந்த விருப்பப் படியே இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டனர். இறைதூதர் அவர்கள் அம்மக்களுக்குத் தூண்டுகோலாக அளித்ததெல்லாம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், மரணத்தை வளமிக்கதொரு வாழ்க்கையின் நுழைவாயிலாகவும் ஆக்கும் ஒரு சமய நெறியேயாகும்.

உலகம் அவர்களுக்கு அளிக்கவல்ல மற்ற யாவற்றையும் விட இச்சமய நெறியில் அவர்கள் அன்பும், பற்றும் கொண்டிருந்தனர். அவர்களின் இப்பற்று பல்லாண்டு காலம் நீடித்த சொல்லொண்ணாத்துயரமும், கஷ்டங்களும் நிறைந்த கடும் போராட்டத்தினால் சோதிக்கப் பட்டது. அதற்காக அவர்கள் பெறுமதி வாய்ந்த தம் சொத்து, சமூக அந்தஸ்து, பாதுகாப்பு, உற்றார் உறவினர் - அனைத்தையும் அர்ப்பணித்தனர். உண்மையிலேயே வியத்தக்க உறுதியோடு அவர்கள் தம் சன்மார்க்கத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தனர். இஸ்லாம் அவர்களின் இதயங்களிலிருந்து அச்சத்தை முற்றாக அகற்றி சன்மார்க்கப் பற்றையும் நம்பிக்கையையும் நிரப்பியது.

வாழ்க்கை பற்றிய இஸ்லாத்தின் கருத்து அவர்களுக்கு உண்மையானதாகவும் மேன்மை வாய்ந்ததாகவும் தோன்றியது. அதனால் உந்தப்பட்ட அவர்கள் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படைகளில் ஓர் அரசினைக் கெட்டியெழுப்ப முனைந்தனர். அரேபிய மக்கள் தம் கண்முன்னே கட்டியெழுப்பப்படும் புது வகையான அரசினைக் கண்டு வியப்புற்றனர். அவ்வரசில் செல்வம் படைத்தவர்கள் வறியவர்களை சுரண்டவில்லை. பலசாலிகள் பலவீனர்களை அடக்கியாளவில்லை. அவ்வரசிலே மக்கள் எடுப்பதை விட கொடுப்பதிலும் தமக்காக செல்வத்தைக் குவிப்பதை விட தம் உடைமைகளை மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினர். போட்டிக்கு பதில் அங்கு கூட்டுறவு இருந்தது.

தன்னலம் பேணுவதற்கு பதில் பிறர்க்கென வாழும் பெரும் தகைமை பெருகியிருந்தது. அவ்வரசு ஒழுங்குற அமைந்ததொரு குடும்பத்தினை ஒத்திருந்தது. குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் மற்றவர்களின் மேய்ப்பாளர்களாக - வழி காட்டியாக - விளங்கினார்.

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

No comments: