Sunday, January 29, 2006

இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (9)

பிளவுபட்ட தலைமை

முடியாட்சி தாபிக்கப்பட்டதினால் விளைந்த முதல் கேடு தலைமை இருகூறாகப் பிளவுபட்டமையாகும். அண்ணலாரதும் தொடக்க காலக் கலீபாக்களதும் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரே தலைமையின் கீழ் இருந்தது. மத்திய அதிகாரபீடமே யாவற்றுக்கும் மேலானதாகத் திகழ்ந்தது. ஒழுக்கம், அறிவு, சமூகம், அரசியல் முதலிய அத்தனை வாழ்க்கைத் துறைகளும் அம்மத்திய அதிகார பீடத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரான கலீபாவே மதத் தலைவராகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். அவர் மக்களின் உலகாயுத வாழ்க்கைத் துறையின் மேம்பாட்டுக்கு மட்டுமன்றி அவர்களின் ஆன்மீக உயர்வுக்கும் உழைத்தார். எல்லாவித இன்னல்கள் தோன்றும் போதும் அவரது உதவி நாடப்பட்டது. முஸ்லிம் சமுதாயம் பிரச்சினைகளை எதிர் நோக்கிய போதெல்லாம் அவரது மதியுரை பெறப்பட்டது. ஓர் ஆலோசனைச் சபை இவ்விடயங்களில் அவருக்கு உதவி புரிந்தது. ஆலோசனைச் சபை உறுப்பினர்களாக பயபக்தியும், மதிநுட்பமும் மிக்கோரே தெரிவு செய்யப்பட்டனர். எனினும் எவ்விடயத்திலும் கலீபா அவர்களது தீர்ப்பே முடிவானதாகக் கொள்ளப்பட்டது. ஒரு நிர்வாகியாகவும், நீதிபதியாகவும், மதபோதகராகவும், ஒழுக்கத்துறை வழிகாட்டியாகவும் அவர் பணியாற்றினார். குர் ஆனுக்கு அதிகார பூர்வமான விளக்கம் தரவும் அது குறிப்பிட்ட விடயங்களில் எவ்வாறு பிரயோகிக்கப் படவேண்டும் எனத் தீர்ப்பளிக்கவும் மக்கள் அவரையே எதிர்பார்த்தனர். அவர் அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தாராயினும் சாதாரண முஸ்லிம்களைக் கூடத் தமக்குச் சமமானவர்களாகவே கருதி நடத்தினார். பொதுமக்கள் அனுபவிக்காத எந்த உரிமையையும் அவர் மட்டும் அனுபவிக்கவில்லை. சமுதாயத்தின் விவகாரங்களை நடத்துவதற்கான மிக உயர்ந்த அதிகாரம் அவருக்கு அளிக்கப் பட்டிருந்தது. எனினும் அவர் சாதாரண மக்களோடும் தங்கு தடையின்றி கலந்து பழகினார். அவர் ஒரு வல்லரசின் பெருந்தலைவராயினும் அவருக்கு மெய்காப்பாளர்களோ பரிவாரங்களோ இருக்கவில்லை.

இத்தகைய கிலாபத் ஆட்சி முறையிலிருந்து பரம்பரை முடியாட்சி முறைக்கு இஸ்லாமிய சாம்ராச்சியம் மாறியமை பேரிழப்பாகும். கலீபா அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் சுதந்திரமும் அஞ்சா நெஞ்சமும் படைத்த தோழர்களின் இடத்தில் அரசரின் அடிவருடிகள் நியமிக்கப் பட்டனர். மனித கண்ணியம் மறைந்தது. அரசனின் அரசியல் அதிகாரம் எல்லையற்றதாகவும் முழுமையானதாகவும் இருந்தது. அதே வேளையில் நன்னடத்தையால் பெறப்படும் அவரது அதிகாரம் வீழ்ச்சியுற்றது. ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் திகழவில்லை என்பதை மக்கள் கண்டனர். அதனால் அவர்கள் மார்க்கத் துறை வழிகாட்டலுக்கு பிறரை நாடினர். இவ்வாறாக சன்மார்க்கத்துறை அதிகாரம் ஆலிம்கள், சூபிகள், சட்ட அறிஞர்கள் ஆகியோரின் கைக்கு மாறியது.

அரசியல் அதிகாரத்திலிருந்து சமய அதிகாரம் இவாறு பிரிக்கப்பட்டமை, முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பிளவுகளை ஏற்படுத்தியது. முற்கால கிறிஸ்தவர்கள் சிந்தித்த அதே அடிப்படையில் முஸ்லிம்களும் சிந்திக்கத் தொடங்கி, அவர்கள் அரசுக்கும் சமயத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளை வேறுபடுத்தி நோக்கினர். முஸ்லிம்களின் ஒழுக்கத்துறைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு தமக்கு இனி இல்லை எனக் கருதிய அரசர்கள் சொகுசான, இடாம்பீக வாழ்க்கை மீது தமக்கு ஏற்பட்ட ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் அதற்கு இரையாகினர். அழகுற விளங்கிய முஸ்லிம் சமுதாயத்தின் எழில் தோற்றம் மாசுபடுத்தப்பட்டது. அதன் பின்னர் அச்சமுதாயம் தனது எழிற் கோலத்தை இதுவரை மீண்டும் பெறவில்லை.

ஏனைய அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் முஸ்லிம் அரசர்களில் பெரும்பாலோர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. அவர்கள் வரிசையில் நீரோவோ கலிகுலாவோ இல்லை. உண்மையிலேயே ஒருசிலர் சிறப்புற்று விளங்கியதோடு இஸ்லாமியப் பாரம்பரியங்களின் பிரதிநிதிகளாகவும் மிழிர்ந்தனர். எனினும் முடியாட்சியின் கீழ், முஸ்லிம் சமுதாயம் தொடக்க கால முஸ்லிம் சமுதாயத்தின் உயர் மட்டத்திலிருந்து பெருமளவில் வீழ்ச்சியுற்றது. உலக வாழ்க்கையில் வெற்றியடைவதற்காக மக்கள் வெட்கமின்றி புகழ்பாடிகளாகவும் அடிவருடிகளாகவும் அடிமைக் குணம் படைத்தவர்களாகவும் மாறினர். 'பெருங்குடி மக்களின்' தீய நடத்தையோ அரசவை அதிகாரிகளின் கீழ்த்தரமான சூழ்ச்சிகளையோ எவரும் கண்டிக்கத் துணியவில்லை. இலஞ்ச ஊழலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சமூக நலன்களுக்கு முரணாக அரசர்களின் நலன்களை ஆதரித்து வளர்த்து வந்தனர். அரசர்களதும் சிறுமதி படைத்த அதிகாரிகளதும் எதேச்சதிகார ஆட்சியில் சிக்கி மக்கள் தவித்தனர். இஸ்லாம் கற்றுத்தந்திருந்த, மக்கள் அனைவரும் சமமானவர்களே என்ற சமத்துவக் கொள்கை அவர்களது உள்ளங்களிலிருந்து மங்கி மறைந்து விட்டது. முடியாட்சி உண்மையில் முஸ்லிம் சமுதாயத்தில் ஒழுக்கச் சீர்கேட்டை வளர்த்தது.

முஸ்லிம் சமுதாய வரலாற்றின் இக்கால கட்டத்தில் ஏற்பட்ட இவ்வடு இன்றும் காணப்படுகின்றது. சர்வாதிகாரம் படைத்த முடியாட்சிக்கு அடிபணிந்தமையால் ஏற்பட்ட விளைவு முஸ்லிம் சமுதாயம் தன்னம்பிக்கை இழந்ததும் இலட்சிய உணர்வு குன்றியமையுமாகும். மக்களின் ஒழுக்கச் சீர்கேடு முடியாட்சியின் தீய விளைவுகளில் ஒன்று மட்டுமேயாகும். அரசியல் அதிகாரமானது, மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் தனது ஆதிக்கத்துள் கொண்டுவர முனைகிறது. முற்றிலும் சமயத்துறை சார்ந்த விடயங்களிலும் கூட அரசாங்கம் தலையிட வெகுகாலம் செல்லவில்லை. தம் சொந்த சுயநல நோக்கங்களை அடைவதற்காக சன்மார்க்கச் சட்டங்களையும் திரித்துப் புரட்டுவதற்கான ஆசையை அரசனால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

அரசர்கள், சன்மார்க்கத்துறைகளில் தலையிடுவதைக் கண்டு ஆலிம்கள் இயல்பாகவே கலக்கமுற்றனர். சன்மார்க்கத்தின் புனித தன்மையை பாதுகாக்க அவர்கள் கங்கணங் கட்டினர். இதன் பயனாக சமயத் துறை அதிகார பீடத்துக்கும் உலகாயதத்துறை அதிகார பீடத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அத்துடன் முஸ்லிம் சமுதாயம் அதன் ஒன்றிணைந்த முழுமைத் தன்மையை இழந்து விட்டது. சமுதாய ஐக்கியம் குலைந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் விரைவிலேயே அரசனின் கை மேலோங்கிற்று. இந்த எதேச்சதிகார ஆட்சியாளன் எவ்வகையிலும் மக்களின் ஒழுக்கத்துறைக்குத் தலைமை தாங்கும் உரிமை பெற்றிருக்கவில்லை. அவரது ஒரே நோக்கம் தனது அதிகாரத்தை நிலை பெறச் செய்தலும் தனது ஆட்சியை விரிவடையச் செய்தலுமாகும்.

கலீபாக்களின் முக்கிய குறிக்கோள் இஸ்லாமிய பிரச்சாரமாகவே இருந்தது. ஆனால் முஸ்லிம் அரசர்கள் அதில் எவ்வித கரிசனையும் காட்டவில்லை. அவர்களின் கீழ் 'முஸ்லிம் அரசு இஸ்லாமியத் தூதினை உலகிற்கு எடுத்துரைக்கும் சாதனம்' என்ற நிலை ஒழிந்தது. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் பெருங்கடமை ஆலிம்களையும் சூபிகளையும் சார்ந்தது. அவர்கள் இப்பணியைத் தமக்குக் கிடைத்த சொற்ப பலத்தைக் கொண்டு தம்மாலியன்ற அளவுக்கு நிறைவேற்றினர். இஸ்லாத்தின் முன்னேற்றம் முடியாட்சியின் கீழ் பெரிதும் பாதிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாத பிரஜைகளுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதில் முஸ்லிம் அரசர்கள் அக்கறை கொள்ளாததால் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்கு வெளியில் இருப்பதிலேயே திருப்தி கண்டனர்.

பல நூற்றாண்டுகளாக இந்நாடுகளில் முஸ்லிம் ஆட்சி நிலவிய பின்னரும் இந்நாடுகளின் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம் அல்லாதோராகவே இருந்தனர். இறுதியாக, முஸ்லிமல்லாத இப்பிரஜைகள் முஸ்லிம் அரசர்களின் பிடியை அகற்றுவதில் வெற்றியடைந்த போது, முஸ்லிம்கள் அவர்களுக்கு அடிமைப்பட்டவர்களாக வேண்டியதாயிற்று. பல நூற்றாண்டுகளாகத் தம் தாயகமாகக் கொண்டிருந்த நாட்டைவிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேற வேண்டிய நிலை தோன்றியது. பிற சமயத்தவரிடையே இஸ்லாத்தை அறிமுகப்படுத்தத் தவறிய குற்றத்திற்கு பின்னொரு காலத்தில் முஸ்லிம்கள் பெருந்தண்டனையை அனுபவிக்க நேரிட்டது.

முடியாட்சியானது இஸ்லாத்திற்கு ஒவ்வாததாகும். ஆனால், அது முஸ்லிம் சமுதாயத்தில் நுழையக் காரணம், தொகை தொகையாக இஸ்லாத்தில் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தின் உண்மைப் போதனைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனமையும் அதன் மகோன்னத இலட்சியத்தை விளங்கிக் கொள்ள இயலாது போனமையுமாகும். புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு அறிவூட்டும் பணியில் முஸ்லிம் சன்மார்க்க சீலர்களோடு அரசர்களும் அவர்களின் அதிகாரிகளும் ஒத்துழைத்திருப்பின் இன்று எமது சமுதாயத்தின் நிலையே வேறுவிதமாக அமைந்திருக்கும்.

வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்

No comments: