சிக்கலான பிரச்சனை
உலமா ஒரு திசையிலும்,அரசியல்வாதிகள் எதிர்திசையிலும் இழுக்க இடையில் நின்று மக்கள் செய்வதறியாது தடுமாறுகின்றனர். அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய உணர்வை இழந்துவிட்டனர். அதனால் சமுகத்திற்குள் நடைபெறும் சச்சரவுகளுக்குப் பலியாகி விடுகின்றனர், அவர்களின் வாழ்க்கைக்குக் குறிப்பிட்ட இலட்சியம் எதுவும் இல்லாததனால் அவர்கள் அங்குமிங்கும் அலைகின்றனர். அவர்கள் தம் மூதாதையர் அதிர்ச்சி அடையத்தக்க கருத்து உடையவர்களாக இருக்கின்றனர். முற்கால முஸ்லிம்கள் அஞ்சி நடக்கக்கூடிய செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் ஒழுக்கம் சிதைந்து கிடக்கிறது. இருப்பினும் அவர்கள் இன்னும் இஸ்லாத்தைப் பற்றிப் பிடித்துகொண்டுதான் இருக்கின்றனர்.
நம்பிக்கையின் ஒளி அவர்களின் இதயங்களில் இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறது. அவர்கள் இன்னும் இஸ்லாத்தின் போதனைகள், கருத்துக்களைப் போற்றி வருகின்றனர். அப்போதனைகளின் சுவடுகள் இன்னும் அவர்களின் உள்ளத்தில் பதிந்திருக்கின்றன. சூதாட்டம்பற்றி தான் என்ன நினைக்கிறார் என்று ஒரு முஸ்லிமைக் கேட்டால் அவர் தயவு தாட்சண்யமின்றி அதனைக் கண்டிப்பார். இலஞ்சம் பற்றிஅவருடைய அபிப்பிராயத்தைக் கேளுங்கள். அவர் அதனை வன்மையாக இழித்துரைப்பார். விபச்சாரம் பற்றிப் பேசுங்கள்,அவர் அதனை வெறுக்கிறார் என்பதை அவருடைய முகமே காட்டும். இது இஸ்லாம் கற்பித்த ஒழுக்கக்கோட்பாடுகள் இன்னும் அவருடைய உள்ளத்தில் மோலோங்கி நிற்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
அவர் இஸ்லாமிய நெறியிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருக்கலாம்; ஆனால் மீண்டும் அப்பாதைக்குத் திரும்ப மாட்டோமா என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது, அவருக்குள்ள இஸ்லாமியப்பற்று ஆட்டம் காணவில்லை. இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்குகந்த ஓர் அரசியல்,பொருளாதார அமைப்பிற்காக அவரது உள்ளம் ஏங்கித்தவிக்கிறது. வாழ்க்கை பற்றிய அவரது கணோட்டம் குர்ஆனின் போதனைகளது அடிப்படையில் உருவானது, அவர் எந்த இஸ்லாமிய பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டாரோ அப்பாரம்பரியம் அவரது உள்ளத்தில் ஏற்படுத்திய பதிவு என்றும் அழியாது. அவர் பெற்றுள்ள குர்ஆன்,ஹதிஸ் அறிவு தொடர்பில்லாத,துண்டு துண்டானதாக இருக்கலாம், ஆனால் பல நுற்றாண்டுகளாக தொடர்ந்து வந்த பாரம்பரியம் குர் ஆன்,ஹதிஸின் அடிப்படைக் கருத்துகளை என்றும் அழியாதவாறு அவரது உள்ளத்தில் பதித்து விட்டது. இஸ்லாத்தில் அவருக்குள்ள பற்று அவரது உள்ளத்தில் ஆழமாக வேர்விட்டு இருக்கிறது. ஆதலால் அதனை அழித்துவிட முடியாது. அவர் பலாத்காரத்திற்கு அடிபணிகிறார். அதுவும் சில காலத்திற்கு மட்டும்தான்.
பலாத்காரம் தளர்த்தப்பட்டால் அல்லது நீக்கப்பட்டால் உடனே அவர் உள்ளத்திற்கு மிகவும் பிரியமான இஸ்லாமியப்பற்று மீண்டும் திரும்பி விடுகிறது. அதனை அவருடைய இதயத்திலிருந்து எந்த சக்தியும் அகற்றிவிடமுடியாது. சாதாரண முஸ்லிம்களின் சமயப்பற்று அசைக்க முடியாதது என்பதற்குச் சமீபகால வரலாறு அளவிறந்த சான்று பகர்கிறது. துருக்கியில் முஸ்லிம் பொது மக்கள் மீது இராணுவ சர்வாதிகார ஆட்சி,மேனாட்டுக் கலாச்சாரத்தை வலுக்கட்டாயமாக திணித்தது. வாள் முனையில் அவர்கள் தம் தொப்பிகளைக் கழற்றி விட்டு அவற்றுக்குப் பதில் மேனாட்டவரின் தொப்பிகளை அணியுமாறு பணிக்கப்பட்டனர். அவர்களை ஐரோப்பியர் போல நடக்கச் செய்வதற்கு மிருகத்தனமான முறைகள் கையாளப்பட்டன.
மேனாட்டுக் கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சியை அவர்கள் எதிர்த்து நின்றபோது கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. இவ்வுபாயங்களில் எதுவும் பயனளிக்கவில்லை. உறுதியான ஒரு செடி பயங்கரப்புயல் வீசுகையில் வளைந்து கொடுத்து புயல் ஓய்ந்ததும் நிமிர்ந்து நிற்கிறது. அது போன்று துருக்கி முஸ்லிம்கள் மெள்ள மெள்ள ஆனால் உறுதியாக இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்கு மீண்டும் திரும்புகின்றனர். தீவிர சீர்திருத்தப் புயல் அடித்து ஓய்ந்ததும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை நாடித் திரும்புவதற்கான உறுதியான ஊக்கம் ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் காணப்படுகிறது.
வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.
Tuesday, November 21, 2006
இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (22)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment