Thursday, November 02, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (20)

நான்காம் கட்டம்:
விடுதலை பெற்ற பின் முஸ்லிம் நாடுகளின் நிலை.

முஸ்லிம் நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலையடைந்த பொழுது எமது வரலாற்றின் நான்காம் கட்டம் உதயமாயிற்று. இக்காலப்பிரிவை உற்று நோக்கும் போது, சோர்வூட்டும் ஒரு பரிதாபக் காட்சி நம் கண்களை சந்திக்கின்றது. இப்புது அரசுகளின் அலுவல்களை நிர்வகித்து நடாத்தும் நிலையில் இருப்போர் அத்தனை பேரும் மேனாட்டுக் கலாச்சாரத்தில் முதல் நிலைப் பற்றுடையோராயும் இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு சிறிதும் மதிப்பளிக்காதோருமாய் இருக்கக் காணப்பட்டனர்.

அவர்கள், இஸ்லாத்தின் கருத்துக்களும் கோட்பாடுகளும் தற்கால யுகத்துக்கு எவ்வகையிலும் பொருந்தமாட்டா என்ற கருத்துடையோர் ஆவர். அவர்கள் உலகாயாத வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்கள். எனவே, அந்த முன்னேற்றத்தைத் தடுக்கும் அல்லது தாமதிக்கச் செய்யும் எதையும் அவர்கள் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் வணங்கி வழிபடும் தெய்வங்கள் விஞ்ஞானமும், தொழில்நுட்பமுமாகும். ஒரு நாடு தன் வளம் அனைத்தையும் விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதன் மூலம் தான் அந்நாடு இவ்வணு யுகத்தில் பிழைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

மேனாடுகள் கட்டியெழுப்பியுள்ள கவர்ச்சிகரமான உலகாயாத நாகரிக அமைப்பில் சொக்கி மயங்கிக் கிடக்கின்றனர். ஒழுக்க ஆன்மிகப் பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு கவலையே கிடையாது. சன்மார்க்கத்துறை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. பொது மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் சமயத்தை உதட்டளவில் போற்றிப் புகழ்கின்றனர். நவீன நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கு இலட்சிய உணர்வு, சமய உணர்வு போன்றவை பெரும் தடை கற்கள் எனக் கருதுவோர் நடாத்தும் ஓர் அரசியலில், சமய உணர்ச்சியும் இலட்சியத் தாகமும் கொண்டவர்களுக்கு இடமில்லை.

அதிகாரம் அற்றவர்களான சமயப்பற்றுள்ள மக்கள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உலகாயாதத் துறையில் வளர்ச்சியடைந்து, இஸ்லாமிய இலட்சியத்திலிருந்து படிப்படியாக விலகிச் செல்லும் ஓர் அரசினைப் பார்த்துக் கொண்டு கையாலாகத-எதுவும் செய்ய முடியாத-பார்வையாளர்களாகவே இருக்க முடியும். இஸ்லாமியப் பணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஆயிரம் ஆயிரம் மக்கள் தம் இன்னுயிர்களைத் தத்தம் செய்த நாட்களைப் பற்றி அவர்கள் கவலையோடு எண்ணிப்பார்க்கின்றனர்.

மக்களை ஒன்று திரட்டுவதற்காக இஸ்லாமியக் கொடியை ஏற்றிய அதே நபர்கள், வெற்றி கிடைத்தவுடன் இஸ்லாத்துக்கு இத்தகைய பெருந்துரோகம் இழைப்பது பெரும் வஞ்சகச் செயலாகும். அல்ஜீரிய யுத்தம் முடிவடைந்து தலைவர்கள் அரசைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வரசு சமயப்பற்றற்ற சோஷலிஸ அரசாக அமையும் என அத்தலைவர்கள் கூறினர். இதே நாடகம் தான் துருக்கி, துனூசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நடாத்தப்பட்டது. ஓர் இஸ்லாமிய அரசினை தாபிப்பதாக தலைவர்கள் அளித்த வாக்குறுதி எந்த முஸ்லிம் நாட்டிலாவது நிறைவேற்றப்பட்டதுண்டா?

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

2 comments:

bala said...

இதே நாடகம் தான் துருக்கி, துனூசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நடாத்தப்பட்டது. ஓர் இஸ்லாமிய அரசினை தாபிப்பதாக தலைவர்கள் அளித்த வாக்குறுதி எந்த முஸ்லிம் நாட்டிலாவது நிறைவேற்றப்பட்டதுண்டா//

அபூ சுமையா அய்யா,

நிறைவேற்றப்பட்டதுண்டய்யா.

இந்தியாவில் அப்படிப் பட்ட வாக்குறுதியை தராமலே நிறைவேற்றியிருக்காங்க.

பாலா

ஹாஜியார் said...

//எந்த முஸ்லிம் நாட்டிலாவது நிறைவேற்றப்பட்டதுண்டா//

இந்தியாவில் அப்படிப் பட்ட வாக்குறுதியை தராமலே நிறைவேற்றியிருக்காங்க.//

இந்தியா முஸ்லிம் நாடா? இருக்கலாம் யார் கண்டது?