Wednesday, December 27, 2006

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 3.

அமுக்கப்பட்ட மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல் நாசர் மஹ்தனியிடமும், அவருடைய இயக்கத்திலும் எதிரொலிக்கக் கண்டேன்.

ஆகவே நான் நாசர் மஹ்தனியின் கூட்டங்களைத் தொடர்ந்து கவனிக்கலானேன்.

அவருடைய உத்வேகம் முஸ்லிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இப்படிப் பலரும் அங்கம் வகிக்கும் ஓர் பெரும் இயக்கமாக பி.டி.பி. வளர்ந்து வருவதைக் கண்டேன்.

என்னையும் அந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு பணியாற்றினேன்.

என் இயல்பான, எதார்த்தமான ஈடுபாடு எல்லோரையும் கவர்ந்தது. பி.டி.பி.யிலும், நான் மெல்ல மெல்ல உயர்ந்தேன்.

பி.டி.பி.யின் தொண்டர்கள் என்னிடம் பாரபட்சமின்றி காட்டிய பாசம் என்னுள் உண்மையான அன்பைப் பிரவாகம் எடுத்து ஓடச்செய்தது.

பி.டி.பி.யிலுன், நான் கொட்டிய உழைப்பால் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவனானேன்.

இப்போது நான் முஸ்லிகளோடு நித்திய வாழ்க்கை தொடங்கிவிட்டேன்.

அதாவது நான் ஆரம்பத்தில் எந்த முஸ்லிகளை வெறுப்பதற்குக் கற்றுத் தரப்பட்டேனோ அந்த முஸ்லிகளை நான் இப்போது நேரில்
சந்திக்கின்றேன்.

எந்த முஸ்லிம்களை இங்கே இந்த நாட்டில் வாழவிட்டிருப்பது தன்மானக் குற்றம் என எண்ணினேனோ அந்த முஸ்லிகளோடு நான் வாழத் தொடங்கி இருகின்றேன்.

(இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு வினாவைத் தொடுக்கின்றார்)

நான் என் வாழ்க்கையைப் பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி:

நாசர் மஹ்தனியைப் பற்றி உங்கள் கருத்தென்ன ?

நாசர் மஹ்தனி ஏனைய முஸ்லிம் அரசியல் இயக்கங்களை போல் ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர். விஷேஷமாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. மேற் கொண்டு சொல்லுங்கள்.

நாசர் மஹ்தனி எனக்கு இஸ்லாத்தைப் பற்றியத் தெளிவுகளைத் தந்தவர். அதனால் நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கின்றேன்.
P.D.P.யின் தலைவர் நாசர் மஹ்தனியின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் முஹம்மத் பிலால் தன்னுடைய நன்றிப்
பெருக்கைக் காட்டுகின்றார். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு அதாவது நேர்வழி பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் நாசர் மஹ்தனி என்பதால் அவர் அவரை நன்றியோடும், கண்ணியத்தோடும் பார்க்கின்றார். நான் இதை அவரிடம் கேட்டும் விட்டேன். அவர் அதை ஒப்புக் கொண்டார். தனக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாசர் மஹ்தனி தனக்கும், தனது சமுகத்திற்கும் நேர்வழி காட்டியிருக்கின்றார் என்பதுதான் அவரது நன்றிப் பெருக்கிற்குக் காரணம்.

[மீண்டும் தொடர்ந்தார்]

நான் பி.டி.பி.யில் சேர்ந்தபோது முஸ்லிம்களோடு வாழ ஆரம்பித்திருந்தேன்.

அதாவது நான் முஸ்லிம்களை ஊன்றிக் கவனித்தேன். அவர்களோடு வாழ்ந்தேன்.

பி.டி.பி யின் பணிகளுக்காக நான் வெளியூர் சென்றபோதெல்லாம் பி.டி.பி யின் பிரதிநிதிகள் என்னை வரவேற்றார்கள்.

முஸ்லிம்கள் அதிலும் பஞ்சையர்கள் - அன்றாடம் காய்ச்சிகள் யாதார்த்தமாக என்னை வரவேற்றார்கள். அவர்கள் உழைத்து ஈட்டிய பொருளில் எனக்குத் திண்பண்டங்கள் வாங்கித் தருவார்கள். இவர்கள் காட்டிய யதார்த்தம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அது வரை நான் எங்கேயும் சந்திக்காக ஒரு எதார்த்தத்தை இந்தத் தொண்டர்களிடம் சந்தித்தேன்.

அதே போல் நாசர் மஹ்தனி கண்ணியப்படுத்தப்படும் போதும், அவர் கற்றவர்களாலும், செல்வந்தவர்களாலும் விருந்து வைத்து உபசரிக்கப்படும் போதும் நான் விலகி நிற்க வேண்டியதில்லை. நான் அவர்களோடு இயைந்து இணைந்து நிற்க முடிந்தது; உண்ண முடிந்தது; உறங்க முடிந்தது.

அதன் பின்னர் முஸ்லிம்களால் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் பிலால் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் அவர்கள் மீது உண்டாக்கட்டும்) அவர்களின் வரலாற்றைக் கற்றேன்.

முஹம்மது(ஸல்)அவர்கள் பிலால்(ரலி)அவர்களை வைத்திருந்த விதமும், அவர்கள்பால் கொண்டிருந்த அன்பும் என்னை மிகவும் நெகிழச் செய்தது. இன்றளவும் பிலால் (ரலி) அவர்கள் பால் முஸ்லிம்கள் காட்டும் நேசத்திற்கும், பாசத்திற்கும் அளவேயில்லை. இது என்னுள் பல நிரந்தர மாற்றங்களைக் கொண்டுவந்தது.

தொழுகையில் காட்டும் சமாதானம் அல்லாஹ்வின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை என்னுள் ஆழப்பதிய வைத்தது.

இஸ்லாத்தை ஏற்பது என முடிவு செய்தேன். சில நூல்களைக் கற்றேன். மனதால் மாறினேன். இறைவனின் அடியானாக, இது நடந்தது இரண்டு மாதங்களுக்கு முன்.

நான் முஹம்மது பிலால் ஆனேன். என் மனைவி ஃபாத்திமா ஆனாள். என் முதல் குழந்தை ஷாகிதா ஆனாள். இரண்டாவது குழந்தை தஸ்லீம் ஆனாள்.

இப்போது நான் குழிவேலிப் புலியில் இருக்கிறேன்.

இங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது. இந்த பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஒரு முஸ்லிம் இருக்கின்றார். அவருடைய வசதியையும், வளத்தையும் வைத்துப் பார்க்கும் போது நான் எந்த விதத்திலேயும் அவருக்கு ஈடாக மாட்டேன்.

ஆனால் பள்ளியில் தொழப்போகும்போது நான் முன்னே சென்றால் நான் முன் வரிசையில் தொழுவேன். அவர் எனக்குப் பின்னால் நின்று தொழுவார். அவர் அல்லாஹ்வை ஸஜ்தா செய்திடும் போது என் கால் அவர் தலையைத் தொடும்.

இதில் அல்லாஹ்வைத் தொழுவதில் அணிவகுத்து நிற்பதில் பின்னே நிற்பவன், முன்னே நிற்பவன் என்ற எண்ணங்கள் யாரிடமுமில்லை.

மாறாக அந்தத் தனவந்தர் என்னைப் பார்த்திடும் போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். கட்டித் தழுவுகின்றார். உடன் பிறந்த ஓர் சகோதரனாகவே என்னை நடத்துகின்றார்.

இது என்னுள் நிரந்தர களிப்பை ஏற்படுத்துகின்றது.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 26(பேட்டி-4)

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் வளரும்.

No comments: