நூலைப் பற்றி:
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் 1963 டிசம்பர் 10 ஆம் தியதி கராச்சியில் நிகழ்த்திய பேருரையின் தமிழாக்கமே இச்சிறு நூல். இலங்கை ஜமா அத்தினரால் மொழி பெயர்க்கப்பட்டு கத்தரிலுள்ள இஸ்லாமிய பிரச்சார மையத்தினர் மற்றும் குவைத்திலுள்ள உலக இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பின் துணையுடன் லபனானில் உள்ள ஹோலி குரான் பப்ளிசிங் ஹவுசினரால் வெளியிடப்பட்டது. இனி நூலின் முன்னுரையிலிருந்து சில வரிகள்.
"அல்லாஹ்வின் வேதம், அவனது தூதரின் வாழ்க்கை முறை ஆகிய இரு விஷயங்களை நான் உங்கள் மத்தியில் விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவ்விரண்டையும் பின்பற்றும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்." - ஹதீஸ்.
இவ்விரண்டையும் பின்பற்றி வாழ்ந்த போது, முஸ்லிம் சமுதாயம் அனைத்து வாழ்க்கைத்துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை நிலை நாட்டிற்று. உலக சமுதாயத்தின் தலைமைப் பீடமே முஸ்லிம் சமூகத்தை நாடி வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இரு வழிகாட்டிகளையும் முஸ்லிம் சமுதாயம் பின்னொரு காலத்தில் ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டது. அதன் விளைவாகத் தோல்வியும் வீழ்ச்சியும் வந்தடைந்தன. ஒரு சமுதாயத்தின் கடந்த காலப் போக்கே நிகழ்கால நிலையை நிர்ணயிக்கிறது. நிகழ்கால நிலை வருங்காலத்தை பாதிக்கிறது. நிகழ்கால நிலை சீராக அமையுமாயின் எதிர் காலம் சிறப்புற்று விளங்கும். இவ்வுண்மையை பேரறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் வரலாற்றினைப் பின்னணியாகக் கொண்டு தெளிவுற நிறுவியிருக்கிறார்கள்.
அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்விமான்களைக் கொண்ட கூட்டமொன்றில் மௌலானா அவர்கள் நிகழ்த்திய இவ்வுரை, முஸ்லிம் சமுதாயத்தின் வரலாற்றுப் போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது. முஸ்லிம் உலகில் "கிலாபத்" ஆட்சி அகற்றப்பட்டு, மன்னர் ஆட்சி தோற்றுவிக்கப்பட்டமையால் ஏற்பட்ட விளைவுகளும் பின்னர், அதுவும் ஒழிந்து நவீன ஆட்சி முறை ஏற்பட்டமையால் முஸ்லிம் உலகில் தோன்றியுள்ள சீர்கேடுகளையும் இவ்வுரை சுருக்கமாக விளக்குகிறது.
இன்றைய சீர்கேடுகளை அகற்றி, முஸ்லிம் சமுதாயம் மீண்டும் உயர் நிலையடைய முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பெரும் பணி பற்றியும் இவ்வுரை தெளிவுபடுத்துகிறது. முஸ்லிம் சமுதாயம் தான் இழந்த இடத்தை மீண்டும் பெறவும் அது தோற்றுவிக்கப்பட்ட பெரு நோக்கத்தை நிறைவேற்றவும் இஸ்லாம் உயிர்துடிப்புள்ளதொரு கொள்கையாக மீண்டும் இயங்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாயத்தின் நல்வாழ்வு மட்டுமன்றி, முழு மனித சமுதாயத்தினதும் நல்வாழ்வும் இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதிலேயே தங்கியுள்ளது. அத்தகையதொரு சிந்தனைக்குச் சிறந்த தூண்டுகோலாக அமைகிறது மௌலானா மௌதூதி அவர்களின் இப்பேருரை.
வளரும் - இன்ஷா அல்லாஹ் அடுத்தபதிவில்.
Monday, November 28, 2005
இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! முன்னுரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment